Published : 04 Feb 2019 11:45 AM
Last Updated : 04 Feb 2019 11:45 AM
ராமராஜன் படங்களுக்கும் மோகனின் படங்களுக்கும் கூடத்தான் நல்ல பாட்டுகள் போட்டிருக்கிறேன். பாரபட்சமெல்லாம் நான் பார்ப்பதே இல்லை என்று இளையராஜா 75 விழாவில், இளையராஜா தெரிவித்தார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில், இளையராஜா 75 எனும் இசை நிகழ்ச்சியும் பாராட்டு விழாவும் நடைபெற்றது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இரண்டு நாள் நடைபெற்ற இந்த விழாவில், நிறைவு நாள் விழாவில், ரஜினி, கமல், ஷங்கர், பி.வாசு உள்ளிட்ட திரையுலகினர் பலரும் கலந்துகொண்டனர்.
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும் போது, ‘இசையின் சுயம்பு இளையராஜா. அவர் அன்னக்கிளி என்கிற முதல் படத்திலேயே விஸ்வரூபமெடுத்து வந்து நின்றார். இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார். 6 ஆயிரம் பாடல்களுக்கு மேல் கொடுத்திருக்கிறார்.
என்னுடைய படங்களுக்கும் எத்தனையெத்தனையோ ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். ஆனாலும் கமல் படமென்றால் இளையராஜா சார், ஸ்பெஷலாக பாடல்கள் போட்டுத்தருவார் என்று ரஜினி பேசினார்.
உடனே இளையராஜா, ‘கமலிடம் கேட்டால், ரஜினியின் படங்களுக்குத்தான் பிரமாதமாகப் பாட்டு போட்டுத்தருகிறீர்கள் என்று சொல்லுவார். அவ்வளவு ஏன்... ராமராஜன் படங்களுக்குக் கூடத்தான், நல்ல நல்ல பாடல்கள் தந்திருக்கிறேன். நீங்களெல்லாம் பெயர் வைத்திருக்கிறீர்களே... மைக் மோகன் என்று! அந்த நடிகர் மோகனுக்குக் கூடத்தான், நல்ல பாடல்கள் போட்டுக் கொடுத்திருக்கிறேன்.
எனக்கு யார் இயக்குநர், நடிகர் யார் என்பதெல்லாம் இல்லை. பாரபட்சம் இல்லாமல்தான் இசையமைப்பேன். அதுதான் என் வழக்கம்’ என்று பதிலளித்தார்.
மொத்தக் கூட்டம் கரவொலி எழுப்பி, ஆர்ப்பரித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT