Published : 14 Feb 2019 09:17 PM
Last Updated : 14 Feb 2019 09:17 PM
சென்னையை உலுக்கிய போஸ்டர் சர்ச்சைத் தொடர்பாக அப்படத்தின் இயக்குநர் ஆனந்தராஜ் மற்றும் விஜய்சேதுபதி விளக்கம் அளித்துள்ளனர்.
இன்று (பிப்.14) சென்னை சாலை முழுக்க '---------- போட ஒரு பொண்ணு வேணும்?' என்ற விளம்பரப் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. சாலையில் கடப்பவர்கள் பலரையும் இப்போஸ்டர் முகம் சுழிக்க வைத்தது.
ஆனந்தராஜ் என்ற இயக்குநர் இயக்கியுள்ள 'கடலை போட ஒரு பொண்ணு வேணும்?' என்ற படத்தை விளம்பரப்படுத்த இம்மாதிரியான போஸ்டரை ஒட்டியுள்ளது படக்குழு. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காலை 11 மணியளவில் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவதாக இருந்தார்.
இப்போஸ்டர் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி பக்கம் இப்பிரச்சினைத் திரும்பியது. இந்த சர்ச்சைத் தொடர்பாக விஜய்சேதுபதி கூறியிருப்பதாவது:
அப்படத்தின் இயக்குநர் எங்களுடன் 'பெண்' நாடகத்தில் இணைந்து பணியாற்றினார். இப்படத்துக்கு முன்பாக 2 படங்களுக்கு பூஜை போட்டார். ஆனால் வெளியாகவில்லை. 3-வது படம் தொடங்கியிருப்பதாகச் சொல்லி "அண்ணே.. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் பண்ண முடியுமா" என்று கேட்டார். நன்றாக இருக்கட்டுமே என்று நினைத்து பண்ணினேன். ஆனால், விளம்பரத்துக்காக இப்படியொரு போஸ்டர் ஒட்டப்படும் என்று எனக்குத் தெரியாது.
இதற்காக அந்த இயக்குநரை அழைத்து திட்டினேன். இனி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிடுவதே நிறுத்திவிடலாம் என்று தோன்றுகிறது. சிலர் வியாபாரத்துக்காக செய்யும் வேலை, எத்தனையோ பேரின் மனதை புண்படுத்துகிறது என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். இப்படிப்பட்ட வேலைகளைச் செய்கிறவர்கள் இருந்துக் கொண்டே தான் இருப்பார்கள்
இவ்வாறு விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.
இந்தச் சர்ச்சைத் தொடர்பாக படத்தின் இயக்குநர் ஆனந்தராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் "இந்தப் போஸ்டர் நாயகன் தரப்பிலிருந்து விளம்பரப்படுத்த செய்துள்ளனர். இதற்கும் விஜய்சேதுபதிக்கும் சம்பந்தமில்லை. இந்த விஷயத்துக்காக மன்னிப்புக் கோருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT