Published : 29 Mar 2019 11:18 AM
Last Updated : 29 Mar 2019 11:18 AM
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்திருப்பது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு காட்டமாக பதிவிட்டுள்ளார்.
கோவை துடியலூர் பன்னிமடை அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன் புதூரை சேர்ந்தவரின் 7 வயது மகள் கடந்த 25-ம் தேதி மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது மாயமானார். மறுநாள் காலை சிறுமி சடலமாக மீட்கப் பட்டார்.
பிரேத பரிசோதனையின் போது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியானது. இந்தச் செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவம் தொடர்பாக துப்புக் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று போலீஸார் நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
கோவையில் 5 வயதுக் குழந்தை கொடூரமாக பல நாட்கள் பலாத்காரம் செய்யப்பட்டு பின் கொல்லப்பட்டது என் முதுகெலும்பை சில்லிட வைக்கிறது. இன்னும் எவ்வளவு நாட்கள், எவ்வளவு சம்பவங்கள்? நாம் எதற்காகக் காத்திருக்கிறோம்? 33 சதவித ஒதுக்கீடா? நாம் ஏன் இன்னும் உரக்க பேசக் கூடாது? முதலில் ஒரு உறுதியான மாற்றத்தை நம் சட்டத்தில் கொண்டு வந்து இத்தகைய மிருகங்களை கடுமையாகத் தண்டிப்போம்.
கோவை பாலியல் பலாத்கார வழக்கில் இந்து முஸ்லிம்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தப் பார்க்கும், பேசும் இந்த தோற்றவர்களைப் பார்க்க வெறுப்பாக இருக்கிறது. இந்த முகமில்லாத, திராணியில்லாத ஜீவன்கள், அவர்கள் வீட்டு குழந்தைக்கு இது நேர்ந்தாலும் இப்படியேதான் பேசுவார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பிரிவினைதான். வேறெதுவும் அவர்களுக்கு பொருட்டல்ல.
இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT