Published : 15 Feb 2019 08:57 PM
Last Updated : 15 Feb 2019 08:57 PM
எல்லார் வாழ்விலும் திருப்புமுனை தடக்கென்று வரும். அப்படியொரு ஏற்றமும் மாற்றமும் ஒரு படத்தின் மூலமாக, நடிகருக்கும் கிடைத்தது. இயக்குநருக்கும் கிடைத்தது. இசையமைப்பாளருக்கும் கிடைத்தது. அந்தப் படம்… ‘பூவே உனக்காக’.
ஆனாலும் விக்ரமனுக்கு புதுவசந்தம் போல் பிரமாண்டமான வெற்றி தேவையாக இருந்தது. அந்த சமயத்தில்தான் அட்டகாசமான கதையை தயார் செய்தார் விக்ரமன். கதையின் மையக்கரு காதல்தான் என்றாலும் விட்டுக்கொடுக்கிற காதல்தான் என்றாலும் காதலையே நினைத்து வாழ்கிற கதை என்றாலும் விக்ரமனுக்கே உரித்தான இன்னொரு முக்கியமான விஷயமும் வழக்கம்போலவே இருந்தது. அது… பாஸிட்டீவ் திங்கிங்.
இன்றைக்கு காதலிக்காதவளையும் காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றியவர்களையும் ‘அடிடா அவளை, வெட்றா அவளை, குத்துறா அவளை…’ என்றெல்லாம் பாட்டைப் போட்டு நாராசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். புனிதமானது என்பதைத் தாண்டிவிட்ட காதலின் மென்மையை இழை இழையாய்ப் பிரித்து கவிதை போல் சொல்லியிருப்பார் இயக்குநர் விக்ரமன்.
தான் குடியிருக்கும் ரூமுக்குப் பக்கத்தில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் இருக்கும் அஞ்சு அரவிந்தை காதலிப்பார் விஜய். ஆனால் ஒருகட்டத்தில் அவர் வேறு ஒருவரைக் காதலிக்கிறார் என்பதும் ஆனால் இந்தக் காதல் சேர வாய்ப்பே இல்லை என்பதும் அதற்கு எங்கள் குடும்பமும் அவர்கள் குடும்பமும் ஒரு காதலால் பிரிந்துவிட்டது என்றும் சொல்லுவார் அஞ்சு அரவிந்த். இதில் ஒருவர் இந்து. இன்னொருவர் கிறிஸ்தவர்.
அங்கே, அஞ்சுவின் ஊருக்கு வரும் விஜய், அந்தக் குடும்பத்தில் ஒருவராகச் சொல்லிக்கொண்டு களத்தில் இறங்குவார். அங்கே சங்கீதாவும் வந்திருப்பார். பதினெட்டு இருபது வருடங்களுக்கு முன்பு, காதலித்து கல்யாணம் செய்துகொண்டு ஊரை விட்டுச் சென்றவர்களின் மகள்தான் சங்கீதா. இதுதெரியாமல் விஜய் அந்த வீட்டுப் பையன் என வலம் வருவார். கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் குடும்பத்தையும் அந்தக் குடும்பத்தையும் சேர்த்துவைத்துக்கொண்டே வருவார்.
இங்கே நாகேஷ். அங்கே நம்பியார். இங்கே ஜெய்கணேஷ். அங்கே மலேசியா வாசுதேவன். அப்படிச் சேர்ப்பதெல்லாம் காமெடி கலாட்டாதான். போதாக்குறைக்கு சார்லி உடனிருந்து ரகளை பண்ணுவார். சங்கீதா, மீசை முருகேஷ், மதன்பாப் என்று படத்தில் வருபவர்கள் அனைவருமே காமெடி பட்டாசை கொளுத்திப் போட்டுக்கொண்டே இருப்பார்கள். இதுவும் விக்ரமனின் ஸ்டைல்தான்!
க்ளைமாக்ஸ் பரபரப்பு. ‘ஒரு இந்துவுக்குத்தான் என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கொடுப்பேன்’ என்பார் மலேசியா வாசுதேவன். ‘ஒரு கிறிஸ்டினுக்குத்தான் என் பையனைக் கல்யாணம் பண்ணிக் குடுப்பேன்’ என்பார் ஜெய்கணேஷ்.
அங்கேதான் ட்விஸ்ட் வைத்திருப்பார் விக்ரமன். ‘உங்களுக்கு வரக்கூடிய மாப்பிள்ளை நீங்க சொன்னது போல இந்துவாயிட்டாரு. ஆனா உங்க பொண்ணு இப்போ கிறிஸ்டின்’ என்பார் விஜய்.
அதேபோல அவர்களிடம், ‘உங்க வீட்டு மருமகள் கிறிஸ்டின். ஆனா உங்க வீட்டு பையன் இந்துவாயிட்டாரு’ என்பார் விஜய். தியேட்டரே தெறித்துக் கைத்தட்டும். பிறகு கோபதாபங்களையெல்லாம் மறந்து, திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள, சீரும் சிறப்புமாக நடக்கும் கல்யாணம்.
தன் காதலிக்கு கல்யாணம் நடத்திய திருப்தியுடன் கிளம்புவார் விஜய். அப்போது சங்கீதா காதலிப்பதையும் இருவரும் சேரவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும்.
தோக்கறதுக்கு காதல் ஒண்ணும் பரிட்சை இல்லீங்க’ என்பார் விஜய். சொல்லிவிட்டு தனியே செல்லும் விஜய்யுடன் ப்ரீஸாகி, டைட்டில் கார்டு போட்டு, சுபம் போடுவார் இயக்குநர் விக்ரமன்.
பார்த்தவர்களே மீண்டும் மீண்டும் பார்த்தார்கள். பாட்டுக்காக பார்த்தார்கள். சிக்லெட்டு சிக்லெட்டு சிட்டுக்குருவி, ஆனந்தம் ஆனந்தம் பாடும், சொல்லாமலே, ஓபியாரி என எல்லாப் பாடல்களும் செம ஹிட்டு. எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசைவண்ணம், அற்புதம். குறிப்பாக, முரளி கவுரவத்தோற்றத்தில் நடிகராகவே வந்து, ‘மச்சினிச்சி வர்ற நேரம் மண்மணக்குது மனசுக்குள்ளே பஞ்சவர்ணக்கிளி பறக்குது’ என்ற பாடல் தனி ரகம். தனிச்சுவை.
மசாலாப் படங்களிலும் ஆக்ஷன் படங்களிலும் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தந்த படங்களிலும் அப்பா எஸ்.ஏ.சி.யின் படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்த விஜய்க்கு, இந்தப் படம் ஜாக்பாட் வெற்றி. வெள்ளிவிழாப் படமாக அமைந்தது. தடக்கென்று மார்க்கெட்டும் சம்பளமும் உயர்ந்தது. விஜய்யின் திரை வாழ்க்கையில், பூவே உனக்காக மிக முக்கியமான படம்.
தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான படங்களில் பூவே உனக்காக படமும் ஒன்று. இயக்குநர் விக்ரமனுக்கும் எஸ்.ஏ.ராஜ்குமாருக்கும் மறக்க முடியாத படம். சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரியின், சூப்பர் ஹிட் திரைப்படங்களில் தனித்துவமிக்க படம்.
96ம் வருடம் பிப்ரவரி மாதம் 15ம் தேதி ரிலீசானது. இதோ… இன்றுதான் பூவே உனக்காக ரிலீசான நாள். கிட்டத்தட்ட படம் வெளியாகி இன்றுடன் 23 வருடங்களாகிவிட்டன. இன்னும் எத்தனை வருடங்களானாலும் பூவின் நறுமணத்துடன், நம் மனதை நிமிண்டிக் கொண்டே இருக்கும், ‘பூவே உனக்காக’ படத்தின் வாசம்.
விக்ரமன் டீமிற்கு ஸ்பெஷல் பொக்கே. விஜய்க்கு வலிக்க வலிக்க கைகுலுக்கல்கள். தரமான படத்தைத் தந்த சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரிக்கு பாராட்டுப் பதக்கங்கள். எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு விசில் போடு!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT