Last Updated : 10 Jan, 2019 01:21 PM

 

Published : 10 Jan 2019 01:21 PM
Last Updated : 10 Jan 2019 01:21 PM

விஸ்வாசம் விமர்சனம்- பாசம், நேசம், விஸ்வாசம்!

மகளின் கனவை நிறைவேற்ற, அவரின் உயிரைக் காக்க, உறுதுணையாக இருந்து, வெற்றி பெறச் செய்யும் தந்தையின் கதைதான் விஸ்வாசம். இந்தக் கதைக்குள் காமெடி, அடிதடி, காதல், குடும்பம், பாசம், நேசம் என அனைத்தையும் சேர்த்து, ஒரு பக்கா பொழுதுபோக்கு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள் அஜித் மற்றும் சிவா குழுவினர்.

 

திருவிழா நடத்தக்கூடாது என்று ஒரு தரப்பு சொல்ல, நடத்தவேண்டும் என்று இன்னொரு தரப்பு சொல்ல, அங்கே தூக்குதுரை (அஜித்) என்ட்ரி. திருவிழா நடக்க முகூர்த்தக்கால் நடும் போது, எல்லோரும் தம்பதி சமேதராக வந்து பூஜையில் கலந்துகொள்கின்றனர். ஆனால் தூக்குதுரை மட்டும் தனியே நிற்கிறார். குடும்பத்தினரும் உறவினர்களும் நண்பர்களும் சொல்ல, திருவிழாவில் கலந்துகொள்ள மனைவி நிரஞ்சனாவை (நயன்தாரா) அழைக்கச் செல்கிறார். அப்படியே ப்ளாஷ்பேக்கிற்குள் நம்மை அழைத்துச் செல்கிறார் இயக்குநர்.

 

அடிதடி, ஜாலி, கேலி என்று கிராமத்தில் தூக்குதுரை அலப்பறையைக் கொடுத்துக் கொண்டிருக்க, அங்கே டாக்டர் நிரஞ்சனா மருத்துவ முகாமிற்காக வருகிறார். முதல் சந்திப்பில் மோதல், பிறகு அதுவே காதலாகிறது. அது திருமணமாகவும் மலர, பெண் குழந்தையும் பிறக்கிறது.

 

ஆனால், ஒருகட்டத்தில், மகளை அழைத்துக் கொண்டு கணவரிடம் இருந்து  தன் சொந்த ஊரான மும்பைக்குச் சென்றுவிடுகிறார். திருவிழாவுக்காக, மனைவியையும் குழந்தையையும் தன் சகாக்களுடன் அழைப்பதற்காக, பத்துவருடங்கள் கழித்து மனைவியைப் பார்க்க மும்பை செல்கிறார். அங்கே மகளுக்கு நேரும் பிரச்சினைகள், ஆபத்துகளை உணர்ந்த அஜித், அந்தப் பிரச்சினைகளில் இருந்தும் ஆபத்துகளில் இருந்தும் எப்படி மகளைக் காக்கிறார், மகளுக்கு ஏற்படுகிற ஆபத்து எதனால், மகளுக்கு அப்பாவைத் தெரிந்ததா, மனைவி மனம் மாறினாரா, எல்லோரும் ஒன்று சேர்ந்தார்களா, திருவிழாவில் கலந்துகொண்டார்களா என்பதை, கலகல கமர்ஷியல் பொழுதுபோக்கு என கலந்துகட்டி கட்டமைத்திருப்பதுதான் விஸ்வாசத்தின் திரைக்கதை.

 

தூக்குதுரை அஜித், ரசிகர்களுக்கு நிச்சயம் புதுசு. படம் முழுக்க வேஷ்டி, முறுக்கு மீசை, மதுரை ஸ்லாங் என புது மாடுலேஷனும் பாடி லாங்வேஜுமாக வெளுத்து வாங்குகிறார். ரோபோ சங்கருடனும் தம்பி ராமையாவுடன் நடுவே யோகிபாபுவுடனும் சேர்ந்து செய்யும் அலப்பறைகளுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. அஜித் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் படம் பார்க்கிறவர்களுக்கும் தூக்குதுரையை பிடித்துப் போய்விடும். முக்கியமாக, படம் நெடுக அவர் பேசுகிற இங்கிலீஷுக்கு தியேட்டரே குலுங்கிச் சிரிக்கிறது.

 

முதல் பாதி முழுக்க அடிதடி, காமெடி, காதல் ரவுசு என அதகளம் பண்ணும் தூக்குதுரையாகவும் பிற்பாதியில் மகளுடனே இருந்துகொண்டு பாசத்துக்கு ஏங்கி மருகுகிற அன்பான அப்பாவாகவும் நடிப்பிலும் புதியதொரு பாய்ச்சலைக் காட்டியிருக்கிறார் அஜித்.

 

தூக்குதுரையின் மனைவி டாக்டர் நிரஞ்சனாவாக, நயன்தாரா. ஆரம்பத்தில் தூக்குதுரையின் மீது போலீசில் புகார் கொடுப்பதும் பிறகு கொஞ்சம்கொஞ்சமாக அவரைப் புரிந்துகொள்வதும் அப்பாவை அழைத்து வந்து, மாப்பிள்ளை கேட்பதும் மகளைக் கொஞ்சுகிற கணவனைப் பார்த்து வியந்து நெகிழ்வதும் ஒருகட்டத்தில் கணவரை விட்டுப் பிரிந்து, மகளை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்குச் செல்லும் தருணத்திலும் என கனமான நாயகி வேடம் நயனுக்கு. கிடைக்கும் தருணங்களிலெல்லாம் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.

 

'என்னை அறிந்தால்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஒளிர்ந்த அனிகா, அஜித் – நயனின் மகளாக, ஸ்வேதாவாக நடித்திருக்கிறார். பயம், ஆர்வம், கலவரம், கவலை, கோபம், மரண பீதி என மொத்தத்தையும் எங்கெங்கு எவ்வளவு எக்ஸ்பிரஷன்கள் கொடுக்கமுடியுமோ அதை சரியே செய்து அசத்திவிடுகிறார்.

 

அஜித் – அனிகா வரும் காட்சிகளிலெல்லாம், படம் பார்க்கும் அப்பாக்களும் மகள்களும் சட்டென்று கண்ணீர் கசிந்துவிடுவார்கள். அஜித் தன் நடிப்பால், பல இடங்களில் கைதட்டல்களையும் அவரின் இங்கிலீஷ் பேச்சால், விசில் சத்தத்தையும் பெறுகிறார். அஜித்துக்கு செம மாஸ் படம் இது.

இமானின் இசை படத்தின் பலத்தை இன்னும் கூட்டுகிறது. பாடல்களில் பட்டையைக் கிளப்பிய இமான், பின்னணி இசையில், கவனம் ஈர்க்கிறார். வேட்டி கட்டு, தூக்குதுரை பாடல்கள் தெறி ரகமென்றால், டூயட்டும் கண்ணான கண்ணேவும் மெலடி அன்பு.

 

படத்தின் அடுத்த பலம் ஒளிப்பதிவாளர் வெற்றி. திருவிழாவில் தொடங்கும் கதை என்பதாலோ என்னவோ, படத்தின் முதல் பாதி முழுக்க திருவிழா மூடு வருவது போல், வண்ணங்கள் கூட்டி, ஜாலங்கள் செய்திருக்கிறார். கிராமத்து வயல்களையும் வாய்க்கால்களையும் பாலங்களையும் அழகாக, கேமரா வழியே புகுத்தி, நமக்குள் அந்த அழகைக் கடத்திவிடுகிறார் வெற்றி. பிற்பாதியில் மும்பையின் அழகையும் ஜன நெரிசலையும் சாலைகளையும் பர்த்டே கொண்டாட்ட குதூகலங்களையும் வெகு அழகாகப் படமாக்கியிருக்கிறார். அதேபோல் ரூபனின் எடிட்டிங்கும் கச்சிதம். பாடல்களிலும் சண்டைக்காட்சிகளிலும் இவரின் பங்கு பிரமிக்க வைக்கிறது.

 

முதல்பாதியில் ரோபோசங்கர், தம்பி ராமையா, யோகிபாபு ஆகியோருடன் சேர்ந்து காமெடி சரவெடிகளைக்  கொளுத்திப் போடும் அஜித், பிற்பாதியில் மும்பையில் விவேக்கையும் சேர்த்துக்கொண்டு, அதகளம் பண்ணுகிறார். ஜெகபதிபாபுவின் கோபமும் மிரட்டலும் நச்சென்று இருக்கிறது. டீசன்ட் வில்லன்.

 

அழகான கதையை எடுத்துக்கொண்டு, அதற்கு வில்லில் அம்பு தொடுக்கும் விதமான திரைக்கதை அமைத்து, காமெடி ப்ளஸ் பஞ்ச் ப்ளஸ் சென்டிமென்ட் வசனங்களையெல்லாம் அந்தந்த மூடுக்குத் தக்கபடி, எமோஷனல் கோட்டிங்கையும் சேர்த்து பக்கா பேக்கேஜாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சிவா.

 

முதல் ஐந்து நிமிடத்தில் ஹீரோ அறிமுகம், அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கதையை ஓபன் செய்து, அதையடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ப்ளாஷ்பேக்கிற்குள் நுழைந்து, இன்டர்வெல் ப்ளாக்கில், ஒரு ட்விஸ்ட்டை வைத்து, பிற்பாதி முழுக்க அப்பா – மகள் உறவையும் அந்த ட்ராவலிங்கையும் கவிதை மாதிரி சொல்லியிருக்கிறார் சிவா.

 

நீண்ட இடைவெளிக்குப்பிறகு அஜித்துக்கு புது மாடுலேஷன், புது பாடி லாங்வேஜ் பிடித்துக் கொடுத்திருப்பது நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. நயன் காதலைச் சொல்லுவதும் அதற்கு அஜித் தரும் விளக்கமும் சூப்பர். எந்தக் காரணத்துக்காக கணவனும் மனைவியும் பிரிந்தார்களோ அதேபோல ஒருவிஷயத்தை வைத்துக்கொண்டு இருவரும் சேருவது மாதிரி கதை பண்ணியிருப்பது கதையின் வலுவான முடிச்சு. அதேபோல படம் நெடுக வசனங்கள் அப்ளாஸ் அள்ளுகின்றன.

 

ஒரு படம் ஜெயிப்பதற்கு என்னென்ன வேண்டுமோ அந்த இலக்கணங்களில் இருந்து இம்மியளவும் மாறாமல், அதேசமயம், ஆபாசமோ அருவருக்கத்தக்க இரட்டை அர்த்த வசனங்களோ இல்லாமல், அச்சுப்பிச்சு காமெடிகள், பில்டப்வசனங்கள் என எதையும் தொடாமல், படம் பண்ணியிருக்கிற சிவா அண்ட் டீமிற்கு கைகுலுக்கல்கள்.

 

காமெடி இருந்தால்தான் பிடிக்கும், காதல் இருந்தால்தான் பிடிக்கும், சண்டைக்காட்சிகள் இருந்தால்தான் பிடிக்கும், பேமிலி ஓரியண்டட் என்றால்தான் பிடிக்கும், மெசேஜ் சொன்னால்தான் பிடிக்கும் என்று ரசிகர்கள் பலவகை. அந்தப் பலவகை ரசிகர்களுக்கும் சேர்த்து, அஜித் கோட்டிங் கொடுத்து, ஜகஜகவென பக்கா கமர்ஷியல் பேமிலி சென்டிமென்ட், என்டர்டெய்ன்மென்ட் டிரீட் கொடுத்திருக்கிறார் சிவா.

 

'வீரம்', வேதாளத்துக்குப் பிறகு 'விவேகம்' பார்த்துவிட்டு 'இனிமேல் சிவாவுக்கு வாய்ப்பு தராதீங்க தல' என்று சமூக வலைதளங்களில், சிவாவை வறுத்தெடுத்த ரசிகர்கள், 'விஸ்வாசம்' பார்த்துவிட்டு, சிவாவைக் கொண்டாடுவார்கள் என்பது நிச்சயம். 

 

ஒன்றரை வருடத்துக்குப் பிறகு வந்திருக்கிற அஜித் படம். ரசிகர்களுக்கு இது தலப் பொங்கல்தான். தூக்குதுரையை ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவாகவே எல்லோரும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டாடுவார்கள்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x