Published : 24 Sep 2014 11:11 AM
Last Updated : 24 Sep 2014 11:11 AM
‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் தமிழகம் முழுவதும் விரைவில் வெளியாக உள்ளது.
பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.பந்துலு தயாரித்து, இயக்கி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்து 1965-ம் ஆண்டு வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம், கடந்த மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் 49 ஆண்டுகளுக்கு பி்ன் வெளியானது.
சென்னையில் சத்யம், ஆல்பட் திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடியதற்காக வெள்ளி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கி, நடித்த பல படங்களையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடும் முயற்சிகள் நடக்கின்றன. எம்.ஜி.ஆர். நடித்து 1973-ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் அதிநவீன டிஜிட்டல், ஒலி, ஒளி தொழில்நுட்பத்தில் தமிழகம் முழுவதும் விரைவில் வெளியாகிறது.
திண்டுக்கல் சோலைமகால் திரையரங்கு உரிமையாளர் நாகராஜன் இந்தப் படத்தை வெளியிடுகிறார். அதற்கு முன்னோட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் படத்தின் டிரெய்லர் விரைவில் காண்பிக்கப்படவுள்ளது.
‘பச்சைக்கிளி முத்துச்சரம்...,’ ‘தங்கத் தோணியிலே...’ போன்ற இனிய பாடல்களுடன், ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் படமாக்கிய ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை வரவேற்க எம்.ஜி.ஆர். ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இதுகுறித்து அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநலச்சங்கத்தின் செயலாளர் பேராசிரியர் செள.செல்வகுமார் கூறுகையில், ‘‘ஆயிரத்தில் ஒருவனின் வெற்றியால் உற்சாகமடைந்துள்ள நாங்கள், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.
மய்யம் இணையதளத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்ற திரியை (thread) முன்னின்று நடத்தி வரும் எஸ்.வினோத் கூறுகையில், ‘‘இந்த திரைப்படம் வெளியானபோது பார்த்து ரசித்தவர்களுக்கு இப்போது வயதாகியிருக்கலாம். ஆனால், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்றும் வாலிபன்தான்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT