Published : 16 Apr 2019 08:40 PM
Last Updated : 16 Apr 2019 08:40 PM
'சின்னஞ்சிறு கிளியே' பாடல் தோல்வியால், விரக்தியான இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி ட்விட்டரில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2008-ம் ஆண்டு 'என்னை தெரியுமா' படத்தின் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அச்சு ராஜாமணி. 'மாலை பொழுதின் மயக்கத்திலே', 'அப்பாவின் மீசை', 'உறுமீன்', 'கோலி சோடா 2' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
இவருடைய இசையில் வரலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வெல்வெட் நகரம்'. இதிலிருந்து 'சின்னஞ்சிறு கிளியே' என்ற பாடல் மார்ச் 25-ம் தேதி வெளியானது. இப்பாடல் போதிய வரவேற்பைப் பெறவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
ரசிகர்களுக்காக இதுவரை கேட்டிராத வகையில் ஒரு பாடலை தருவது முக்கியமல்ல. அந்தப் பாடல் மக்களிடம் சென்றடையவில்லை என்றால் அது என் தவறா என்று தெரியவில்லை. சின்னஞ்சிறு கிளியே பாடல் கேட்டவர்கள் அனைவருக்கும் அது பிடித்தது. உங்கள் அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.
தொடர்ந்து என் மீது அன்பு செலுத்தி ஆதரித்து வரும் திங்க் மியூஸிக் இந்தியாவுக்கு நன்றி. இந்தப் பாடல் வெளிவந்ததில் எனக்கும் இயக்குநர் மனோஜுக்கும் மகிழ்ச்சி. பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு மட்டும் தான் கவனம் கிடைக்கும் என நினைக்கிறேன். ஊடகத்தில் இருக்கும் பெரும்பான்மையானவர்களுக்கு என் போன்றவர்களை ஆதரிக்க மனமோ, விருப்பமோ இருப்பதில்லை.
என்னைப் போன்றவர்கள் எப்போதும் தொடர்ந்து போட்டியிடுபவர்களாக, குறைவாக மதிப்பிடப்படுபர்களாக மட்டுமே இருப்போம். பாடலைக் கேட்டு ட்வீட் செய்த ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் நன்றி. இது மிகப்பெரிய விஷயம்.
நான் இதுவரை இது போல எப்போதும் பேசியதில்லை. ஆனால் இது அதற்கான நேரம். என்னையும், என் இசையையும் தெரிந்தவர்களுக்கு, நான் எவ்வளவு தனித்து விடப்பட்டுள்ளேன் என்பது தெரியும். நமது படைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதபோது அது வலியைத் தரும்தான். ஆனால் இது என்னை நிறுத்தாது. மாறாக என்ன இன்னும் ஊக்குவிக்கத்தான் செய்யும்.
நான் எப்போதும் எனது சிறந்த முயற்சியைத் தருகிறேன். அதை என்றும் தொடருவேன். அவ்வளவுதான்.
இவ்வாறு இசையமைப்பாளர் அஞ்சு ராஜாமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT