Last Updated : 26 Apr, 2019 10:59 AM

 

Published : 26 Apr 2019 10:59 AM
Last Updated : 26 Apr 2019 10:59 AM

பாலியல் விவகாரம்; புகைப்படக்காரர் மீது புகார் அளித்தேனா? - காஞ்சனா 3 அலெக்ஸாண்ட்ரா மறுப்பு

பாலியல் விவகாரம் தொடர்பாக புகைப்படக்காரர் மீது புகார் அளித்துள்ளதாக வெளியான செய்திக்கு 'காஞ்சனா 3' அலெக்ஸாண்ட்ரா மறுப்பு தெரிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் 'காஞ்சனா 3'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இப்படத்தில் கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, வேதிகா, ஓவியா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் 19-ம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தில் காளி (லாரன்ஸ்) கதாபாத்திரத்துக்கு நாயகியாக நடித்தவர் அலெக்ஸாண்ட்ரா. இதற்கு முன்பாக இவர் எந்தவொரு படத்திலுமே நடித்ததில்லை. மாடலாக மட்டுமே இருந்து வந்தார். 'காஞ்சனா 3' படத்துக்குப் பிறகு புகைப்படங்கள் எடுக்கும் போது, புகைப்படக்காரர் இவரிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் இதனை இவர் காவல்துறையில் புகாராகக் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. அதில், இவருக்கு திருமணமாகி குழந்தை இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.

'காஞ்சனா 3' படத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ள சமயத்தில், இச்செய்தி வெளியானதால் பரபரப்பானது. பலரும் 'காஞ்சனா 3' நடிகை காவல் நிலையத்தில் புகார் என்று செய்திகள் வெளியிட்டார்கள். தற்போது உண்மை நிலவரம் என்ன என்பதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாக வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்ததாக வெளியான செய்தி போலியானது. நான் எந்த ஒரு கவர்ச்சி போட்டோஷூட்டிலும் ஈடுபடவில்லை. என்னை யாரும் மிரட்டவில்லை. எனக்கு கணவரும் இல்லை. இப்போதைக்கு திருமணம் பற்றிய யோசனைகூட இல்லை.

ஏனெனில் என் வயது 22 மட்டுமே. நானே ஒரு குழந்தைதான். சரி, எனக்கு குழந்தைகள் உள்ளனர் என்றால் பிரசவத்துக்குப் பின்னர் ஏற்படும் தொப்பை எங்கு போனது. இந்தப் பொய்களை எல்லாம் கண்டு சிரித்து வருகிறேன்.

இந்த மோசமான குற்றச்சாட்டுகளுக்கும் எனக்கு சம்பந்தம் இல்லை. நான் லாரன்ஸ் மாஸ்டரின் உதவியுடன் பத்திரமாக இருக்கிறேன். அவர் என் குடும்பத்தைப் போன்ற உணர்வைத் தருகிறார். வீண்பழி சுமத்தும் இதுபோன்ற செய்திகளைத் தடை செய்வது நலம்''.

இவ்வாறு அலெக்ஸாண்ட்ரா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x