Last Updated : 17 Mar, 2019 01:32 PM

 

Published : 17 Mar 2019 01:32 PM
Last Updated : 17 Mar 2019 01:32 PM

’ராத்திரியில் பூத்திருக்கும்...’ ; ‘மாங்குயிலே பூங்குயிலே...’; இசையே ஏமாற்றுவேலைதான்’ - ரகசியம் உடைத்த இளையராஜா

ராத்திரியில் பூத்திருக்கும் பாடலையும் மாங்குயிலே பூங்குயிலே பாடலையும் அந்த மெட்டுக்கு இந்தப் பாட்டு இந்த மெட்டுக்கு அந்தப் பாட்டு என்று மாற்றிப் பாடினார் இளையராஜா. இசையே ஏமாற்றுவேலைதான் என்று ரகசியம் உடைத்தார். மாணவிகள் கரவொலி எழுப்பினார்கள்.

சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் இளையராஜா 75 விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பல பாடல்களைப் பாடினார் இளையராஜா. விழாவில், ‘ஜனனி’ பாடலைப் பாடித் தொடங்கினார். அடுத்து மாணவி ஒருவர், ‘தென்றல் வந்து தீண்டும் போது’ பாடலைப் பாடுங்க ஐயா’ என்று கேட்க, ‘அவதாரம்’ படத்தில் இடம்பெற்ற ‘தென்றல் வந்து தீண்டுபோது என்ன வண்ணமோ’ பாடலைப் பாடினார். அந்தப் பாடலைக் கேட்டு, மாணவி ஒருவர் கரகரவென கண்ணீர் வழிய அழுதார்.

அவரைப் பார்த்து, ‘ஏன் அழறே?’ என்று கேட்டார் இளையராஜா. ‘இந்தப் பாட்டுங்க ஐயா’ என்றார் அழுதுகொண்டே. ‘எத்தனைபேருக்கு இப்படி அழுகை வந்திருக்கு?’ என்று கேட்டார் இளையராஜா. பிறகு அவர், ‘நிறைய பேர் அடக்கிக்குவீங்க’ என்றார்.

பிறகு அந்த மாணவி, ‘தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே’ பாடலைப் பாடுங்க ஐயா’ என்று கோரிக்கை விடுத்தார்.

அதன் பிறகு, ‘நாயகன்’ படத்தில் இடம்பெற்ற ‘தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே’ பாடலைப் பாடினார். ‘வளரும் பிறையே தேயாதே. இனியும் அழுது தேம்பாதே. அழுதா மனசு தாங்காதே’ என்று பாடிய போது அந்த மாணவி மீண்டு அழத் தொடங்கினார்.

அதையடுத்து, ‘உங்கள் அம்மாவைப் பற்றிச் சொல்லுங்களேன்’ என்று மாணவி ஒருவர் கேட்டார். ‘என் அம்மாவைப் போல் உலகிலேயே யாருமில்லை. நானும் அண்ணனும் சென்னைக்குக் கிளம்ப காசு கேட்டோம். 800 ரூபாய் மதிப்புள்ள ரேடியோவை 400ரூபாய்க்கு விற்று வந்து, பணம் கொடுத்தார். ‘நான் 200 ரூபா வீட்டுச்செலவுக்கு எடுத்துக்கறேன்’ என்று அம்மாவும் கேட்கவில்லை. ‘எல்லாத்தையும் எங்களுக்குக் கொடுக்கறியேம்மா. ஒரு அம்பது ரூபாயாவது வைச்சுக்கோ’ன்னு நாங்களும் சொல்லலை. அந்த அளவுக்கு பெருந்தன்மையா அம்மா, எங்களை அனுப்பிவைச்சாங்க. அந்தப் பண்பை எந்தக் கல்லூரியும் கத்துக்கொடுக்காது. எந்தப் பல்கலைக்கழகமும் சொல்லித்தராது’ என்றார்.

பிறகு, ‘ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ...’ பாடலை ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாடல் மெட்டிலும் இந்தப் பாடலை ‘ராத்திரியில் பூத்திருக்கும்’ மெட்டிலும் பாடிக்காட்டினார். ‘ரெண்டுமே ஒரே ராகம்தான். ஆனால் அதை எடுத்துக் கையாண்ட விதம்தான் வேறு வேறு. இதெல்லாம் ஏமாற்றுவேலை. இசை என்பதே ஏமாற்றுவேலைதான்’ என்றார்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x