Published : 02 Mar 2019 03:50 PM
Last Updated : 02 Mar 2019 03:50 PM
'எல்.கே.ஜி' உருவாகக் காரணமாக இருந்தவர் அதர்வா என்று 'பூமராங்' பத்திரிகையாளர் சந்திப்பில் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்தார்.
மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்கியுள்ள படம் 'பூமராங்'. அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் மார்ச் 8-ம் தேதி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.
இதனை முன்னிட்டு சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. அதில் ஆர்.ஜே.பாலாஜி பேசியதாவது:
நான் நடிச்சு வெளியான 'எல்.கே.ஜி' படம் உருவானது 'பூமராங்' படப்பிடிப்பில் தான். இப்படத்தில் இருக்கும் பலர், அப்படம் உருவாக காரணமாக இருந்தார்கள். அனைத்துமே சரியாக இருந்தால் மட்டுமே படமாக்குவேன் என்பவர்கள் மத்தியில், என்ன இருக்கோ அதை வைத்து கச்சிதமாக படமாக்குபவர் இயக்குநர் கண்ணன்.
'எல்.கே.ஜி' மாதிரியான ஒரு படத்தை எழுத, எனக்குள் எண்ணத்தை உருவாக்கியவர் அதர்வா தான். ஒரு நாயகனாக இருந்தாலும், இன்னொருவரை ஏன் உசுப்பேத்திக் கொண்டு என நினைக்காமல், என்னை எழுத ஊக்குவித்தார். இதன் பலனாக அவருக்கே நான் ஒரு கதை சொல்லியுள்ளேன். அப்படம் 2023, 2024-ல் நடக்கும் என நினைக்கிறேன். இப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் பண்ணியிருக்கார். அதற்காக உடல்மொழியில் தொடங்கி டப்பிங் குரல் மாற்றம் வரை கச்சிதமாக செய்துள்ளார் அதர்வா.
தமிழ் சினிமாவில் நான் பணிபுரிந்த இயக்குநர்களில் எனக்கு ரொம்ப பிடித்தவர் இயக்குநர் கண்ணன் சார் தான். மோதலிலிருந்து தான் காதல் ஆரம்பிக்கும் என்று சொல்வார்கள். அப்படித் தான் அவர் எடுத்த ஒரு படத்துக்கு நான் விமர்சனம் பண்ணியிருந்தேன். அதற்கு எனக்கு தொலைபேசியில் 40 நிமிடங்கள் பேசினார். ரொம்ப இனிமையாக இருந்தது. அந்தளவுக்கு திட்டினார்.
நான் படங்களில் நடிக்கத் தொடங்கியவுடம், 'இவன் தந்திரன்' கதையோடு என்னிடம் வந்தார். அப்போது தான் இவரையா தப்பாக நினைத்துவிட்டோம் என எண்ணினேன். அப்படத்தில் சில காட்சிகளை மாற்றலாம் என்று சொன்ன போது, எப்படி என்று கேட்டு வாங்கி படத்தில் முக்கியமான இடத்தில் வைத்தார். அதற்கான க்ரெடிட்டும் கொடுத்தார். அப்போது தான் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் வந்தது.
'பூமராங்' ஒரு சமூக அக்கறையுள்ள படம். 30 - 40 வருடங்களாக இருக்கும் நதிநீர் பிரச்சினையைப் பற்றியும், அப்பிரச்சினைத் தீர்ந்தால் விவசாயிகள் நிலை எப்படியிருக்கும் என்றும் ரொம்ப ஆய்வு செய்து இக்கதையை எழுதியிருக்கார். சும்மா ஏனோ, தானோ என்பது மாதிரியான படம் 'பூமராங்' அல்ல.
இவ்வாறு ஆர்.ஜே.பாலாஜி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT