Last Updated : 31 Jan, 2019 01:02 PM

 

Published : 31 Jan 2019 01:02 PM
Last Updated : 31 Jan 2019 01:02 PM

’பெண் பார்க்க, காவி வேஷ்டியோட வந்தார் கேப்டன்!’

விஜயகாந்த் திருமணநாள் இன்று

சின்ன விஷயமாக இருந்தால் கூட, அதை பெரிய கொண்டாட்டமாக்கிவிடுகிற மனசுக்காரர் விஜயகாந்த். கொடுத்தே பழக்கப்பட்டவருக்கு, இந்த நாளும் கிழமையும் கொண்டு, எல்லோருக்கும் ஏதாவது கொடுத்து மகிழ்கிற குணம் அவருடையது. அமெரிக்காவில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், எளிமையாகக் கொண்டாடியிருக்கிறார் தனது திருமண நாளை!

ஜனவரி 31-ம் தேதி இன்று விஜயகாந்த் - பிரேமலதா தம்பதியின் திருமண நாள். 1990-ம் ஆண்டு நடைபெற்றது திருமண வைபவம்.

காலேஜ் முடித்த நிலையில் இருந்த பிரேமலதாவை, விஜயகாந்த் வீட்டார் வந்து பெண் பார்த்தார்கள். ரொம்பவே பிடித்துப்போய்விட்டது. ‘பொண்ணு மகாலச்சுமியாட்டம் இருக்குதுப்பா. நீ ஒரு எட்டு போய் பாத்துட்டு, பிடிச்சிருக்குன்னு சொன்னீன்னா கண்ணாலத்தை நடத்திப்புடுவோம்’ என்று விஜயகாந்திடம் சொல்ல, அவரும் பெண் பார்க்கச் சென்றார்.

‘’அவர் நடிச்ச பல படங்களைப் பாத்திருக்கேன். எனக்கும் எங்க வீட்டுக்கும் அவரைப் புடிச்சுப் போச்சு. அவங்க வீட்லயும் என்னைப் பிடிச்சிருச்சு. இப்ப, அவர் பாத்துட்டு என்ன சொல்லப்போறாரோனு ஒரு டென்ஷன் எல்லாருக்குமே!

வந்தார். முதன்முதல்ல அவரைப் பாத்தேன். அதுவும் எப்படி? அவரை காவி வேஷ்டிலதான் பாத்தேன். அப்ப, சபரிமலைக்கு மாலை போட்ருந்தார். அவரோட எளிமை, பந்தாவோ அலட்டலோ இல்லாத பேச்சு, பெரியவங்ககிட்ட காட்டின மரியாதை, வயசு வித்தியாசம் இல்லாம எல்லார்கிட்டயும் நடந்துக்கிட்ட பணிவு. இதெல்லாமே எல்லாருக்குமே அவரைப் பிடிச்சுப்போச்சு.

அதேபோல, அவருக்கும் பிடிச்சுப்போச்சு. அப்புறம் ஜனவரி 31-ம் தேதி கல்யாணம் ஆச்சு. ஒரு திருவிழா மாதிரி நடந்துச்சு. அதை எத்தனை வருஷமானாலும் மறக்கவே முடியாது.

நடிகர் விஜயகாந்தா அறிமுகமானார். அப்புறம் கணவரானார். பிறகு எல்லாரைப் போலவே எங்களுக்கும் அவர் கேப்டன்தான்’’ என்று பிரேமலதா விஜயகாந்த், எப்போதோ ஒரு திருமண விழாவில் சொன்னார்.

இப்போது விஜயகாந்த் - பிரேமலதா தம்பதிக்கு திருமணமாகி 29 வருடங்களாகிவிட்டன.

அமெரிக்காவில் சிகிச்சை இப்போது. பிரேமலதாவும் மகன்களும் அப்பாவை, ஒரு குழந்தையைப் போல பார்த்துக்கொள்கிறார்கள். சீக்கிரமே பூரண குணமாகி, பழைய கேப்டனாக வலம் வரவும் இந்தத் திருமண நாளில் சேர்த்து வாழ்த்துவோம்!

கேப்டன் தம்பதிக்கு திருமண நாள் வாழ்த்துகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x