Published : 18 Feb 2019 11:22 AM
Last Updated : 18 Feb 2019 11:22 AM
''முதல் 12 படங்களில் பின்னணி இசை விஷயத்தில் திணறினேன். கொஞ்சம் பயந்தேன்'' என்று இளையராஜா மனம் திறந்து பேசினார்.
இளையராஜா 75 எனும் நிகழ்ச்சி, தனியார் சேனலில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் ஆர்.சுந்தர்ராஜன், எஸ்.பி.முத்துராமன், ஆர்கே.செல்வமணி, பார்த்திபன், பாண்டியராஜன், சந்தானபாரதி, கே.எஸ்.ரவிகுமார், கேயார், பி.கண்ணன், மிஷ்கின், லெனின் பாரதி முதலானோர் கலந்துகொண்டு, இளையராஜாவுடன் உரையாடினர்.
இந்த நிகழ்ச்சியை, நடிகை ரோகிணி தொகுத்து வழங்கினார்.
அப்போது, ‘ரீப்பீட் இசையைக் கொடுக்காமல் ஆயிரம் படங்களுக்கு இசையமைத்தீர்களே. அது எப்படி?’ என்று இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கேட்டார்.
அதற்கு இளையராஜா பதிலளித்ததாவது:
''ரீப்பீட் இல்லாமல் இசை என்பது உங்களைப் போன்ற இயக்குநர்களால்தான் சாத்தியமாயிற்று. இப்படித்தான் இசையமைக்க வேண்டும் என்ற முடிவை நான் எடுப்பதில்லை. இசைதான் அதைத் தீர்மானிக்கிறது.
திரையுலகிற்கு நான் வந்த போது, இப்படி இப்படியெல்லாம் இசையமைக்கவேண்டும் என்று கற்பனை செய்து வைத்திருந்தேன். ஆனால் இங்கே தொழில் இசை என்பது மட்டுமே இருந்தது. அதை மட்டுமே பண்ண முடிந்தது. தொழில் இசைக்கும் என் கற்பனை இசைக்கும் நடுவே நான் பணியாற்றி வந்தேன்.
அதுமட்டுமல்ல… பின்னணி இசை என்று சொல்லப்படுகிற பிஜிஎம்மில் என்னால் என்ன செய்வது, எப்படிப் பண்ணுவது என்றே புரிபடவில்லை. என்னுடைய முதல் 12 படங்கள் வரை பிஜிஎம் விஷயத்தில் நான் திணறினேன். பின்னணி இசையில் எனக்கிருந்த கற்பனையை இங்கே சினிமாவுக்குள் செய்ய முடியுமா என்று பயந்தேன். ’இவனுக்குப் பாட்டு வேணா நல்லா வரும். ஆனா பின்னணி இசை போடத்தெரியாதுபோல என்று நினைத்துவிடுவார்களோ என்று பயந்தேன்.
இப்படி பயத்துடனும் திணறலுடனும்தான் என் முதல் 12 படங்கள் இருந்தன. அந்தப் படங்களை இப்போது பார்த்தால், அதை உங்களால் உணரமுடியும்.
’அன்னக்கிளி’ படத்துக்கு பஞ்சு அருணாசலம், என்னை முழு சுதந்திரமாக இசையமைக்க வைத்தது போல், ’16 வயதினிலே’ படத்தில் அப்படியொரு சுதந்திரம் கிடைத்தது எனக்கு. அந்தப் படத்தில்தான் பின்னணி இசையில், நான் கற்பனை செய்து வைத்திருந்த இசையை, தொழில் இசையாகக் கொடுத்தேன்.
அதையடுத்து வந்த படங்களிலும் பிஜிஎம்மில் அப்படியே கையாளத் தொடங்கினேன்''.
இவ்வாறு இளையராஜா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT