Last Updated : 16 Feb, 2019 05:39 PM

 

Published : 16 Feb 2019 05:39 PM
Last Updated : 16 Feb 2019 05:39 PM

பிளாஷ்பேக்; ரஜினி நடிச்சதை கட் பண்ண வேணாம்; அவனும் வளரணுமே! - சிவாஜியின் பெருந்தன்மை

''ரஜினி நடிச்சதை கட் பண்ண வேணாம். அவனும் வளரட்டும்'' என்று பெருந்தன்மையுடன் சொன்னார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

1979-ம் ஆண்டு சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‘நான் வாழவைப்பேன்’. அசோகா பிரதர்ஸ், வள்ளிநாயகி பிலிம்ஸ் எனும் பேனரில் வெளியான இந்தப் படம், கே.ஆர்.விஜயாவின் சொந்தப்படம்.

சிவாஜியை வைத்து பல படங்களை இயக்கிய டி.யோகானந்த், இந்தப் படத்தையும் இயக்கினார். இளையராஜாவின் இசையில், எல்லாப் பாடல்களும் ஹிட்டடித்தன.

’நான் வாழவைப்பேன்’ எனும் திரைப்படம், இந்திப் படத்தின் ரீமேக். இந்தி திரைப்பட உலகின் புகழ்பெற்ற கதாசிரியர்களான சலீம் - ஜாவேத் எனும் இருவரின் கதையில் 1974-ம் ஆண்டு வெளியானது ‘மஜ்பூர்’ எனும் திரைப்படம். அமிதாப், பிரான் முதலானவர்கள் நடித்த இந்தப் படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்தப் படத்தின் உரிமையைப் பெற்று 1979-ம் ஆண்டு, கே.ஆர்.விஜயா, தமிழில் ரீமேக் செய்தார். அமிதாப் நடித்த வேடத்தில் சிவாஜி மிகச்சிறப்பாக நடித்திருந்தார். பிரான் நடித்த வேடத்துக்கு யாரைப் புக் செய்வது என்று குழப்பத்தில் இருந்தபோது, இயக்குநர் டி.யோகானந்திடம், ‘ரஜினியைப் போடேம்பா’ என்றார் சிவாஜி.

எல்லோருக்கும் குழப்பம். ஆச்சரியம். அந்தக் காலகட்டத்தில், ரஜினி மளமளவென வளர்ந்து கொண்டிருந்தார். அதேசமயம், ரஜினி மிகுந்த மன அழுத்தத்துக்கும் ஆட்பட்டிருந்த தருணம் அது. அதனால், ரஜினி எப்போது, எப்படி நடந்துகொள்வார் என்பதை அனுமானிக்கமுடியாத நிலை. ஆகவே படங்களில், அவரை நடிக்கவைக்கத் தயங்கினார்கள். அந்த சமயத்தில்தான், ‘ரஜினியைப் போடேம்பா அந்தக் கேரக்டருக்கு’ என்றார் சிவாஜி.

பிறகு ரஜினி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தி நடிகர் பிரான் செய்த கேரக்டரை ரஜினி செய்திருந்தார். படத்தில் இடைவேளைக்குப் பிறகுதான் ரஜினி வருவார். அவருடைய மைக்கேல் டிஸோஸா எனும் கேரக்டர், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

’ஆகாயம் மேலே பூலோகம் கீழே’ எனும் பாடல் ரஜினிக்கு கொடுக்கப்பட்டது. திருத்தேரில் வரும் சிலையே, எந்தன் பொன்வண்ணமே முதலான எல்லாப் பாடல்களுமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.

படம், முழுவதுமாக எடுக்கப்பட்டது. சிவாஜிக்குத் திரையிடப்பட்டது. படம் பார்த்துவிட்டு, சிவாஜி உட்பட பலரும் அதிர்ந்துதான் போனார்கள். படத்தின் கடைசி இருபது நிமிடங்கள் முழுக்கவே, ரஜினியைச் சுற்றித்தான் கதை இருந்தது. மேலும், ரஜினி தன் ஸ்டைலாலும் நடிப்பாலும் பிரமாதப்படுத்தியிருந்தார். படம் முடிந்து வெளியே வரும்போது, ரஜினியைத்தான் கொண்டாடுவார்கள் ரசிகர்கள்.

‘நல்லா வந்திருக்கு படம். நிச்சயம் ஜெயிச்சிரும்’ என்று சொல்லிவிட்டு காருக்குச் சென்றார் சிவாஜி. அப்போது இயக்குநரும் தயாரிப்பு தரப்பிலும், ‘சார், க்ளைமாக்ஸ் நேரத்தை வேணும்னா குறைச்சிடலாம். கொஞ்சம் கட் பண்ணிக்கலாம்’ என்று சொன்னார்கள். உடனே சிவாஜி, ‘எதுக்கு கட் பண்றீங்க? கொஞ்சம் கூட குறைக்கக்கூடாது. ரஜினி நல்லாத்தானே பண்ணிருக்கான். அவனும் வளர்ந்துட்டிருக்கறவன். அவன் நல்லா வளரட்டும்’ என்று பெருந்தன்மையுடன் சொல்லிவிட்டு, காரில் ஏறிச் சென்றாராம்.

அவரின் பரந்த மனதை உணர்ந்து ‘நான் வாழவைப்பேன்’ யூனிட் மொத்தமும் நெகிழ்ந்து, நடிகர் திலகத்தைப் பாராட்டித்தள்ளியது.

இதற்கு முன்னதாக, சிவாஜியின் ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’ படத்தில் ரஜினியும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x