Last Updated : 04 Mar, 2019 01:13 PM

 

Published : 04 Mar 2019 01:13 PM
Last Updated : 04 Mar 2019 01:13 PM

வளரவிடாமல் தடுப்பது தான் கலாச்சார சீர்கேடு: 90 எம்.எல் சர்ச்சை குறித்து சிம்பு ஆவேசம்

வளரவிடாமல் தடுப்பது தான் கலாச்சார சீர்கேடு என்று '90 எம்.எல்' சர்ச்சை குறித்து சிம்பு ஆவேசமாகக் கூறினார்.

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள படம் '90 எம்.எல்'. தணிக்கையில் 'ஏ' சான்றிதழ் கிடைத்துள்ள இப்படத்துக்கு சிம்பு இசையமைத்துள்ளார். பிப்ரவரி 1-ம் தேதி வெளியான இப்படம் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது.

இப்படத்தின் ட்ரெய்லர், Sneak Peek வீடியோக்கள் உள்ளிட்டவை ஆபாசமாகவும், இரட்டை அர்த்த வசனம் கொண்டதாகவும் இருந்ததற்கு சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது பல்வேறு விமர்சகர்கள் இப்படத்தை கடுமையாக சாடியுள்ள நிலையில், இசையமைப்பாளர் சிம்புவிடம் இது குறித்துக் கேட்டதற்கு அவர் கூறியதாவது:

''முதல் முறையாக பெண்களுக்கான கதையில், ஆண்களை இழிவுபடுத்தியே காட்டிய இந்த சினிமாவில், ஆண்களை இழிவுபடுத்தாமல் பெண் சுதந்திரத்தைப் பற்றி இக்கதையை எழுதியுள்ளார் அனிதா உதீப். அதற்காகவே இப்படத்தை ஒப்புக் கொண்டேன்.

இக்கதையைக் கேட்டவுடன், ஆண்களை இழிவுபடுத்தாமல் திரைக்கதை அமைத்துள்ளீர்கள். அதற்காகவே இப்படம் பண்ணுகிறேன் என்று இயக்குநரிடம் சொன்னேன். '90 எம்.எல்' படத்தின் வெற்றி, பெண்களுடைய வெற்றி.

கலாச்சார சீர்கேடு என்று கூறி, பெண்களை இழிவுபடுத்துகிற ஆண்கள் இருக்கக்கூடிய இந்த சமூகத்தில் இப்படத்தைப் பார்த்து பெண் சுதந்திரத்துக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. பெண் இயக்குநர் இயக்கிய படத்தில் ஒரு ஆணைக் கூட தவறாகக் காட்டவில்லை. ஆண்களை அவ்வளவு மரியாதையாகக் காட்டி படம் இயக்கியுள்ளார்.

’90 எம்.எல்’ படத்தில் ஒரு அங்கமாக இருந்ததில் எனக்கு பெருமை தான். பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறவர்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள். அதற்கெல்லாம் எதிர்வினையாற்றாதீர்கள். அனைத்தையும் மீறி இப்படத்தை பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

நாம்தான் அடுத்த சமுதாயம். கலாச்சாரம் சீரழியாது. அடுத்த சமுதாயத்துக்கு வழிவிடுவது தான் உண்மையான கலாச்சாரம். அந்தப் புரிதல் இருக்க வேண்டும். அதை வளரவிடாமல் தடுப்பது தான் கலாச்சார சீர்கேடு.

பெண்களுக்கு எதிரானவன் என்று அனைவரும் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டார்கள். அதற்காகவே இப்படத்துக்கு சப்போர்ட் பண்ணி இசையமைத்தேன். அதில் வந்த எதிர்ப்பை எல்லாம் மீறி, ஒரு பெண்ணாக நின்று வெற்றி கண்ட ஓவியா மற்றும் இயக்குநர் அனிதா உதீப் ஆகியோருக்கு வாழ்த்துகள். இப்படத்தில் நடித்த மற்ற பெண்களுக்கும் வாழ்த்துகள்.

ஆண்களை இழிவுபடுத்தி பெண் சுதந்திரம் என்று கூறாமல், என்ன உண்டோ அதைப் பேசிய இயக்குநர் அனிதா உதீப்புக்கு ஸ்பெஷல் நன்றி. இதை ஒப்புக் கொண்ட ஆண்மகன்களுக்கு நன்றி''.

இவ்வாறு சிம்பு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x