Published : 19 Mar 2019 07:42 PM
Last Updated : 19 Mar 2019 07:42 PM
'என்னுடைய அம்மா, எங்கிட்ட தயங்கித் தயங்கி பணம் கேட்டாங்க' என்று இளையராஜா அந்தச் சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தமிழகத்தின் பல கல்லூரிகளிலும் இளையராஜா 75 எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் இளையராஜா கலந்துகொண்டு, மாணவ மாணவிகளிடம் உரையாடி வருகிறார்.
சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் சமீபத்தில் இளையராஜா 75 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இளையராஜாவுக்கு மாணவிகள் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தார்கள். நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியும் பறை இசை முழங்கியும் நடனமாடியும் வரவேற்றனர்.
இதையடுத்து இளையராஜா, நிறையப் பாடல்களைப் பாடினார். மாணவிகளின் விருப்பத்திற்கு இணங்கவும் பல பாடல்களைப் பாடினார். இடையே மாணவிகளின் கேள்விகளுக்கும் பதிலளித்தார் இளையராஜா.
அப்போது மாணவி ஒருவர், ''உங்கள் அம்மா பற்றிக் கூறுங்கள் ஐயா'' என்று கேட்டுக்கொண்டார்.
''என் அம்மாவைப் போல உலகத்துல ஒரு அம்மாவைப் பாக்கவே முடியாது. சென்னைக்குப் போறதுக்காக, ரேடியோவை வித்து எங்களுக்கு 400 ரூபா கொடுத்தாங்க. அதுல ஒரு அம்பது ரூபா கூட அவங்களுக்குக் கொடுக்கல. அவங்களும் கேக்கல.
அதுக்குப் பிறகு, சென்னைக்கு வந்து, சினிமாவுக்குள்ளே வந்து, லட்சம் லட்சமா சம்பாதிச்சேன். என் மனைவிதான், என்னுடைய அம்மாவை நல்லவிதமாப் பாத்துக்கிட்டாங்க. நான் எங்க அம்மாவைப் பாத்துக்கவே இல்ல. ஒரு தோடு, ஒரு செயின், ஒரு வளையல், ஒரு புடவைன்னு எதுவுமே நான் வாங்கிக் கொடுத்ததே இல்ல.
ஒருநாள்... அம்மா, எங்கிட்ட வந்தாங்க. 'ஏம்பா... கொஞ்சம்... பணம்... வேணும்' னு தயங்கித் தயங்கிச் சொன்னாங்க. எனக்கு ஆச்சர்யமாவும் சிரிப்பாவும் இருந்தது. இதுவரை இப்படி பணமெல்லாம் எங்கிட்ட கேட்டதே இல்ல அம்மா.
'என்னம்மா இது. உனக்கும் எனக்கும் பணமெல்லாம் எதுக்கும்மா'ன்னு கிண்டல் பண்ணினேன். 'இல்லப்பா... கொஞ்சம் தேவை... அதான்' அப்படின்னு இழுத்தாங்க.
அம்மா நம்மகிட்ட பெரிய தொகையா கேக்கப் போறாங்க. லட்சக்கணக்குல கேக்கப்போறாங்கன்னு நினைச்சிக்கிட்டே, 'சரிம்மா, எவ்ளோ வேணும்மா'ன்னு கேட்டேன். 'ஒரு ரெண்டாயிரம் ரூபா வேணும்பா' அப்படின்னாங்க. ஒரு ரெண்டாயிரம் ரூபாய்க்கு அவ்ளோ தயங்கினாங்க.
உடனே நானும்... 'என்னம்மா... ரெண்டாயிரம் ரூபாயா? இவ்ளோ பெரிய தொகையா? புரட்டித்தான் தரணும்மா'ன்னு கிண்டலாச் சொன்னேன். உடனே அம்மா பதறிட்டாங்க. 'சிரமப்படாதே ராசா'ன்னு சொன்னாங்க. அப்படியே அம்மாவை அணைச்சுக்கிட்டேன். அவங்க கேட்ட ரெண்டாயிரம் ரூபாயைக் கொடுத்தேன். இதுதான் என் அம்மாவுக்கு நானே என் கையால கொடுத்த காசு''.
இவ்வாறு நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் இளையராஜா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT