Published : 02 Feb 2019 06:03 PM
Last Updated : 02 Feb 2019 06:03 PM
மனித உறவுகளைப் பற்றிய படம் ’கண்ணே கலைமானே’ என்று அப்படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கண்ணே கலைமானே'. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
பிப்ரவரி 22-ம் தேதி வெளியாகவுள்ள இப்படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
''இப்படத்தின் அனைத்துப் பெருமைகளுமே இயக்குனர் சீனு ராமசாமியைத் தான் சாரும். பல கிராமம் சார்ந்த படங்களைப் பார்த்திருப்போம். ஆனால், அதிலிருந்து சீனு ராமசாமி சார் எப்போதும் தனித்துவமான கதைக்களத்தைத் தேர்ந்தெடுப்பார்.
அவர் உருவாக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் மோதல்கள் உண்மையான வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. எதிர்காலத்தில் சீனு சார் படங்களில் நடிக்கிறேனோ இல்லையோ, ஆனால் அவர் தயார் செய்யும் கதையை முதல் ஆளாகக் கேட்க விரும்புகிறேன். ஏனென்றால் அதுவே ஒரு அழகான செயல்முறை. அவர் மெதுவாக அவரது உலகிற்குள் நம்மைக் கடத்தி விடுவார். அவரது கதாபாத்திரங்கள் உடன் நாம் பயணித்த அனுபவத்தை அளிக்கும்.
ஆரம்பத்தில், சீனு ராமசாமி சார் எனக்கு வேறு ஒரு கதையைச் சொன்னார். அதில் என் கதாபாத்திரம் மிகவும் கட்டுமஸ்தான உடலமைப்பைக் கோரியது. அந்த தோற்றத்தைக் கொண்டு வர சுமாராக 4-5 மாதங்கள் ஆகும் என இருவருமே உணர்ந்தோம். என்னை விடவும் அதிகமாக, சீனு சார் எப்போதும் மிகவும் எளிதில் சமரசம் செய்து கொள்ளாத ஒரு கலைஞர்.
மற்ற சில காரணங்களாலும் படத்தை சீக்கிரமே ஆரம்பிக்க வேண்டியிருந்தது. அப்போது தான் அவர் எனக்கு 'கண்ணே கலைமானே' கதையைச் சொன்னார். இந்தப் படம் எனக்கு ஒரு ஸ்பெஷலான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
தமன்னா ஒரே டேக்கில் நடிக்கக்கூடிய நடிகை. அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் சவாலாக இருந்தது. படத்தில் நிறைய உணர்ச்சிகரமான காட்சிகள் உள்ளன. தமன்னா அதை மிக எளிதாகச் செய்தார். ஒருவேளை, அவர் ஏற்கெனவே சீனு ராமசாமி படத்தில் நடித்ததனால் அவருக்கு எளிதாக இருந்திருக்கும் என நினைத்துக் கொண்டேன். பல காட்சிகளிலும் அவர் சிங்கிள் டேக்கில் நடித்ததைப் பார்த்து நான் மிகவும் வியப்படைந்தேன்.
இந்தப் படத்தின் நாயகன் கரிம வேளாண்மையை நம்புகிற விவசாயி. அதைத் தாண்டி வெளியில் வரும் செய்திகள் போல இது விவசாயப் பிரச்சினைகளைப் பேசுகிற படம் அல்ல. நல்ல மனதுடைய நேர்மையான வாழ்க்கை வாழும் இருவர் சந்தித்துக் கொள்ளும் போது என்ன நடக்கிறது என்பது பற்றிய படம். எளிய வார்த்தைகளில் சொல்வதென்றால் 'கண்ணே கலைமானே' மனித உறவுகளைப் பற்றிய படம்''.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT