Published : 29 Mar 2019 11:15 AM
Last Updated : 29 Mar 2019 11:15 AM
சுதா கொங்கராவின் படத்தின் பாடல்களைக் கேட்டுவிட்டு, ஜி.வி,பிரகாஷை வெகுவாகப் பாராட்டியுள்ளார் நடிகர் சூர்யா.
செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே', கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதில் முதலாவதாக மே 31-ம் தேதி 'என்.ஜி.கே' திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படத்தை தயாரித்து நடிக்கவுள்ளார் சூர்யா. இப்படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அத்தனை பாடல்களையும் முடித்துக் கொடுத்துவிட்டார். தற்போது படப்பிடிப்பு தொடங்குவதற்காக பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகன்றன.
இப்படத்தின் கதை மற்றும் பாடல்கள் என அனைத்தையும் கேட்ட சூர்யா, ஜி.வி.பிரகாஷை வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவருக்கு ஒரு பெரிய பூங்கொத்து கொடுத்து அனுப்பி அதில் "ஜிவி ப்ரோ, பாடல் கேட்டு சிலிர்த்துவிட்டேன். அட்டகாசமான பாடல்கள்" என்று தன் கைப்பட எழுதியிருக்கிறார். இதனை புகைப்படம் எடுத்து ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் என்று பலரும் ஜி.வி.பிரகாஷை குறை கூறி வந்தனர். அவர்களுக்கு 'சூர்யா - சுதா கொங்கரா' படமும், ‘அசுரன்’ படமும் பதிலளிக்கும் என்று ஜி.வி.பிரகாஷ் தரப்பு தெரிவித்தது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கப்படவுள்ளது.
மேலும், இந்தியாவில் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தியே சூர்யா நடிக்கும் படத்தை உருவாக்குகிறார் சுதா கொங்கரா. ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்திய புத்தகத்தின் உரிமை குனித் மோங்காவிடம் உள்ளது. அதனால் தான் அவர் இப்படத்தில் தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.
குனித் மோங்கா தயாரிப்பில் உருவான 'Period: End of Sentence' டாக்குமெண்டரி படம் தான் ஆஸ்கர் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT