Published : 23 Mar 2019 07:18 PM
Last Updated : 23 Mar 2019 07:18 PM

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுடன் தொடர்ந்து 2டி நிறுவனம் பயணிக்கும்: சூர்யா

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுடன் தொடர்ந்து 2டி நிறுவனம் பயணிக்கும் என சூர்யா தெரிவித்துள்ளார்.

விஜய் குமார் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் ‘உறியடி 2’. சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இதன் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா இன்று (மார்ச் 23) நடைபெற்றது.

அதில் பேசிய சூர்யா, “நான் நடிக்கும் படத்தின் வெளியீடு தாமதமாகிக் கொண்டே போனாலும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உங்களைச் சந்திப்பது சந்தோஷமாக இருக்கிறது. கேரளாவில் நடைபெற்ற ஒரு விழாவிற்குச் சென்றிருந்தேன். அங்குதான் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவைச் சந்தித்தேன். அவருடைய இசையையும் வீடியோவையும் பார்த்தேன். அதில் ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆனால், அவர் இவ்வளவு தெளிவாகப் பேசியது எனை ஈர்த்தது.

‘இந்தப் படம் உங்களை என்டெர்டெயின் பண்ணாது. ஆனால், டிஸ்டர்ப் பண்ணும்’ என்று படத்தைப் பற்றி அவர் சொன்ன வார்த்தைகள், தெளிவாகவும் தீர்க்கமாகவும் இருந்தன. இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுடன் தொடர்ந்து 2டி நிறுவனம் பயணிக்கும். அத்துடன், எங்கள் நிறுவனத்தில் முதன்முதலாக அவர் இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறார். அதுவும் எங்களுக்கு சந்தோஷமே.

இங்கு வந்தவுடன் ஒரு தொழில்நுட்பக் கலைஞர் என்னிடம், ‘நீங்கள் ‘காக்க காக்க’ படத்தில் நடிக்கும்போது, நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் சார் ’ என்று சொன்னபோது, என்னுள் நாம் சீனியராகி விட்டோமா? என்ற எண்ணம் எழுந்தது. இதுவரை திரையில் நான் என்ன செய்தேனோ, அவை எல்லாம் இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கற்பனையில் உருவானது.

எங்களுக்கான அடையாளம், இமேஜ் இதெல்லாம் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் தான் நடந்தது. அவர்களுடைய வேலையில் குறுக்கீடு செய்யவும், ஆலோசனை செய்யவும், என்னை நான் தகுதிப்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன். அது தேவையற்றது என்றும் நினைக்கிறேன். ஆனால், நல்ல விஷயங்களை ரசிக்கப் பிடிக்கும். நல்ல விசயங்களுக்குத் துணையாக உடன் நிற்கப் பிடிக்கும். எனக்கான நிலையிலிருந்து, என்ன வகையான உதவிகளைச் செய்ய முடியுமோ, அதைத்தான் இந்தப் படத்துக்குச் செய்திருக்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x