Published : 28 Feb 2019 02:52 PM
Last Updated : 28 Feb 2019 02:52 PM
'எல்.கே.ஜி' படம் தொடர்பாக தனக்குக் கிடைத்த வரவேற்புகள் குறித்து நாஞ்சில் சம்பத் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
ஆர்ஜே பாலாஜி நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் 'எல்.கே.ஜி'. பிப்.22-ம் தேதி வெளியான இப்படத்தில் ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், சந்தான பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் வெளியான 3 நாட்களிலேயே அனைத்து தரப்புக்கும் லாபத்தை ஈட்டியுள்ளது. இந்த சந்தோஷத்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு.
இதில் 'எல்.கே.ஜி' படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:
''பெருமிதமான மனநிலையில் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். இப்படி ஒரு இடத்துக்கு வருவேன் என்று கனவிலும் விட கருதியதில்லை, ஆசைப்பட்டதுமில்லை. ஏதோ புதிய உலகத்திற்குள் பிரவேசித்தது போல் எனக்கொரு பரவசம்.
என் நிலையைத் தெரிந்துகொண்டு பாலாஜி என்னைத் தேடி வந்தது போல் இருந்தது. 9 நாள் படப்பிடிப்பு புது அனுபவமாக இருந்தது. எனக்கென்று நண்பர்கள் கிடையாது. என் தொலைபேசியில் கூட யாருடைய நம்பரும் பதிந்திருக்க மாட்டேன். யாரிடமும் நெருங்கிப் பழகுவதில்லை. எப்போதுமே படித்துக் கொண்டும், வாசித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கும் ஒரு கேரக்டர் நான்.
முதல் நாள் முதல் காட்சி ரோகிணி திரையரங்கில் முடிந்து வெளியே வந்தபோது, என்னைச் சூழ்ந்த இளைஞர்களைக் கண்டபோது புதிதாக பிறந்தது போல உணர்ந்தேன். என் ஊர் ஒரு குக்கிராமம். முன்பு, நான் வீட்டில் இருந்தால் கூட யாருக்கும் தெரியாது. இப்படம் வெளியானவுடன் என் ஊருக்குச் சென்றவுடன் ஒரு வரவேற்பு கொடுத்தார்கள். நான் அழுதுவிட்டேன்.
நானே தலைக்கனம் கொண்டவன். சினிமாவில் உள்ளவர்களும் தலைக்கனம் கொண்டவர்கள் எனச் சொல்வார்கள். ஆகையால் முட்டிக்கிடுமோ என்று எண்ணினேன். ஆனால், படப்பிடிப்பில் ரொம்ப இயல்பாகவே பழகினார்கள். விமானம், ரயில், பேருந்து, வாக்கிங் என போகும் போது என் தமிழ் ஆளுமைக்காக என்னோடு செல்ஃபி எடுக்க தம்பிமார்கள் வருவார்கள். இன்றைக்கு அந்த செல்ஃபி எண்ணிக்கை கூடியிருக்கிறது. அதற்குக் காரணம் 'எல்.கே.ஜி'
எனக்கு ஏற்கெனவே 10 பிள்ளைகள். இப்போது ஆர்.ஜே.பாலஜி 11-வது பிள்ளையாக கிடைத்திருக்கிறார். இந்தப் பிள்ளையில் ஒவ்வொரு அங்குலம் வளர்ச்சிக்கும் என்னால் உதவ முடியாது. ஆனால், அதைப் பார்த்து நான் பெருமைப்படும் அளவுக்கு இன்னொருவர் பெருமைப்பட முடியாது''.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT