Last Updated : 02 Mar, 2019 08:18 PM

 

Published : 02 Mar 2019 08:18 PM
Last Updated : 02 Mar 2019 08:18 PM

கமல் ஒரு சினிமா கலைக் களஞ்சியம்: நடிகர் ஜெயராம் புகழாரம்

கமல் ஒரு சினிமா கலைக் களைஞ்சியம் என்று நடிகர் ஜெயராம் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயராம். தமிழில் 'தெனாலி', 'பஞ்ச தந்திரம்', 'உத்தமவில்லன்' உள்ளிட்ட படங்களில் கமலுடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும், கமலுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறார். ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராமை தமிழ் சினிமாவுக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் அறிமுகப்படுத்தி வைத்தவர் கமல் என்பது நினைவுக்கூறத்தக்கது.

தற்போது தன்னுடைய திரையுலக பயணம், மகனின் வளர்ச்சி உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி முன்னணி இணையத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில் கமல்  குறித்த கேள்வி அவர் கூறியிருப்பதாவது:

அவர் சினிமாவுக்காக மட்டுமே வாழும் ஒருவர். வேறெதைப் பற்றியும் என்னிடம் கேட்காதீர்கள். அரசியல் விவகாரங்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர் ஒரு சினிமா கலைக் களைஞ்சியம். ஒரு பல்கலைக்கழகத்தைப் போன்றவர். திரைப்படங்கள் பற்றி அவருக்கு தெரியாதது என எதுவும் இல்லை.

இரண்டரை வயதில் நடிக்க ஆரம்பித்தவர். ஏவிம் ஸ்டூடியோவில் குழந்தையாக இருக்கும்போதே நடித்தவர். அவர் முதன்முதலில் நடிக்க ஆரம்பித்த போது ஏவிஎம்மில் நட்டப்பட்ட மரம் இன்னும் அங்கு இருக்கிறது. 50 வருடங்களக் கடந்த அந்த மரத்துக்கு கமல்ஹாசனின் பெயர் தான் வைக்கப்பட்டுள்ளது.

50 வருடங்கள் நடிப்புத் துறையில் நிறைவு செய்வது சாதாரண விஷயமல்ல. அவர் செய்யாத கதாபாத்திரங்கள் மிகக் குறைவு. ஒரு நடிகர் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றால் அந்த கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் 15 வருடங்களுக்கு முன்னரே நடித்திருப்பார். அவருக்கு அனைத்தைப் பற்றியும் சிறந்த அறிவு உள்ளது.

அற்புதமான ஒப்பனைக் கலைஞர், அட்டகாசமான சண்டைப் பயிற்சிக் கலைஞர், புகைப்படக் கலைஞர், மேலும் திறமையான எழுத்தாளரும் கூட. அவரால் எத்தனை மொழிகள் பேச முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவருக்கு கல்வி அறிவுதான் குறைவு. ஆனால் அவர் அதிகம் படித்து நிறைய அறிவைப் பெற்றவர்.

இவ்வாறு ஜெயராம் தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x