Last Updated : 15 Mar, 2019 03:57 PM

 

Published : 15 Mar 2019 03:57 PM
Last Updated : 15 Mar 2019 03:57 PM

இளையராஜா மாதிரி இசையமைக்க ஆளே இல்லை!’ - நெகிழ்ந்து அழுத எஸ்.பி.பி

’இளையராஜா எப்போதுமே சம்திங் ஸ்பெஷல். அவர் மாதிரி இசையமைக்க ஆளே இல்லை. அவருக்கு எத்தனை முறை தேசிய விருதுகள் கொடுத்தாலும் தகும்’ என பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தனியார் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

இதில், ’ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ என்கிற ‘நினைவெல்லாம் நித்யா’ பாடலை சிறுவன் வெகு அழகாகப் பாடி அசத்தினான்.

அந்தப் பாடல் பாடி முடித்த போது, நெக்குருகி அழுதேவிட்டார் எஸ்.பி.பி.

அப்போது எஸ்.பி.பி. பேசியதாவது:

சில விஷயங்களை மனம் விட்டுச் சொல்லவேண்டும். அது எத்தனை முறையாக இருந்தாலும் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். அப்படிச் சொல்லவில்லையெனில் அவன் கலைஞனே கிடையாது.

நானும் ஒரு மியூஸிஸியன்தான். ஆகவே நுணுக்கங்களை என்னால் அறிய முடியும். 'என்ன இவரு... எப்பப் பாத்தாலும் இளையராஜாவைப் புகழ்ந்து பேசிக்கிட்டே இருக்காரு’ என்று சிலர் நினைக்கலாம். எம்.எஸ்.வியைப் பற்றியும் அதிகம் பேசியிருக்கிறேன்.

ஒரு சம்திங் ஸ்பெஷல் இளையராஜாவிடம் எப்போதுமே உண்டு. அதைச் சொல்லாமல் போனால், பாராட்டாமல் இருந்தால், அதுவே ஒரு ஆதங்கமாகிவிடும். நோயாகிவிடும். நாம் நோயாளியாகிவிடுவோம். ’நினைவெல்லாம் நித்யா’ படத்தில் வந்த ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ பாடலை இப்போதும் கேட்டிருப்பீர்கள். என்ன கம்போஸிங் கவனித்தீர்களா? ஒவ்வொரு வார்த்தைகளிலும் அப்படியொரு சங்கதியை, சின்னச்சின்ன சங்கதியைப் போட்டிருப்பார். ஒவ்வொரு இசைக்கருவியின் நுணுக்கங்களை அழகாகக் கையாண்டிருப்பார். இப்படியொரு இசையை இளையராஜாவைத் தவிர, வேறு யாராவது கம்போஸ் செய்திருக்கிறார் என்று நீங்களே சொல்லுங்கள்.

பாடலின் ஒவ்வொரு வரிகளிலும் சின்னச்சின்ன சங்கதிகள் போட்டிருப்பார் இளையராஜா. அவையெல்லாம் இளையராஜாவுக்கு மட்டுமே தனி ஸ்பெஷல். இதையெல்லாம் பார்க்கும் போது, இளையராஜாவுக்கு எத்தனை முறை தேசிய விருது கொடுத்திருக்கவேண்டும் என யோசித்துப் பாருங்கள்.

இளையராஜா, இன்னும் பல சாதனைகள் புரியவேண்டும். இன்னும் இன்னும் பல இசைகளைத் தரவேண்டும். இளையராஜா நீடூழி வாழவேண்டும்.

இவ்வாறு எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x