Last Updated : 15 Mar, 2019 05:07 PM

 

Published : 15 Mar 2019 05:07 PM
Last Updated : 15 Mar 2019 05:07 PM

முதல் பார்வை: இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

அளவுக்கு அதிகமாக நேசித்த காதலியை விட்டு காதலன் விலக நேர்ந்தால் அதுவே 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்'.

முரட்டுத்தனமும் முன்கோபமும் கொண்ட இளைஞன் கௌதம் ( ஹரிஷ் கல்யாண்). ஃபேஷன் டிஸைனிங் படிக்கும் கல்லூரி மாணவி தாரா (ஷில்பா மஞ்சுநாத்). தமிழ் சினிமாவின் எழுதப்படாத 555-வது விதிப்படி இவர்கள் இருவரின் முதல் சந்திப்பு மோதலில் முடிய, அடுத்தடுத்த சந்திப்புகள் நட்பாகவும் காதலாகவும் மலர்கிறது. ]

அம்மாவின் பிரிவை ஹரிஷ் கல்யாணால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த ஏக்கத்துடனும் காயத்துடனும் வாழும் ஹரிஷ், காதலி ஷில்பா எந்த சமயத்திலும் தன்னை விட்டு விலகிப் போய்விடுவாரோ என்று அஞ்சுகிறார். அதனால் ஏற்படும் பதற்றத்திலும் சோகத்திலும் விரக்தியிலும் ஒவ்வாத சில செயல்களில் ஈடுபடுகிறார். இதனால் ஷில்பா காயப்படுகிறார். இந்த சூழலில் ஷில்பாவுக்கு வேறு ஒருவருடன் திருமண  ஏற்பாடு நடக்கிறது.

தன்னைத் தொடர்ந்து காயப்படுத்தும் காதலனை ஷில்பாவால் ஏற்க முடிந்ததா,  பெற்றோர் நலனுக்காக அவர்கள் பார்த்து வைத்த மாப்பிள்ளையைக் கரம் பிடிக்கிறாரா, காதல் பிரிவில் வாடும் ஹரிஷ் கல்யாண் என்ன ஆகிறார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

'புரியாத புதிர்' மூலம் இயக்குநரான ரஞ்ஜித் ஜெயக்கொடியின் அடுத்த படம் இது. காதலும் காதல் நிமித்தமுமாக ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால், இதற்கு எதற்கு இரண்டரை மணி நேரம் தேவைப்பட்டது என்பதுதான் புரியாத புதிர்.

'பொறியாளன்', 'வில் அம்பு', 'பியார் பிரேமா காதல்' படங்களின் மூலம் அழுத்தமாகத் தடம் பதித்த ஹரிஷ் கல்யாண் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் ஆரம்பக் காட்சிகளில் வெகுவாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார். எந்த பிரச்சினையென்றாலும் தனி நபராக எதிர்கொள்வது, யாருக்கும் கட்டுப்படாமல் இருப்பது, நண்பர்கள் தீர்க்க முடியாத பிரச்சினைகளை சில நிமிடங்களில் தீர்த்து ஆபத்பாந்தவனாகக் காப்பாற்றுவது என கெத்தான இளைஞராக வலம் வருகிறார். ஹரிஷ் காதலில் விழுந்த பிறகு அவரின் வேறு ஒரு பரிணாமத்தைப் பார்க்க முடிகிறது. ஆனால், அது சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

மிகச்சிறந்த காதலனாக தன்னை நிறுவ வேண்டிய இடங்களில் எல்லாம் சம்பந்தமில்லாமல் கோபத்தில் வெடிக்கும் இளைஞராகவும், ஆவேசத்தில் ஈகோவில் அடுக்கடுக்கான தவறுகளைச் செய்பவராகவும் இருக்கிறார். கதாபாத்திரக் கட்டமைப்பில் இயக்குநர் சறுக்கியிருந்தாலும் நடிப்பிலும் ஹரிஷ் தனித்தடம் பதிப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போகிறது.

கள்ளம் கபடமற்ற தூய்மையான காதலியின் மனநிலையை, குணத்தை ஷில்பா மஞ்சுநாத் அப்படியே பிரதிபலிக்கிறார்.  புரியாமல் பேசும் ஹரிஷ் கல்யாணை அவர் எதிர்கொள்ளும் விதம் பக்குவமானது. காதலனின் நிலை தெரிந்த பிறகும் அவனுக்காக எல்லை தாண்டிய தேடலில் ஈடுபடுவது அவருக்கும் அவர் நடிப்புக்கும் வலு சேர்க்கிறது.

மாகாபா ஆனந்தும், பால சரவணனும் உச்சகட்ட அலுப்பை வரவழைக்கிறார்கள். பொன்வண்ணன், சுரேஷ் ஆகிய சீனியர் நடிகர்கள் இருந்தும் அவர்களுக்குப் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. மாகாபா ஆனந்தின் காதலியாகவும், மஞ்சுநாத்தின் தோழியாகவும் திவ்யா நல்ல நடிப்பை வழங்கியுள்ளார்.

கவின்ராஜ் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ். இசையும் படத்துக்குப் பலம். கண்ணம்மா பாடல் மட்டும் கவனிக்க வைக்கிறது. பவன்ஸ்ரீகுமார் கத்தரி போடுவதில் இன்னும் கண்டிப்பு காட்டியிருக்கலாம்.

ராஜன் ராதாமணாளன், ரஞ்ஜித் ஜெயக்கொடி ஆகிய இருவரும் இணைந்து வசனங்களை எழுதியுள்ளனர். காதலின் மகத்துவம் குறித்தோ அதன் ஆழம் குறித்தோ வசனங்கள் எந்தவிதத்திலும் ஈர்ப்புடன் இல்லை.

அம்மா பிரிந்துபோனதற்கான காரணம் தெரிந்த பிறகும் பால்ய காலத்தில் தொலைத்த மகிழ்ச்சிக்காக ஹரிஷ் கல்யாண் வருத்தப்படுவதில் நியாயம் இருக்கிறது. ஆனால், வளர்ந்த பிறகும் அவர் பக்குவமின்மையால் தொடர்ந்து செயல்படுவது ஏன் என்பது புரியவில்லை.

காதலியின் பிரிவுக்கான சமிக்ஞைகள் எதுவும் தெரியாத நிலையில் உடனுக்குடன் ஹரிஷ் கல்யாண் எதிர்வினை ஆற்றுவது, பதிவுத் திருமணம் செய்துகொள்ளத் துடிப்பது, வீட்டுக்குள் கல்லெறிந்து கலாட்டா செய்வது என வினோதமாகச் செயல்படுவது திரைக்கதைக்குப் பாதகமான அம்சங்கள்.

பிரிவதற்கான எந்தப் புள்ளியும் இல்லாத போது ஹரிஷின் நடவடிக்கைகளே பிரிவுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது. காதல் குறித்தும், காதலி குறித்தும் எந்தப் புரிதலும் இல்லாமல் ஹரிஷ் தீய பழக்கத்துக்கு ஆளாவதும் கதையின் தடுமாற்றத்துக்குக் காரணம். மோதல் - காதல்- பிரிவு என்ற வழக்கமான காதல் கதை ஏன் குழப்பத்துடனும் மந்தகதியிலும் செல்ல வேண்டும் என்பது தெரியவில்லை.

அன்பின் அடர்த்திக்கான நியாயமான காரணங்கள் இல்லாமல் காதல் குறித்த சுவாரஸ்யங்களும் இல்லாமல் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படம் கடந்து போகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x