Last Updated : 02 Apr, 2019 02:40 PM

 

Published : 02 Apr 2019 02:40 PM
Last Updated : 02 Apr 2019 02:40 PM

சினிமா தோட்டத்தில் உதிர்ந்த பூ, மக்கள் மனதில் உதிரா பூ: மகேந்திரனுக்கு தயாரிப்பாளர் சங்கம் புகழாஞ்சலி

சினிமா தோட்டத்தில் உதிர்ந்த பூ, மக்கள் மனதில் உதிரா பூ என்று மறைந்த இயக்குநர் மகேந்திரன் குறித்து தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

மகேந்திரன் மறைவு குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ் சினிமாவின் முக்கிய பிரபல இயக்குநர்களில்  மிகவும் போற்றுதலுக்குரியவர் மகேந்திரன். அவருடைய படைப்புகளான 'முள்ளும் மலரும்', 'மெட்டி', போன்ற திரைப்படங்கள், மிகவும் உணர்ச்சிபூர்வமாகவும், ஆழமான கதையம்சம் கொண்டதாகவும், காட்சியமைப்புகள் மிகவும் அழகாகவும் இருக்கும். அதனால்தான் இன்றளவும் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டு வருகிறார் மகேந்திரன்.

குறிப்பாக, 'உதிரிப்பூக்கள்' திரைப்படம் அன்றைய காலகட்டம் அல்லது இன்றைய தலைமுறைகளிடம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் சினிமா எடுக்கவரும் இயக்குநர்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டியாய் இருக்கும்.கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அதுமட்டுமின்றி, சமீபத்தில் இயக்குநர் அல்லாமல் நடிப்பிலும் அனைவராலும் ஈர்க்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று சினிமா எனும் தோட்டத்தில் உதிர்ந்த பூ. அதேசமயம், மக்களின் மனதிலும், சினிமா கலைஞர்கள் மனதிலும் என்றுமே உதிராமல் இருக்கும் பூ. இயக்குநர் மகேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சார்பிலும், ஒட்டுமொத்தத் திரையுலகின் சார்பிலும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x