Published : 28 Feb 2019 03:32 PM
Last Updated : 28 Feb 2019 03:32 PM
ஆர்.கே.நகர் தேர்தல் விண்ணப்ப சர்ச்சையை முன்வைத்து விஷாலை கிண்டல் செய்துள்ளார் எஸ்.வி.சேகர்
தமிழகத்தின் தேர்தல் களத்தில் இந்தத் தேர்தலில் ரஜினி - கமல் இணைந்து பணிபுரிய வேண்டும் என்று விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் "ரஜினி சார் மற்றும் கமல் சார் இருவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புகிறேன்.
நடிகர் சங்கத்தின் நிகழ்சிக்காக அல்ல. நட்சத்திர நடிகரின் வரவேற்பு விழாவுக்காக அல்ல. சினிமா விழாக்களுக்காக அல்ல. எந்த விஷயத்துகாகவும் அல்லாமல் மக்களவைத் தேர்தலுக்காக ஒன்று சேருங்கள். ஆமாம். ஒன்று சேர்ந்தால் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும்" என்று தெரிவித்தார்.
விஷாலின் இந்த ட்வீட் வைரலானது. இதனால் விஷாலின் ட்வீட்டைக் குறிப்பிட்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “புரட்சிப் புலியாரே.. நீங்க நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடலாமே?. அதான் சங்கப் பணத்தைக் காலி பண்ணியாச்சே.. இங்கே உங்க வேலை முடிஞ்சது.
அடுத்து மக்களுக்குத்தான் உங்க சேவை தேவையாம்."நீங்கதான் மிகத் தேர்ந்த பழி வாங்கும் ஆட்டையப் போடும் அரசியல்வாதியாச்சே! சீக்கிரமா யோசிச்சு முடிவு எடுங்க” என்று குறிப்பிட்டார்.
தற்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் கிண்டல் ட்வீட்டைக் குறிப்பிட்டு எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''சரியா சொன்னீங்க. ஆர்.கே.நகர் மாதிரி இல்லாம விண்ணப்பத்தை சரியாகப் போடக் கத்துக்கிட்டா 40 சீட்டுக்கு 60 சீட் ஜெயிச்சுடலாம். ஆனா நம்ப செயற்குழுதான் தேர்தல் கமிஷன்ல இருக்கணும்'' என்று தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் அணிக்கு எதிராகப் பணிபுரிந்து வருபவர்களில் சுரேஷ் காமாட்சி மற்றும் எஸ்.வி.சேகர் ஆகியோர் முக்கியமானவர்கள். சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்துக்குப் பூட்டு போடப்பட்ட அணியில் இவர்கள் இருவரும் இருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT