Published : 24 Feb 2019 04:09 PM
Last Updated : 24 Feb 2019 04:09 PM
விஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா ’பயோபிக்’கிற்கு 'தலைவி' என்று பெயரிட்டுள்ளது படக்குழு.
அதிமுக கட்சிக்கு பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்தவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கான முயற்சி பட்டியலில் இயக்குநர் பாரதிராஜா, விஜய் மற்றும் ப்ரியதர்ஷினி ஆகியோர் இருந்தனர்.
இன்று (பிப்.24) ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் இயக்கவுள்ள ஜெயலலிதாவின் பயோபிக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. 'தலைவி' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு 'பாகுபலி' கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் இணை கதாசிரியராக பணிபுரியவுள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.
மதன் கார்க்கி பாடல்கள் எழுத, விப்ரி மீடியா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இதற்காக கடந்த 9 மாதங்களாக முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு.
ஜெயலலிதா பயோபிக்கிற்காக, அவரது அண்ணன் மகன் தீபக்கிடம் முறையாக தடையில்லா சான்றிதழும் பெற்றுள்ளது படக்குழு. இப்படம் குறித்து இயக்குநர் விஜய் கூறியிருப்பதாவது:
'தலைவி' என்ற தலைப்புக்கு அவரை விட யார் பொருத்தமாக இருக்க முடியும். "தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாகிறார்கள்" என்ற ஒரு புகழ்பெற்ற மேற்கோள் உள்ளது. ஜெயலலிதா மேடம் அத்தகைய தத்துவத்திற்கும் அப்பாற்பட்டவர்.
அவர் பிறப்பிலேயே அத்தகைய தலைமைப் பண்புகளை பெற்றவர். அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, அனுபவம் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவை ஒரு தலைவரை உருவாக்கும் குணங்கள் என்றால், அவர் பிறப்பிலேயே அந்த குணங்களை பெற்றவர். இந்த குணாதிசயங்களால் தான் நாம் அனைவரும் அவரை 'அம்மா' என்று வணங்குகிறோம்.
இத்தகைய உயர்ந்த தலைவரின் தைரியமே என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் தான் இந்த படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தவுடனேயே எந்த யோசனையும் இல்லாமல் ஒப்புக் கொண்டேன். மிக நேர்மையான ஒரு வரலாற்று படமாக இதை கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது, அதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன்.
இவ்வாறு இயக்குநர் விஜய் தெரிவித்துள்ளார்.
'தலைவி' படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கு ஏற்றார்போல் நடிகர்களைத் தேர்வு செய்து வருகிறது படக்குழு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT