Published : 31 Jan 2019 09:15 AM
Last Updated : 31 Jan 2019 09:15 AM
‘பெண்களை மையமாக வைத்து ஒரு ஆண் இயக்குநர் படம் எடுக்கும்போது அது எல்லா பெண்களுக்குமான படமாக வருவதில்லை. சரி… அதையே, ஒரு பெண் இயக்குநர் எடுக்கும்போது அது பெண்ணியம் சார்ந்தோ அல்லது ஆண்களை குறை சொல்லும் விதமாகவோ அமைகிறது. இங்கே 80 சதவீதப் படங்களில் காட்டும் வாழ்க்கையை பெண்கள் அனுபவிப்பது இல்லை. ‘அப்படி என்னதான் அவர்களின் வாழ்க்கை?’ இந்தக் கேள்வி உருவாக்கும் புள்ளியில் இருந்து யோசித்தபோது, முற்றிலும் ஒரு ஜாலியான அனுபவமாக இந்த ‘90 எம்.எல்’ (90 ML) திரைப்படம் உருவானது!’’ என்கிறார் இயக்குநர் அனிதா உதீப். தொடர்ந்து அவரது பட அனுபவங்கள் குறித்து நம்மிடம் பேசியதாவது:
நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது ஒரு பெண் தான் நினைத்த மாதிரி வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அறிவுறுத்துவதுபோல இத்திரைப்படம் இருக்குமோ?
இங்கே ஒரு ஆண் நினைப்பதுபோல வாழ்க்கையை வாழ முடியும். அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவும் செய்றாங்க. ஆனால், பெண் அப்படி வளர்வதில்லை. ஒரு குறிப்பிட்ட கட்டமைப்புக்குள் பெண்கள் வளர்வதால் பல விஷயங்களை வெளியே அவர்களும் சொல்வதில்லை. அந்த மாதிரி விஷயங்களை உடைத்து அவர்கள் நிஜ வாழ்க்கையில் என்ன நினைக்கிறாங்க? எப்படி வாழணும்னு ஆசைப்படுறாங்க? அவங்களோட ஃ ப்ரெண்ட்ஷிப் எப்படி இருக்கணும்? காதல், திருமண வாழ்க்கை உள்ளிட்ட எதிர்பார்ப்பு இதையெல்லாம் கருத்தாக இல்லாமல் வெளிப்படையாக சொல்கிற களம்தான் இந்த ‘90 எம்.எல்’.
ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ பட பாணியில் இது பெண் கதாபாத்திரங்களைக் கொண்ட படமா?
அது வேறு களம். அதிலும் அந்த இளைஞர்களுக்கு ஒரு லட்சியம் இருக்கும். இதில் அந்த மாதிரி லட்சியமோ அல்லது சாதனை செய்யணும் என்கிற எண்ணமோ இல்லை. ஆங்கிலத்தில் ‘இன்டர்னெல் ஜேர்னி’னு சொல்வோம். அந்த மாதிரி ஐந்து பெண்கள் தங்களோட உள்ளோட்டமான விருப்பத்தை ஒரு வாழ்க்கையாக வாழணும்னு நினைப்பாங்க. அந்த பகிர்வுதான் இது. சிலருக்கு இது பிடிக்கும். சிலருக்கு பிடிக்காமலும் போகலாம். ஆனால் இதுதான் நிஜம்.
இதில் நடிகை ஓவியாவின் பங்களிப்பு என்ன?
ப்யூட்டி பார்லரில் வேலை பார்க்கும் துணிச்சலான ஒரு பெண்ணாக வருகிறார். அதுக்காக எல்லாவற்றுக்கும் சண்டைபோடும் நபர் இல்லை. ஒரு மிடில் கிளாஸ் அபார்ட்மென்ட் வீட்டில் வசிக்கும் 4 பெண்களை அவர் சந்திக்கிறார். தினம் தினம் தங்களுடைய எண்ணங்களை அந்த வீட்டின் மொட்டை மாடியில் நின்று ஒவ்வொருவரும் பகிர்கிறார்கள். படம் முழுக்க காமெடி, துணிச்சல், சில இடங்களில் இரட்டை அர்த்த வசனங்கள்கூட இருக்கும். எல்லோருக்குமே குடும்பப் பின்னணியும் உண்டு. இந்த சமூகத்தை அவங்களோட வாழ்க்கை வேறொரு கோணத்தில் பார்க்க வைக்கும்.
இந்தக் களத்துக்கு ஏன் ‘90 எம்.எல்’ என்று பெயர் வைத்தீர்கள்?
மது அருந்தினால் உள்ளே இருப்பதை வெளியே உளறிடுவோம்னு சொல்வோம். அந்த மாதிரி ஒரு கான்சப்ட்தான் இந்தப் படம். அதை படம் பார்க்கும்போதுதான் உணர முடியும்.
படத்துக்கு சிம்பு இசையமைத்திருக்கிறார். திருப்தியாக வந்திருக்கிறதா?
சிம்பு என்னோட நண்பர். எனது ‘குளிர் 100 டிகிரி’ படத்துல ‘மனசெல்லாம்’னு ஒரு பாடலை ஏற்கெனவே அவர் உருவாக்கிக்கொடுத்தார். இப்போ இப்படத்தை முழுவதும் பார்த்துவிட்டு வித்தியாசமான கான்சப்ட். நிச்சயம் பேசப்படும்னு சொல்லிட்டு இசை வேலைகளை செய்ய முன்வந்தார். 4 பாடல்கள். படத்தில் அவரது பின்னணி இசை ரொம்பவே ஈர்க்கும்.
அனிதா உதீப் எப்படி ‘அழகிய அசுரா’ ஆனாங்க?
‘விசில்’ படத்துல வர்ற ‘அழகிய அசுரா’ பாடலை பாடியது நான்தான். முதலில் என்னோட சினிமா கேரியர் பின்னணி பாடகியாகத்தான் தொடங்கியது. அப்படியே சினிமா கிரியேட்டராக வளர்ந்தாச்சு. யாரிடமும் உதவியாளராக இருந்ததில்லை. கதை எழுதுவது பிடித்த வேலைன்னு வந்துட்டேன். இனி பாடகி, இசையமைப்பாளர், இயக்குநர்னு பல விதங்களில் கவனம் செலுத்தலாம்னு இருக்கேன். அதுக்காக ‘அழகிய அசுரா’ ஒரு அடையாளமாக இருக்கும்னு தோணுச்சு. அதான்.
படங்கள்: கோமளம் ரஞ்சித்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT