Last Updated : 07 Feb, 2019 09:01 AM

 

Published : 07 Feb 2019 09:01 AM
Last Updated : 07 Feb 2019 09:01 AM

‘நடிக்க அழைப்பு வந்தது.. பயமும் வந்தது’ - ‘அசுரன்’ படத்தில் நடிப்பது பற்றி பாலாஜி சக்திவேல் நெகிழ்ச்சி

சாகித்ய அகாடமி விருதுபெற்ற நாவ லாசிரியர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை மையமாகக் கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் ‘அசுரன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நாவல் ஒரு சிறுவன் செய்த கொலைப் பின்னணியிலான காரணங்களைக் களமாகக் கொண்டது. தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் தற்போது படப்பிடிப்பு நடைபெறும் இப்படத்தில், முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் நடிகராக அறிமுகமாகிறார். ‘‘இது எப்படி நடந்தது?’’ என்ற கேள்வியோடு இயக்குநர் பாலாஜி சக்திவேலை சந்தித்தோம். அவர் கூறியதாவது:

‘‘அது என்னமோ தெரியலை. என்னாலயே இன்னும் நம்ப முடியலை. வெற்றிமாறன் கண்களுக்கு நான் நடிகனாகத் தெரிந்திருக்கிறேன். இதை என்னிடம் அவர் சொன்னபோது, ‘‘என்னங்க இதெல்லாம் சரியா இருக்குமா?’’ என்றுதான் கேட்டேன். ‘‘இந்தக் கதையில் நான் நினைக்கிற இடத்துக்கு நீங்க பொருத்தமானவராக இருப்பீங்க!’’ என்று உறுதியாகப் பேசினார். சர்வதேச கவனத்தை ஈர்த்த இயக்குநர் அவர். என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். ஒரு படத்தை நான் இயக்கும்போது அச்சப்பட்டதே இல்லை. ஆனால் ஒரு நடிகனாக அறிமுகமாகும்போது பயம் ஏற்படுகிறது. எல்லோருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்திசெய்ய வேண்டும் என்கிற பயம் அது. அதுவும் தனுஷ், மஞ்சு வாரியர், கலைப்புலி தாணு தயாரிப்பு என்று, ஒரு பெரிய பட்டாளத்தோடு இணையும் போது எனக்குள்ளே இருக்கும் அந்த பயம் இன்னும் கூடுதலாகிறது. அந்த பயம் என்னை காப்பாற்றவும் வேண்டும்.

நீங்கள் நடிக்கப்போகும் பகுதிக்கான படப்பிடிப்பு தொடங்கி விட்டதா?

எனக்கான டிரெஸ்ஸிங் எல்லாம் அளவு எடுத்து தைக்கிற வேலை தொடங்கியாச்சு. படப்பிடிப்புக்கு கிளம்ப வேண்டியதுதான் இதுக்கு இடையில் ‘யார் இவர்கள்?’ படத்தைத் தொடர்ந்து நான் இயக்கிக்கொண்டிருக்கும் படத்தின் வேலைகளும் தொடர் கிறது. சமீபத்தில் நடந்த ‘இளையராஜா 75’ நிகழ்ச் சிக்காக 2 நாட்கள் இடைவெளிவிட்டிருந்தோம். இப்போது திரும்பவும் தொடங்கியாச்சு.

‘சாமுராய்’, ‘காதல்’, ‘கல்லூரி’, ‘வழக்கு எண் 18/9’ படங்கள் வழியே பல கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திய இயக்குநர் பாலாஜி சக்திவேல் எப்போதோ நடிகனாகியிருக்கலாமே?

‘கல்லூரி காலம்’ முடிந்தபிறகு உள்ள அரியர்ஸ் தேர்வுகள் எழுதுவது மாதிரிதான் நான் இதையும் சொல் லணும். இதெல்லாம் எப்படி நிகழ்ந்தது என்று என்னாலேயே நம்ப முடியலை. வெற்றிமாறன் ஒரு விஷயத்தை தொடும்போது அதில் கண்டிப்பாக ஓர் அர்த்தம் இருக்கும். அந்த நம்பிக்கையும் இப்போது நான் நடிக்க ஒரு காரணம்.

நடிகனாக தொடர்வீர்களா?

முதலில் ‘அசுரன்’ படத்தில் நடித்து எனது பயத்தில் இருந்து எழுந்துகொள்கிறேன். அதற்கு அப்புறம் நடிப்பில் தொடர்வதைப் பற்றி யோசிக்கலாமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x