Published : 02 Apr 2019 12:22 PM
Last Updated : 02 Apr 2019 12:22 PM
எனக்குள் இன்னொரு ரஜினி இருக்கிறார் என்று காட்டியவர் இயக்குநர் மகேந்திரன் என அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் ரஜினி தெரிவித்தார்.
'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
ரஜினிகாந்த் அளித்த பல பேட்டிகளில், 'எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் மகேந்திரன்' என்று கூறியிருக்கிறார். மறைந்த மகேந்திரனின் உடலுக்கு, ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது:
எனக்கு மிக நெருங்கிய நண்பர் இயக்குநர் மகேந்திரன். எங்களுடைய நட்பு சினிமாவைத் தாண்டியது. மிகவும் ஆழமான நட்பு அது. எனக்குள் இன்னொரு ரஜினிகாந்த் இருக்கிறார் என்று காட்டியவர் இயக்குநர் மகேந்திரன்.
நடிப்பில் இன்னொரு பரிமாணத்தைச் சொல்லிக் கொடுத்தவர். 'முள்ளும் மலரும்' படம் பார்த்துவிட்டு, என்னை நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குநர் பாலசந்தர், 'உன்னை நடிகனாக அறிமுகப்படுத்தியதில் பெருமைப்படுகிறேன்' என்று கடிதம் எழுதினார். அதற்கு சொந்தக்காரர் மகேந்திரன்.
சமீபத்தில், 'பேட்ட' படப்பிடிப்பில் நீண்ட நேரம் பேசினோம். இப்போது இருக்கும் சமுதாயத்தின் மீதும், சமீபகால சினிமா மீதும், அரசியல் மீதும் அவருக்கு மிகவும் அதிருப்தி, கோபம் இருந்தது. அவர் எப்பேர்பட்ட மனிதர் என்றால், சினிமாவிலும் வாழ்க்கையிலும் ர் மற்றவர்களுக்காக சுயமரியாதையை விட்டுக்கொடுக்காதவர்.
சமீபகால இயக்குநர்கள் கூட அவரை ரோல் மாடலாக எடுத்துக் கொண்ட பெருமைக்குரியவர். தமிழ் சினிமா இருக்கும்வரை மகேந்திரன் சாருக்கென்று ஒரு இடம் இருக்கும். அவரது ஆன்மா சாந்திடைய வேண்டுகிறேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT