Published : 12 Feb 2019 04:21 PM
Last Updated : 12 Feb 2019 04:21 PM
தான் மெட்டமைத்து தேர்வாகாத இரண்டு பாடல்கள் எப்படி பின்னாட்களில் சூப்பர் ஹிட் ஆகின என்பது குறித்து இசையமைப்பாளர் இளையராஜா பகிர்ந்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்த நாளை ஒட்டி, தமிழ்த் திரையுலகமே திரண்டு அவரை கவுரவிக்க விழா ஒன்றை எடுத்தது. இதை முன்னிட்டு 'தி இந்து' ஆங்கிலம் இணையதளத்துக்கு இளையராஜா பேட்டியளித்தார். அதில் சுவாரஸ்யமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
வழக்கமாக மெட்டமைப்புக்காக உட்காரும்போது இளையராஜா உருவாக்கும் மெட்டுகளை முதலில் கேட்டுவிட்டு வேண்டாம் என்று சொல்லாமல் இன்னொரு மெட்டு முயற்சிக்கலாமா என்பார்களாம் இயக்குநர்கள்.
1980-ல் வெளியான ’முரட்டுக்காளை’ திரைப்படத்தில், பொதுவாக என் மனசு தங்கம் பாடல் சூப்பர் ஹிட் ஆனது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஆரம்பத்தில் அந்த மெட்டுக்கு மாற்றாக இன்னொரு மெட்டை இயக்குநர் கேட்டபோது இளையராஜா கொடுத்த மெட்டுதான் பின்னாளில் ’ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா’ என்ற பாடல் மெட்டு.
இதே போல ’மூடுபனி’ படத்தில், ’என் இனிய பொன் நிலாவே’ பாடலுக்கு மாற்றாக இளையராஜா தந்த மெட்டு தான் ’இளைய நிலா பொழிகிறது’ பாடலின் மெட்டு. ஆனால் மூடுபனியில் ’என் இனிய....’ மெட்டே பயன்படுத்தப்பட்டது.
இதில் இன்னொரு சுவாரஸ்யம் பின்னாட்களில் இரண்டு மெட்டுகளுமே 1982-ல் ’பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் பயன்படுத்தப்பட்ட ஹிட் ஆனது தான். இது போல எண்ணற்ற பாடல்கள் முதலில் தேர்வாகாமல் பின்னாட்களில் பயன்படுத்தப்பட்டு ஹிட் ஆனது என இளையராஜா பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT