Published : 06 Mar 2019 12:09 PM
Last Updated : 06 Mar 2019 12:09 PM
காலம், ஒவ்வொரு காலகட்டத்திலும் அற்புதமான கலைஞர்களைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். அந்தக் கலைஞர்களைக் கொண்டு, மக்களை மகிழ்வித்தபடி இருக்கும். அப்படி தன் திறமையைக் கொண்டு, மக்களின் மனங்களைக் கொள்ளையடித்தவர்கள் எத்தனையோ பேர். அவர்களில்... தனியிடம் பிடித்தவர் கலாபவன் மணி.
கடவுளின் தேசமான கேரளம்தான் பூர்வீகம். திருச்சூர் சாலக்குடியில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்தார். ஆரம்பத்தில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தாலும், அவரின் திறமையைக் கண்டு ஏரியா மக்களும் நண்பர்களும் வியந்துதான் போனார்கள்.
கேட்ட நிமிடத்தில், எதிராளியின் குரலில் அப்படியே பேசும் திறன் பெற்றிருந்தார் கலாபவன் மணி. ஆரம்பத்தில் இவரின் பெயர் மணி ரத்னம். கொஞ்சம் கொஞ்சமாக, குழுவில் இணைந்து, பாடினார். மேடையேறி மிமிக்ரி செய்து அசத்தினார்.
இந்த மேடைத் திறமை, ஒருகட்டத்தில் திரையுலகிலும் வாய்ப்பைக் கொண்டு வந்து சேர்த்தது. கலாபவன் மணியின் வித்தியாசமான உடல்மொழி, அவரின் குரல்வளம், பாடும் திறமை, மிமிக்ரி செய்யும் ஆற்றல் என்றெல்லாம் எல்லாவிதமாகவும் மக்களைக் கவர்ந்தார்.
இதையடுத்து, அடுத்தடுத்த மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினார் கலாபவன் மணி. தமிழில் பங்கஜ் புரொடக்ஷன்ஸ் ஹென்றியின் தயாரிப்பில், பாரதியின் இயக்கத்தில் வெளியான, ‘மறுமலர்ச்சி’ படத்தில் முத்திரை பதிக்கும்படியான நடிப்பை வழங்கினார். இவருக்கு தமிழிலும் சிகப்புக் கம்பள வரவேற்பு கிடைத்தது.
பிறகு விஜயகாந்துடன் வாஞ்சிநாதன் படத்தில் நடித்து அசத்தினார். ஆனாலும் எத்தனையோ படங்கள் வந்தாலும், ‘ஜெமினி’ படத்தின் ‘தேஜா’ கேரக்டர், கலாபவன் மணியை, இன்னும் இன்னும் கொண்டாடச் செய்தது.
இவரைத் தவிர வேறு எவரும் இந்தக் கேரக்டரை எவரும் செய்யமுடியாது என்று பத்திரிகைகள் எழுதின. வில்லன் கேரக்டருக்குள், மிமிக்ரி விஷயங்களையெல்லாம் கொண்டுவந்து, மிரட்டியெடுத்திருப்பார்.
முக்கியமாக, மலையாளப் படத்தில் இவர் நடித்த அந்தப் பார்வையற்ற கதாபாத்திரம் எல்லோராலும் பேசப்பட்டது. ‘வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும்’ படத்துக்காக, விருதுகள் பலவும் வரிசைகட்டி இவரிடம் வந்தன. இந்தப் படம்தான், விக்ரம் நடிப்பில் வெளியான ‘காசி’ என்பது தெரியும்தானே!
அதன் பின்னர், விஜய்யுடன் ‘புதிய கீதை’ படத்தில் வலுவான வில்லன் கதாபாத்திரம் அமைந்தது கலாபவன் மணிக்கு. ஹரியின் இயக்கத்தில் ‘ஆறு’ படத்திலும் ‘வேல்’ படத்திலும் அட்டகாசமான கதாபாத்திரங்கள் அமைந்தன. இரண்டு படங்களிலுமே நடிப்பில் வெளுத்துக்கட்டினார் கலாபவன் மணி.
அதேபோல், ஷங்கரின் ’அந்நியன்’ படத்திலும் ‘எந்திரன்’ படத்திலும் மறக்கமுடியாத நடிப்பை வழங்கினார்.
'பாபநாசம்’ படத்தில், கமலைப் பிடிக்காத அந்த போலீஸ் கேரக்டரில், மிகச்சிறந்த நடிப்பை வழங்கி அசத்தியிருந்தார்.
கேரளா மட்டுமின்றி மும்பை, துபாய் என்று எங்கு மேடையேறினாலும் கலாபவன் மணிக்காகக் காத்திருப்பார்கள் ரசிகர்கள். அவர் வந்ததும், அப்படியொரு ஆர்ப்பரிப்பை வழங்குவார்கள். அவர் பாட ஆரம்பித்ததும் அமைதியாகி ரசிப்பார்கள். நடுநடுவே மிமிக்ரி செய்யும்போது, எழுந்து நின்று கைத்தட்டுவார்கள். அந்தக் கைத்தட்டலும் விசில்சத்தமும் அடங்க வெகுநேரமாகின!
2016ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி அன்று உடல்நலக்குறைபாடு காரணமாக இறந்தார். ஆனால், கலைஞனுக்கு மரணமோ முற்றுப்புள்ளியோ இல்லை. மகா கலைஞனான கலாபவன் மணிக்கும்தான்!
இன்னும் எவ்வளவு காலமானாலும் ரசிக மனங்களில் கடந்து நின்றிருப்பார் கலாபவன் மணி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT