Published : 21 Apr 2019 10:32 PM
Last Updated : 21 Apr 2019 10:32 PM
ரசிகர்கள் ஒருவர் பாலாபிஷேகம் செய்த வீடியோ சர்ச்சையானதைத் தொடர்ந்து, ரசிகர்களுக்கு லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் 'காஞ்சனா 3'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இப்படத்தில் கோவைசரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, வேதிகா, ஓவியா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏப்ரல் 19-ம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், விமர்சகர்கள் பலரும் இப்படத்தை ஆதிரிக்கவில்லை. படம் வெளியான அன்று, லாரன்ஸ் ரசிகர்கள் அவருடைய கட்-அவுட்டுக்கு அபிஷேகம் செய்தனர். அதிலும் ஒருவர் க்ரேன் கொக்கில் தொங்கிக் கொண்டு, கட்-அவுட்டுக்கு அபிஷேகம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலானது.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், லாரன்ஸ் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
அன்புள்ள ரசிகர்கள், நண்பர்களுக்கு.. இதன் மூலம் உங்கள் அனைவருக்கும் தாழ்மையான வேண்டுகோளை முன்வைக்கிறேன். எனது பேனருக்கு ரசிகர் ஒருவர் கிரேனில் தொங்கியபடி பாலாபிஷேகம் செய்வதைப் பார்த்தேன். அந்த வீடியோவைப் பார்த்து எனக்கு மிகுந்த வேதனை ஏற்பட்டது.
உங்களது உயிரை பணையம் வைத்து உங்களுக்காக வீட்டில் காத்திருக்கும் உங்கள் உறவுகளின் உணர்வுகளை மதிக்காது இது போன்ற செயல் மூலம் நீங்கள் அன்பை வெளிப்படுத்த அவசியமில்லை. என் மீதான அன்பை வெளிப்படுத்த தயவு செய்து இப்படியான அபாயகரமான வேலைகளைச் செய்யாதீர்கள். இதை எப்போதும் உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒருவேளை நீங்கள் உங்கள் அன்பை என்னிடம் நிரூபிக்க வேண்டும் என விரும்பினால் பள்ளிக் கட்டணமும் புத்தகக் கட்டணமும் தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவுங்கள். வயது முதிர்ந்த பலர் உணவின்றி வாடுகின்றனர். அவர்களுக்கு உணவு அளியுங்கள். இது போன்ற செயல்கள்தான் என்னை மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்ளச் செய்யும்.
அதைவிடுத்து உயிரைப் பணையம் வைத்து நீங்கள் செய்யும் பாலாபிஷேகங்கள் என்னை நெகிழச் செய்யாது. எனது ரசிகப் பெருமக்களே இனி இதை எப்போதும் நினைவில் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
இவ்வாறு லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT