Published : 14 Jan 2019 07:41 PM
Last Updated : 14 Jan 2019 07:41 PM
'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் மஹத். இதில் சிம்பு ரசிகராக நடித்து வருகிறார்.
'மங்காத்தா', 'ஜில்லா', 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' உள்ளிட்ட பல படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் மஹத். தனி நாயகனாக எந்தவொரு படத்திலுமே அவர் நடிக்கவில்லை.
'பிக் பாஸ் 2' நிகழ்ச்சியில் இடம்பெற்றதன் மூலம், அவருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சிம்புவுக்கு நெருங்கிய நண்பராக வலம் வரும் மஹத், தற்போது நாயகனாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
பிரபு ராம்.சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் மஹத்துக்கு நாயகியாக ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்துக்கு 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா' என்று தலைப்பிட்டுள்ளனர்.
இப்படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் பிரபு ராம், “மஹத் ஒரு வடசென்னை இளைஞராக, சிம்புவின் தீவிரமான ரசிகராக நடித்திருக்கிறார். சிம்புவின் ரசிகர்களைக் கவர வேண்டும் என்பதற்காக இந்தத் தலைப்பை வைக்கவில்லை. இப்படத்தில் மஹத் நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தலைப்பாக இது இருக்கும். இது ஒரு ரொமான்டிக் காமெடிப் படம்” என்று தெரிவித்துள்ளார்.
தரண் இசையமைத்துள்ள இப்படத்துக்கு என்னியன் ஜெ ஹாரீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஃபாவின்ஸ் பால் மற்றும் ஆர்.டி. மதன்குமார் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT