Published : 04 Feb 2019 05:04 PM
Last Updated : 04 Feb 2019 05:04 PM
தமிழகத்தின் வசூலில் புதிய மைல்கல்லை 'விஸ்வாசம்' எட்டும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
ஜனவரி 10-ம் தேதி ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்துடன் போட்டியிட்டு வெளியானது அஜித் நடித்த 'விஸ்வாசம்'. சிவா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நயன்தாரா, ஜெகபதி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்தனர்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக பி மற்றும் சி சென்டர்கள் என கூறப்படும் தமிழகத்தின் கிராமப்புற பகுதிகள் எதிர்பாராத வரவேற்பு கிடைத்தது. பிப்ரவரி 1-ம் தேதி வெளியான படங்களை விட பல பகுதிகளில் 'விஸ்வாசம்' வசூலே அதிகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக 'விஸ்வாசம்' படத்தை வெளியிட்ட சில விநியோகஸ்தர்களிடம் பேசினோம். அப்போது அவர்கள் கூறியதாவது:
உண்மைதான். 'விஸ்வாசம்' படத்தை வெளியிட்ட அனைத்து விநியோகஸ்தர்களுக்குமே நல்ல லாபம் சம்பாதித்து கொடுத்துள்ளது. இந்தாண்டு விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்குமே சந்தோஷமான துவக்கமாக அமைந்துள்ளது. 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' இரண்டுமே நல்ல வசூல் தான். ஆனால், 'விஸ்வாசம்' தான் அதிகம்.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 'விஸ்வாசம்' ஓடி முடியும்போது, கண்டிப்பாக தமிழ்த் திரையுலகில் விநியோகஸ்தர்களுக்கு அதிகப்படியான ஷேர் தொகை அளித்த படங்களின் பட்டியலில், முதல் 5 இடத்துக்குள் 'விஸ்வாசம்' இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.
'பாகுபலி 2', 'சர்கார்', 'மெர்சல்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'விஸ்வாசம்' படம் இடம்பெறும் என நம்புகிறோம். இதில் 'மெர்சல்' படத்தின் வசூலை முந்தினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. இப்போது வரை வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது.
மேலும், அப்படத்தின் தமிழக உரிமையை வாங்கிய விநியோகஸ்தருக்கு கொடுத்த பணத்துக்கு மேல் வந்து, அதிலிருந்து தயாரிப்பாளருக்கு பங்கு கொடுக்கும் அளவுக்கு 'விஸ்வாசம்' வசூல் அமைந்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT