Published : 29 Mar 2019 03:25 PM
Last Updated : 29 Mar 2019 03:25 PM
வாழ்க்கையில், ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான தவறைச் செய்யத்தான் செய்கிறார்கள். அப்படித் தவறு செய்தவர்கள், ஒருகட்டத்தில் உணர்ந்து, தெளிந்து, திருந்தியும் விடுகிறார்கள். அப்படித் திருந்தியவர்களை இந்தச் சமூகமும் வீடும் ஏற்றுக் கொள்வதே இல்லை. அதுமட்டுமா? யாரேனும் தவறு செய்தால் கூட, ‘இதை இவன் செய்திருப்பான்’ என்று முடிவுக்கு வந்துவிடுவார்கள். இந்த வாழ்வியலை காதலுடனும் தாம்பத்யத்துடனும் பின்னிப்பிணைந்து, உணர்வுபூர்வமாகச் சொல்லப்பட்டதுதான் ‘இருவர் உள்ளம்’.
பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான எல்.வி.பிரசாத் இயக்கத்தில், கலைஞர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுத, சிவாஜி, சரோஜாதேவி, ரங்காராவ், சந்தியா, டி.ஆர்.ராமச்சந்திரன், எம்.ஆர்.ராதா முதலானோர் நடித்த, முத்தான படம்தான் ‘இருவர் உள்ளம்’.
செல்வம்... சிவாஜியின் பெயர். பணத்தில்தான் செல்வம். ஆனால் குணத்தில் அப்படியில்லை. பல பெண்களுடன் பழக்கம். கல்யாணத்தின் மீது ஈடுபாடற்ற நிலை என காமத்துடன் திரிகிறார். அப்படிப்பட்ட சூழலில்,செல்வத்துடன் பழகிய வசந்தி, செல்வத்தின் தந்தைக்கு ‘என்னை ஏற்கமாட்டேன் என்கிறார்’ என்று கடிதம் எழுதுகிறார். இதையடுத்து செல்வத்தின் மாமா, பெங்களூரு வந்து சிவாஜியைப் பார்க்கிறார். வசந்திக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து, செட்டில் பண்ணுகிறார்.
இதன் பிறகு மெடிக்கலுக்குப் படித்துக்கொண்டிருந்த செல்வம், படிப்பை நிறுத்திவிட்டு, சென்னைக்கு வந்துவிடுகிறார். மாமாவின் கம்பெனியை நிர்வகித்து வரும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். அந்த சமயத்தில்தான் சாலையில், சரோஜாதேவியைப் பார்க்கிறார். படத்தில் அவரின் பெயர் சாந்தா.
ஆனால், சிவாஜியின் பழக்கவழக்கங்களெல்லாம் பார்த்து முகம் சுளிக்கிறார் சரோஜாதேவி. ஆனால் சரோஜாதேவியைப் பார்த்து மனம் மாறுகிறார். குணம் மாறுகிறார். திருந்தி வாழ நினைக்கிறார். ஆனால் சிவாஜியை அடியோடு வெறுக்கிறார் சரோஜாதேவி.
ஒருகட்டத்தில், சிவாஜியின் சின்னத்தங்கைக்கு டியூஷன் எடுக்க வீட்டுக்கு வருகிறார். அப்போது ஒரு சூழலில், திருமணம் வரை பிரச்சினை போகிறது. இருவருக்கும் திருமணம் நடக்கிறது. அப்பா ரங்காராவ் அரசு வக்கீல். அண்ணன் எம்.ஆர்.ராதா வக்கீல். வசந்தி என்பவள், இன்சூரன்ஸில் வேலை செய்யும் டி.ஆர்.ராமச்சந்திரனை மணந்துகொள்கிறார். ஆனால் மைனர் மாணிக்கம் என்கிற கே.பாலாஜியிடம் மனதைப் பறிகொடுக்கிறார். பணமே பிரதானம் என வாழ்பவள் அவள்.
சிவாஜியும் சரோஜாதேவியும் கன்யாகுமரிக்கு வேண்டுதலுக்காகச் செல்கின்றனர். வேண்டாவெறுப்பாகச் சென்ற நிலையில், ஏதோவொரு உணர்வு, சிவாஜி மீது ஓர் பிரியம் பிறக்கிறது சரோஜாதேவிக்கு. அதேசமயம், டிஆர்.ராமச்சந்திரனும் வசந்தியும் அங்கே வருகின்றனர். சிவாஜிக்கும் சரோஜாதேவிக்கும் டார்ச்சர் கொடுக்கிறார். ‘நீதானே என்னை கன்யாகுமரிக்கு வரச்சொன்னே’ என்று பொய் சொல்ல, அதை நம்பிய சரோஜாதேவி மயங்கிச் சரிகிறார். விஷ ஜூரத்தில் தவிக்கிறார்.
அப்போது அவரை கண்ணும்கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறார் சிவாஜி. இந்த சமயத்தில், வேலை விஷயமாக டெல்லிக்குப் போகும் சூழல். அந்த நாலுநாளும், சிவாஜியை உணர்ந்து, அவரின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் சரோஜாதேவி.
இந்த தருணத்தில், டிஆர்.ராமச்சந்திரன் வேலை விஷயமாக வெளியூர் செல்லக் கிளம்புகிறார். அப்போது கடிதம் ஒன்றைப் பார்க்கிறார். அது வசந்திக்கு மைனர் மாணிக்கம் எழுதிய கடிதம். ‘உன் கணவர் எப்போது கிளம்பிச் செல்வார் என்று காத்திருக்கிறேன்’ என எழுதியிருப்பதைப் படித்து, உஷ்ணமாவார். வெளியூர் போவதாகக் கிளம்பிவிட்டு, உள்ளூரில் ஒரு லாட்ஜில் தங்குவார்.
வசந்திக்கு, சிவாஜிக்கும் பாலாஜிக்கும் உள்ள நட்பு தெரியவரும். அப்போது சிவாஜிக்கு போன் செய்து, பாலாஜி ரொம்ப முடியாமல் இருப்பதாக வேலைக்காரப் பெண் பேசுவது போல் பேசி அழைப்பார் வசந்தி.
சிவாஜி வருவார். வசந்தியைப் பார்ப்பார். பணம்தானே வேணும் என்று பர்ஸைத் தூக்கிப் போடுவார். அங்கிருந்து கிளம்பிச் செல்லுவார். மாடியில் இருந்து இறங்கும்போது வசந்தியின் அலறல் சத்தம் கேட்கும்.
வீட்டுக்கு வந்த சிவாஜியுடன் இனிமையாகப் பேசும் சரோஜாதேவி மன்னிப்பு கேட்பார். இருவரும் சந்தோஷமாக இருக்கும் வேளையில், போலீஸ் வரும். வசந்தியைக் கொலை செய்த குற்றத்திற்காக சிவாஜியைக் கைது செய்யும்.
அரசு வக்கீலான அப்பா, கொலைக்கு தண்டனை வாங்கித்தர முயற்சி செய்வார். வக்கீல் அண்ணன், தம்பியைக் காப்பாற்றப் போராடுவார். சரோஜாதேவி கணவனை முழுசாக நம்புவார்.
கோர்ட், வழக்கு, வாக்குவாதம், உணர்வுபூர்வமான வசனங்கள். இறுதியில், டிஆர்.ராமச்சந்திரனே கொலையாளி என்பதை சரோஜாதேவி நிரூபிப்பார். போலீஸ் கைது செய்யும். சிவாஜி விடுதலை செய்யப்படுவார். குடும்பத்தில் பழைய நிம்மதி தவழத் தொடங்கும்.
இதுதான் ‘இருவர் உள்ளம்’ படம். சிவாஜியின் இயல்பான நடிப்பு படத்துக்கு மிகப்பெரிய பலம். அதேபோல் கலைஞரின் குறும்பும்குசும்பும் கலந்த நகைச்சுவையுடன் கூடிய வசனங்கள் அற்புதம். ரங்காராவ், எம்.ஆர்.ராதா நடிப்பு அபாரம். இந்தப் படத்தில் சிவாஜியின் அம்மாவாக, ரங்காராவின் மனைவியாக ஜெயலலிதாவின் அம்மா சந்தியா நடித்திருப்பார். அநேகமாக, அவரின் முகமும் நடிப்பும் பரிச்சயமான படங்களில் இது முக்கியமான படம். எழுத்தாளர் லக்ஷ்மியின் நாவல், மிக அழகாக கலைஞரின் திரைக்கதை வசனத்தால் பொலிவூட்டப்பட்டிருக்கும்.
எம்.ஆர்.ராதாவின் மனைவி முத்துலட்சுமி, காது கேட்காதவராக நடித்திருப்பார். ஆனால் அதைவைத்துக்கொண்டே அச்சுப்பிச்சு காமெடியெல்லாம் செய்யாமல் கதையை நகர்த்தியிருப்பார் இயக்குநர் எல்.வி.பிரசாத் (கமலின் ‘ராஜபார்வை’ தாத்தாதான் இந்த எல்.வி.பிரசாத், தெரியும்தானே!).
கே.வி.மகாதேவன் இசை. கண்ணதாசன் பாடல்கள். எல்லாப் பாடல்களும் செம ஹிட்டு. கேட்டுக்கொண்டே இருக்கலாம். பறவைகள் பலவிதம், புத்திசிகாமணி பெத்தபுள்ள, கண்ணெதிரே தோன்றினாள், இதயவீணை தூங்கும்போது பாடமுடியுமா, அழகு சிரிக்கிறது ஆசை துடிக்கிறது, ஏன் அழுதாய் ஏன் அழுதாய்?, கண்ணே கண்ணே உறங்காதே, நதி எங்கே போகிறது கடலைத்தேடி... என்று அனைத்துப் பாடல்களும் மா, பலா, வாழை என சுவையைக் கொடுக்கிற கனியெனத் தித்தித்துக்கொண்டே இருக்கும்.
சரோஜாதேவி. எம்ஜிஆருடன் நிறைய படங்களில் நடித்தவர்தான் என்றாலும் சிவாஜியுடன் இவர் நடித்த அத்தனை படங்களிலும் சரோஜாதேவியின் நடிப்பு, மிகச்சிறந்த முறையில் இருக்கும். அவரின் கேரக்டர், நடிப்பு, வசன உச்சரிப்பு என ஒவ்வொன்றிலும் மெருகேறியிருக்கும். இந்தப் படத்திலும் சாந்தா எனும் கேரக்டராகவே மாறியிருப்பார் சரோஜாதேவி.
சிவாஜி கணேசனின் மிகச்சிறந்த படங்களின் பட்டியலில் இதுவும் ஒன்று. இருவர் உள்ளம் அன்றைக்கு ரிலீசான போது மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல் எண்பதுகளில், புத்தம்புதிய காப்பி என்று மீண்டும் திரையிட்ட போது, தியேட்டரில் புதுப்படம் வெளியாகி ஓடுவது போல், ஏழு வாரம் ஒன்பது வாரம் என்று ஓடியது. அதுமட்டுமா? அந்தத் தியேட்டர் முடிந்து, வேறொரு தியேட்டருக்கு வந்த போது, இணைந்த 61வது நாள் எனும் போஸ்டர்களைப் பார்க்கமுடிந்தது.
1963ம் ஆண்டு ‘இருவர் உள்ளம்’ வெளியானது. அதாவது 1963ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி, இந்தப் படம் ரிலீசானது. ஆமாம்... இன்று ‘இருவர் உள்ளம்’ ரிலீஸ் நாள். அதாவது படம் வெளியாகி 56 வருடங்களாகிவிட்டன. ஆனால். ‘வாழ்க்கையில் தப்பு செய்வது சகஜம். திருந்தி வாழ்வதே முக்கியம் என்பதையும் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கைகோர்த்துக்கொண்டால், நல்லவனைக் கூட கெட்டவன் என்று இந்த உலகம் நம்பத்தான் செய்யும் என்பதையும் அப்போதே பொளேரெனச் சொன்ன படம் ‘இருவர் உள்ளம்’.
எழுத்தாளர் லக்ஷ்மி, கலைஞர், சிவாஜி, சரோஜாதேவி, எல்.வி.பிரசாத், கே.வி.மகாதேவன், கண்ணதாசன் கூட்டணிக்கு ‘ஜே’ போடுவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT