Published : 20 Feb 2019 03:27 PM
Last Updated : 20 Feb 2019 03:27 PM
மீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாகவும், அது தான் அஜித்தின் 60-வது படமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
'விஸ்வாசம்' படத்தைத் தொடர்ந்து, 'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கத் தொடங்கியுள்ளார் அஜித். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.
வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்து வருகிறார்கள்.இப்படம் மே 1-ம் தேதி வெளியீடு என்று அறிவித்துள்ளது படக்குழு. இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
இப்படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் 'AK60' படத்தின் இயக்குநர் யார் என்று பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன. இதையும் போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.
சமீபத்தில் வெங்கட் பிரபு பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது, "விரைவில் அஜித் படத்தை இயக்குவேன்" என்று பேசினார். இதனைத் தொடர்ந்து 'AK60' படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு தான் என்று பலரும் ட்வீட் செய்யத் தொடங்கினார்கள். இது 'மங்காத்தா 2' என்றும் சிலர் தெரிவித்தனர்.
இது குறித்து விசாரித்த போது, "இப்போதைக்கு 'பிங்க்' ரீமேக்கில் மட்டுமே அஜித் கவனம் செலுத்தி வருகிறார். அவரது அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை" என்று தெரிவித்தனர்.
ஆனால், ஹெச்.வினோத் தான் அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் இயக்குவதில் முதலிடத்தில் உள்ளார் என்று திரையுலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் எந்தவொரு படத்தின் ரீமேக்கும் இல்லாமல், அவரது ஒரிஜினல் கதையாகவே அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT