Published : 16 Mar 2019 04:08 PM
Last Updated : 16 Mar 2019 04:08 PM
பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்காத உச்ச நடிகர்களை வரலட்சுமி கடுமையாகச் சாடியுள்ளார்.
பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்து வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வரலட்சுமி தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார்.
தற்போது பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக அளித்துள்ள பேட்டியில் வரலட்சுமி கூறியிருப்பதாவது:
''இத்தகைய குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு அப்போதுதான் அச்சம் ஏற்படும். பாலியல் பலாத்காரங்களைத் தடுக்க மரண தண்டனையே சரியான தீர்வு. முதலில், பாலியல் குற்றங்களுக்குப் பிணை கொடுக்கக்கூடாது.
பாதிக்கப்பட்டவர்கள் கதறும் வீடியோ எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. விரக்தியை உண்டாக்குகிறது. இந்தப் பாலியல் குற்றங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் கேலிக்கூத்தாக்கப்படுகிறது. ஊடகமோ, அரசியல்வாதிகளோ இத்தகைய சர்ச்சைகளை சுயலாபத்துக்காக பயன்படுத்தக்கூடாது.
பாலியல் ரீதியாக பெண்களைத் துன்புறுத்துதல் என்பது பிறர் கவனத்துக்குப் புலப்படாமல் மறைக்கப்பட வேண்டிய விஷயமல்ல. இதனை உரக்கப் பேச வேண்டும். இது அடிப்படையில் மனித உரிமை மீறல். உச்ச நடிகர்கள் தங்கள் மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதை உணர வேண்டும். இதனை அறிந்து இத்தகைய முக்கியமான பிரச்சினைகளில் குரல் கொடுக்க வேண்டும்''.
இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT