Published : 28 Mar 2019 10:52 AM
Last Updated : 28 Mar 2019 10:52 AM
52 வாரத்துல நான் இசையமைச்ச 56 படங்கள் ரிலீசாகியிருக்கு. 58 படங்கள் வரை இசையமைச்சிருக்கேன். ஒரு படத்தோட பின்னணி இசைக்கு, மூணுநாள்தான் எடுத்துக்குவேன்’’ என்று இளையராஜா தன் அனுபவங்களைத் தெரிவித்தார்.
கல்லூரிகளில், இளையராஜா 75 எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சென்னை ஐஐடியில், நடைபெற்ற இளையராஜா 75 நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து விழாவில் இளையராஜா பேசியதாவது:
1985, 1986, 1987, 1988 ஆகிய ஆண்டுகளில், நிறைய படங்களுக்கு இசையமைத்தேன். ஒரு வருடத்துக்கு 52 வாரங்கள். ஆனால் இந்த 52 வாரங்களில், 57 படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். சிலசமயங்களில், 58 படங்கள் வரை ரிலீசாகியிருக்கின்றன.
எப்படியும் ஒரு படத்தை ஐந்து முறையாவது பார்க்க நேரிடும். முதலில், இயக்குநர் எனக்குப் படத்தைப் போட்டுக் காட்டுவார். அடுத்தநாள், காலை 7 மணிக்கெல்லாம் ரிக்கார்டிங் தியேட்டருக்கு வந்துவிடுவேன். அப்போது மீண்டும் பார்த்துவிட்டு, நோட்ஸ் குறித்துக்கொள்வேன்.
அதன் பிறகு, அந்த நோட்ஸை, ஆர்கெஸ்ட்ராவுக்குக் கொடுத்துவிட்டு ரிகர்சல் பார்ப்பேன். இதையடுத்து, ஆர்கெஸ்ட்ராவும் அந்தக் காட்சியும் சரியாக பொருந்தி வந்திருக்கிறதா என்று பார்ப்பேன். சிலசமயம் அடுத்தடுத்த டேக்குகள் ஆகும்போது, இன்னும் கூடுதலாகவும் படத்தைப் பார்க்க நேரிடும்.
ஒருமுறை தீபாவளிக்கு நான் இசையமைக்க ஒப்புக்கொண்ட ஐந்து படங்களும் வருவதாக முடிவாகி இருந்தது. நாட்கள் குறைவாக இருந்தன. மூன்று ரிக்கார்டிங் தியேட்டரை புக் செய்து, மூன்று ரிக்கார்டிங்க் தியேட்டரில் மூன்று படங்கள் என முடிவு செய்து வேலை பார்த்தேன்.
இந்தத் தியேட்டரில் காட்சியைப் பார்த்து, நோட்ஸ் கொடுத்து, ஆர்கெஸ்ட்ரா டெஸ்ட்டெல்லாம் செய்துவிட்டு, எல்லாம் ஓகே என்றான பிறகு, அடுத்த தியேட்டருக்குச் சென்று அடுத்த படத்துக்கான வேலையில் நோட்ஸ் எழுதிக் கொடுத்துவிட்டு, மூன்றாவது தியேட்டருக்குச் செல்வேன். அங்கே ஒரு ரீலுக்கான வேலையைக் கொடுத்துவிட்டு, முதல் தியேட்டருக்கு வந்து அடுத்த ரீல் வேலைக்கு நோட்ஸ் எழுதுவேன். அப்போதெல்லாம் ரீல் கணக்குகள்தான். 14 ரீல்கள் ஒருபடத்துக்கு இருக்கும். மூன்று படங்களுக்கான வேலைகளையும் மூன்றே நாளில் முடித்துக் கொடுத்திருக்கிறேன்.
இதுவரை எத்தனையோ படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். ஒரு படத்துக்கான பின்னணி இசைக்காக மூன்று நாட்களுக்கு மேல் இதுவரை நான் எடுத்துக்கொண்டதே இல்லை.
இவ்வாறு இளையராஜா தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT