Last Updated : 10 Feb, 2019 09:01 AM

 

Published : 10 Feb 2019 09:01 AM
Last Updated : 10 Feb 2019 09:01 AM

நடிக்கும் கதையின் கேப்டனாக இருக்கணும்- ‘ஒரு அடார் லவ்’ நாயகன் ரோஷன் நேர்காணல்

‘‘தற்போது பள்ளிக்கூட வாழ்க்கையை அனுபவிக்கிற மாணவர்களுக்கு மட்டுமில்லாம, எல்லாரோட ஆட்டோகிராஃப் நோட்டையும் திரும்ப ஒருமுறை தூசிதட்டி எடுத்துப் பார்க்க வைக்கும் படமாக இது இருக்கும்’’ என்கிறார் ‘ஒரு அடார் லவ்’ படத்தின் நாயகன் ரோஷன் அப்துல் ரஹூஃப்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 4 மொழிகளில் தயாராகியுள்ள படம் ‘ஒரு அடார் லவ்’. ‘ஹேப்பி வெட்டிங்’ மலையாளப் படத்தை இயக்கிய உமர் லுலு இயக்கியுள்ள இப்படம் காதலர் தின வெளியீடாக வரவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் நடிப்பு அனுபவத்தை நம்மிடையே பகிர்கிறார் படத்தின் நாயகன் ரோஷன்.

பள்ளிப் பருவ நினைவுகளை அசைபோடும் விதமாக தமிழில் சமீபத்தில் ‘96’ என்ற திரைப்படம் வந்ததே, பார்த்தீர்களா?

விஜய் சேதுபதி, த்ரிஷா காம்போ படம்னதும் உடனே தியேட்டருக்கு கிளம்பிட்டேன். அதிலும், பள்ளிக்கூட நாட்கள் பற்றிய களமாக இருந்தது செம அனுபவம்.   எனக்கு தமிழில் ரொம்ப பிடித்த இயக்குநர் மணிரத்னம். அந்த வரிசையில் இப்போது ‘96’ இயக்குநர் பிரேம்குமாரையும் பிடிச்சிருக்கு. அந்த படத்தில் எப்படிஉருக உருக காதல் பிரதிபலித்ததோ, அதேபோல ‘ஒரு அடார் லவ்’ படத்திலும் வேறொரு வித்தியாசமான கோணத்தில் காதலும், நட்பும் கலவையாக வெளிப்படும்.

கண் சிமிட்டும் அந்த வைரல் காட்சி ஒன்று போதுமே. நிறைய காதல் அம்புகள் வந்தவண்ணம் இருக்குமே?

பள்ளிக்கூட நாட்களில் இருந்தே எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. படத்தில் வருவதுபோல, நிஜத்திலும் நான் காதலிப்பதாக நண்பர்கள் இப்போதும் என்னை கலாய்ப்பார்கள். ஆனால், உண்மையில் எனக்கு லவ் எதுவும் இல்லை. இப்போதைக்கு சினிமா மேல மட்டும்தான் லவ் அதிகமா இருக்கு. அதுக்காகத்தானே படிப்பையே தியாகம் செய்திருக்கேன்.

என்ன  படிச்சிட்டிருந்தீங்க?

பள்ளிப் படிப்பை முடிச்சுட்டு கல்லூரிக்குள் நுழைந்த நேரத்தில்தான் இந்த பட வாய்ப்பு வந்தது.

அதிலும் நாலைந்து நண்பர்களில் ஒருவனாக இருக்கும் கதாபாத்திரம்தான் கிடைத்தது. ஆரம்பத்தில் எனக்கு காட்சிகளும் அவ்வளவாக இல்லை. நானும், பிரியா வாரியரும் கண்களால் காதல் பரிமாறிக் கொள்ளும் காட்சி யூ-டியூபில் வந்தபிறகு, எல்லாம் மொத்தமா மாறிப்போச்சு. இப்போ நிக்கக்கூட நேரம் இல்லை. எப்படி காலேஜ் போறது? படிப்பை விட்டாச்சு. இனி தொலைத்தூரக் கல்வி திட்டத்தில் சேர்ந்துதான் படிக்கணும். படம் ரிலீஸானதும் அந்த வேலையை தொடங்கலாம்னு இருக்கேன்.

lபிரியா பிரகாஷ் வாரியரும், நீங்களும் பள்ளிக்கால நண்பர்களா?

பலரும் அப்படிதான் நினைக்கிறாங்க. ஆனா, அப்படி இல்லை. முதல் நாள் படப்பிடிப்பின்போதுதான் நாங்க முதன்முதலா பார்த்துக்கிட்டோம். ஆனா, இந்த படம் எங்களை நல்ல நண்பர்கள் ஆக்கிடுச்சு. சமூகவலைதளங்களில் வெளியான  ‘கண்சிமிட்டல்’ வீடியோ காட்சிதான் ‘இவங்க நீண்டகால நண்பர்கள் போல’ என்ற எண்ணத்தை அனைவரிடமும் ஏற்படுத்தியிருக்கு.

தமிழுக்கு எப்போ வரப்போறீங்க?

தமிழ், மலையாளத்தில் தொடர்ந்து கதை கேட்கிறேன். இன்னும் எதுவும் செட் ஆகல. கதையும், கதாபாத்திரமும் மனசுக்கு பிடிக்கணும். குறிப்பாக, கதையின் கேப்டனாக இருக்குறமாதிரி ஸ்கிரிப்ட் அமையணும். அதுக்குள்ள ‘ஒரு அடார் லவ்’ படமும் ரிலீஸ் ஆகிடட்டும்னு காத்திருக்கேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x