Published : 27 Apr 2019 06:27 PM
Last Updated : 27 Apr 2019 06:27 PM
தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தை, தமிழக அரசே ஏற்றுக் கொண்டது. இதனால், விஷால் தலைமையிலான அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் தலைமையிலான அணி நிர்வாகத்துக்கு வந்தது. அப்போது திருட்டு விசிடி ஒழிப்பு, படங்கள் வெளியீட்டுக் குழு என பல வாக்குறுதிகளை அளித்தது. அதன்படி இந்த நிர்வாகம் செயல்படவில்லை என்று எதிர்தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொண்டே இருந்தனர்.
மேலும், வைப்பு நிதியில் இருந்த 7 கோடி ரூபாயை தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகம் எடுத்து செலவழித்துவிட்டதாக எதிரணி குற்றம் சாட்டியது. இது தொடர்பாக பணம் கையாடல் புகார் ஒன்றையும் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்தனர். தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களான கே.ராஜன், எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் கையெழுத்திட்டு புகாராக அளித்தனர். இது தொடர்பான கணக்கு வழக்குகளை பொதுக்குழுவில் தான் சமர்ப்பிப்போம் என்று விஷால் அணி தெரிவித்தது.
சிக்கலை உண்டாக்கிய ‘இளையராஜா 75’ விழா
தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்ட, 'இளையராஜா 75' நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். இந்த நிகழ்ச்சி தொடர்பாக செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. தனியார் இணையதளம் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் ஜெ.சதீஷ் குமார் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், நிகழ்ச்சிகளுக்கு முன்பணம் அனைத்துமே கொடுத்துவிட்டோம் என்பதால் ஒத்திவைக்க முடியாது என்று விஷால் அணி நீதிமன்றத்தில் வாதாடியது.
‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்குத் தடைவிதிக்க முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அந்நிகழ்ச்சி தொடர்பான கணக்கு வழக்குகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியது. இதையும் விஷால் அணி முறையாகப் பின்பற்றவில்லை.
தமிழக அரசே ஏற்றது
தொடர்ச்சியாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள், கணக்கு வழக்குகளில் குளறுபடிகள் என சர்ச்சையாகி வருவதால், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பை தமிழக அரசே ஏற்றுள்ளது. இதற்கான அறிவிப்பை சங்கங்களின் பதிவாளர் வெளியிட்டுள்ளார். அதன்படி, என்.சேகர் என்ற அதிகாரியை தயாரிப்பாளர் சங்கத்துக்கு நியமித்துள்ளது தமிழக அரசு. இனிமேல் சங்கத்தின் செயல்பாடுகள் அனைத்துமே இவர் மீதான மேற்பார்வையில்தான் நடைபெறும்.
தமிழக அரசு கூறியிருக்கும் 5 முக்கியக் காரணங்கள்
* நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு, தொண்டு நிறுவனங்களுக்கு லோன் கொடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் சங்கத்தின் நிதி, கோடிக்கணக்கான ரூபாய் அளவில் தவறாகக் கையாளப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
* விதிகளுக்கு உட்பட்டு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமானது எந்த வகையான பொருத்தமான ஆவணங்களையும் வைத்துக் கொள்ளவில்லை. மேலும், சங்க அலுவலகம் மாறியதற்கான அத்தாட்சியாக முகவரி மாறுதல் குறித்த தகவலைத் தெரிவிக்கவில்லை. இது சட்டத்துக்குப் புறம்பானதாகும்.
* சங்கத்தின் நிதி முறைகேடுகளுக்கான காரணங்களாக, தாங்களாகவே இயற்றிக்கொண்ட விதிமுறைகளைக் கூறுவது அபத்தமானதாகும். அப்படியே சங்கத்தின் விதிகள் கூறியிருந்தாலும், அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பாக பொதுக்குழுவிலும் ஒப்புதல் பெறவில்லை. முறையாகப் பதிவும் செய்யவில்லை. இது, தமிழ்நாடு சங்கப்பதிவு சட்டத்தை மீறிய செயலாகும்.
* சங்கத்தின் வரவு, செலவு கணக்குகள் எதுவுமே பொதுக்குழுவிலும் ஒப்புதல் பெறவில்லை. ஆண்டுதோறும் நடத்தப்படும் கூட்டத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை அங்கீகரிக்கவில்லை.
* சங்கத்தின் நிர்வாகிகள் எவ்வித வெளிப்படைத்தன்மையின்றி, வைப்பு நிதியான 7 கோடி ரூபாயை எடுத்து இஷ்டத்துக்கு செலவு செய்துள்ளனர். சம்பளம் என்ற பெயரில் அதிகப்படியான தொகை செலவு செய்யப்பட்டுள்ளது. இது, சங்கத்தின் விதிகளுக்கே மாறுபாடாகவுள்ளது. ஆகவே, நடப்பு சங்க நிர்வாகிகள், சங்கத்தை நடத்த அனுமதிப்பது பாதுகாப்பற்றது என்று கருதுகிறோம்.
விஷால் அணிக்கு பெரும் பின்னடைவு
தயாரிப்பாளர் சங்கத்தை தமிழக அரசே ஏற்றுள்ளதால், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தில் இருக்கும் விஷால் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இனிமேல் எந்தவொரு முடிவு எடுத்தாலோ, பணம் தொடர்பான விஷயங்களோ அந்த அதிகாரிதான் எடுக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT