Published : 17 Jan 2019 08:29 PM
Last Updated : 17 Jan 2019 08:29 PM
அஜித்திடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன என்று தயாரிப்பாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விஸ்வாசம்'. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, அமோக வசூல் செய்து வருகிறது 'விஸ்வாசம்'.
படப்பிடிப்பு தளத்தில் அஜித் கொடுக்கும் மரியாதையை மிகவும் நெகிழ்ச்சியுடன் பேட்டியொன்றில் வெளிப்படுத்தியுள்ளார் 'விஸ்வாசம்' தயாரிப்பாளர் தியாகராஜன். அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
விவேகத்துக்கு பிறகு லேசான தயக்கம் இருந்தது. நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு 'விவேகம்' போகவில்லை. ஆனால் அஜித் விடாப்பிடியாக இந்த கூட்டணி கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு அவரே அழைத்து கூறினார்.
அதன்பிறகு இந்த படத்தின் ஸ்கிரிப்டை சிவா எங்களுக்கு சொன்னார். அவர் சொல்லும்போதே சில இடங்களில் எங்களுக்கு கண்ணீர் வந்தது. அப்போதே அவருக்கு கை கொடுத்து சொன்னேன். இந்த படம் எனக்கொரு 'மூன்றாம் பிறை', 'கிழக்கு வாசல்', 'எம்டன் மகன்' மாதிரி படமாக அமையும் என்று சொன்னேன். அதைப் போலவே அமைந்து விட்டது.
ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின் போதும் அஜித் “இந்த படத்தில் எல்லா விஷயமுமே நல்லவையாக அமைகிறது” என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ஆரம்பம் முதலே அவருக்கு இந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்து கொண்டே இருந்தது.
படம் ரிலீஸான மறுநாள் அஜித் சாரை அழைத்தேன் ”நாம் எதிர்பார்த்தது போன்றே படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். உங்களுடைய கடின உழைப்பினால்தான் இந்த படம் வெற்றி பெற்றுள்ளது" என்று கூறினேன்.
வேலை என்று வந்துவிட்டால் அஜித் நேரம், காலம் பார்க்கமாட்டார். எவ்வளவு நேரம் ஆனாலும் இருந்து முடித்துவிட்டுத்தான் செல்வார். ரஜினி சாருடன் 6 படம் வேலை செய்திருக்கிறேன். அவரும் இதே போலத்தான். அடுத்தவருக்கு மரியாதை கொடுக்கும் விஷயத்தில் மற்றவர்கள் அஜித்திடம் கற்றுக் கொள்ள வேண்டும். லைட் மேன் முதல் ஃபைட்டர்கள் வரை அனைவருக்கும் மரியாதை கொடுப்பார்.
இவ்வாறு தயாரிப்பாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT