Last Updated : 05 Mar, 2019 04:45 PM

 

Published : 05 Mar 2019 04:45 PM
Last Updated : 05 Mar 2019 04:45 PM

’7ஜி’ செல்வராகவன் ஜீ... ஹேப்பி பர்த் டே!

அந்தப் படம் மூன்று பேருக்குமே மிக முக்கியமான படம். கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு, அப்பா கஸ்தூரிராஜா படத்தை இயக்கியிருந்தார். கதையாக்கத்துக்கு மூத்த மகனைப் பயன்படுத்தினார். 2வது மகனை ஹீரோவாக்கியிருந்தார். அந்தப் படத்தில், அப்பாவையும் தம்பியையும் கடந்து, தனித்துத் தெரிந்தார் அந்தப் படைப்பாளி. அந்தப் படம்... ‘துள்ளுவதோ இளமை’. அவர்... செல்வராகவன்.

‘இத்தனை நாள் வந்த கஸ்தூரிராஜா படம் மாதிரியே இல்லப்பா. கதை, திரைக்கதைலாம் பண்ணின அவரோட பையனே டைரக்ட் பண்ணிருக்காருப்பா’ என்றார்கள் பலரும். ‘துள்ளுவதோ இளமை’யின் துள்ளலில் சொக்கிப்போன தமிழ் சினிமா ரசிகனை, அடுத்த படத்தில் இன்னும் உருகவைத்தார் செல்வராகவன். அது... ‘காதல்கொண்டேன்’.

படம் பார்த்து மிரண்டுதான் போனார்கள் எல்லோரும். ‘குணா’ மாதிரியே இருக்குப்பா’ என்று சொல்லப்பட்டாலும் ‘காதல் கொண்டேன்’ படத்தை வேற லெவல் என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள். திரும்பத் திரும்ப பார்த்தார்கள். மிகப்பெரிய வெற்றிப் படமாக்கினார்கள். செல்வராகவன் உருவாக்கிய அந்த கேரக்டரைஸேஷன், எளிய மாந்தர்களைக் காட்டியது. நம் தெருவில் நாலுதெரு வசிக்கும் இளைஞர்களையும் யுவதிகளையும் படம்பிடித்தது போல், பாத்திரங்களை உருவாக்கியிருந்ததில், உருகித்தான் போனான் ரசிகன்.

அடுத்ததிலும் நாலுகால் பாய்ச்சலில் ’7ஜி ரெயின்போ காலனி’க்குள்ளாக, புகுந்து புறப்பட்டார் செல்வராகவன். காதல்கொண்டேனில் திவ்யா திவ்யா என்றவர், இதில், அனிதா அனிதா என ஏங்கச் செய்தார். இந்த முறை தம்பி தனுஷைவிடுத்து, வேறொரு ஹீரோ. ஆனாலும் நாயகன் என்னவோ செல்வராகவன்.

’புதுப்பேட்டை’ யில் புதியதொரு சென்னையை, அப்படியாக... முதன்முதலாகக் காட்டியவர் இவராகத்தான் இருக்கும். அப்போது சுமார், நல்லாயில்ல, பரவாயில்ல என்றவர்கள் எல்லோருமே இப்போது அந்தப் படத்தைக் கொண்டாடுகிறார்கள்.

எழுத்துக்கு பாலகுமாரன், நடிப்புக்கு தனுஷ், இசைக்கு யுவன் என்றொரு கூட்டணி அவருடையது. அதிலும் அதைத் தாண்டியுமாக அவர் பண்ணியதெல்லாம் ‘ஆயிரத்தில் ஒருவன்’ ரகம். அந்தப் படத்தின் தொழில்நுட்பம், டீட்டெய்ல்டு, கார்த்தி, பார்த்திபன் கேரக்டர்கள், ஆண்ட்ரியா, ரீமாசென்னின் நடிப்பு என எல்லாமே வேறொரு கதை, வேறோரு களம், வேறோரு லெவல். ஃபேன்டஸி டிரீட்மெண்ட்டில் மிரண்டுப்போனது தமிழ் சினிமா.

அடுத்தடுத்து படங்கள் பண்ணினார். தெலுங்குப் பக்கம் போய் ஹிட்டடித்தார். இப்போது, எடுத்த படங்கள் அடுத்தடுத்து வருகிற நிலை.

அப்படி படம் எடுப்பாரு, இப்படித்தான் படம் பண்ணுவாரு, அவரோட கதையே கோக்குமாக்காத்தான் இருக்கும் என்றெல்லாம் எத்தனையோ விதமாகச் சொன்னாலும், செல்வராகவன், தமிழில் தடம் பதித்த இயக்குநர்களின் வரிசையில், அழகிய இடம் பிடித்திருக்கிறார் என்பதை எவரும் மறுக்கமுடியாது.

இயக்குநர் செல்வராகவனின் பிறந்தநாள் இன்று (5.3.19). ஹேப்பி பர்த் டே செல்வா. ஜெயிக்க வாழ்த்துகள்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x