Published : 25 Feb 2019 08:34 PM
Last Updated : 25 Feb 2019 08:34 PM
‘நாசர், ரோகிணி இப்படி அசத்துவாங்கன்னு நினைக்கவே இல்ல. நடிப்புலயும் காமெடிலயும் பிரமாதப்படுத்திட்டாங்க’ என்று ’மகளிர் மட்டும்’ படம் குறித்த நினைவுகளை கிரேஸி மோகன் பகிர்ந்துகொண்டார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பேனரில் கமல்ஹாசன் தயாரித்த ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தில், நாசர், ரேவதி, ஊர்வசி, ரோகிணி முதலானோர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய வெற்றியப் பெற்ற இந்தப் படம், 94ம் ஆண்டு, பிப்ரவரி 25ம் தேதி வெளியானது. இன்றுடன் 25 வருடங்களாகிவிட்டன.
இது ‘மகளிர் மட்டும்’ படம் வெளியாகி, வெள்ளிவிழா ஆண்டு.
இதுகுறித்து, படத்துக்கு வசனம் எழுதிய கிரேஸி மோகன் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது:
இந்தப் படத்துக்கு முன்பு வரை வசனம் மட்டுமே எழுதிக்கொண்டிருந்தேன். இந்தப் படத்துக்கு கமல் சாருடன் சேர்ந்து திரைக்கதையும் எழுதினேன். அந்த சமயத்துல டிவில சீரியல் பண்ணிட்டிருந்தேன். எங்க ட்ரூப்ல இருக்கற ‘அப்பா’ ரமேஷ், டெட்பாடியா நடிச்சார். ரொம்பப் பிரமாதமாப் பேசப்பட்டது அந்தக் கேரக்டரும் நடிப்பும்!
இதை கமல் சார்கிட்ட சொன்னப்ப, அந்த ‘டெட்பாடி’ காட்சியை எங்கே செருகலாம்னு யோசிச்சார். அப்புறம், ‘நாகேஷ் சாரை நடிக்கக் கேப்போம்’னு சட்டுன்னு சொன்னார். நாகேஷ் சார்தான் பெஸ்ட் சாய்ஸ்.
அதேபோல, படத்துக்கு ஹீரோவா, அதுவும் காமெடி கலந்த ஹீரோவா யாரைப் போடலாம்னு பேச்சு வந்துச்சு. அப்போ, நாசர் பேரை கமல் சொன்னார். ‘நாசர் காமெடி பண்ணனுமே. சரியா வருமா?’ன்னு கேட்டேன். எனக்கு நம்பிக்கையே இல்ல. ஆனா கமல் சார் உறுதியா இருந்தார். பாத்தா, நாசர், காமெடிலயும் பிச்சு உதறினார். ’மகளிர் மட்டும்’ நாசருக்கு புதியதொரு அனுபவமா அமைஞ்சிச்சு.
அப்படித்தான், பாப்பம்மா கேரக்டரும். இந்தக் கதாபாத்திரத்துக்கு யாரைப் போடுவது என்று பேச்சு வந்த போது, ஒவ்வொருவர் பேராகச் சொல்லப்பட்டது. பிறகு கொஞ்சம் அமைதியானோம். அதற்குப் பிறகு, கமல் சார் சட்டென்று சொன்னார்… ‘ரோகிணி’ என்று! ‘இந்தக் கேரக்டரை ரோகிணி அசால்ட்டா தூக்கிட்டுப் போயிருவாங்க’ என்றார். படத்தில் இப்போது பார்த்தாலும் ரோகிணி, நடிப்பிலும் சென்னை பாஷையிலும் வெளுத்து வாங்கியிருப்பார்.
ஊர்வசி நடிப்பை சொல்லவே வேணாம். கமல் ஊர்வசி பத்தி சொல்லும் போது, ‘ராட்சஷி’ன்னு சொல்லுவார். அந்த அளவுக்கு மிகச்சிறப்பான நடிப்பைக் கொடுத்திருப்பார். ரேவதியும் அப்படித்தான்.
சர்க்கரைக்கு பதிலா எலி மருந்தை கலந்து நாசருக்குக் காபி கொடுத்திருப்பார் ஊர்வசி. அப்புறம் ஆஸ்பத்திரில பேசிட்டிருக்கும் போது, ‘சத்தம் கேட்டு மேனேஜர் ரூமுக்குப் போய்ப்பாத்தா, அடிபட்ட எலி மாதிரி விழுந்து கிடந்தார்னு ரேவதி சொல்ல, ‘எலியை ஞாபகப்படுத்தாதே’ன்னு ஊர்வசி சொல்லுவார். இந்த சீன் எடுக்கும்போதே, எல்லாரும் விழுந்து விழுந்து ரசிச்சு ரசிச்சு சிரிச்சாங்க. இதுமாதிரி, ‘மகளிர் மட்டும்’ படம் முழுக்கவே சுவையான அனுபவங்கள் நிறையவே உண்டு’
இவ்வாறு கிரேஸி மோகன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT