Published : 24 Sep 2014 11:07 AM
Last Updated : 24 Sep 2014 11:07 AM
கவிஞர், நாவலாசிரியர், திரைப்படப் பாடலாசிரியர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவர் கபிலன்வைரமுத்து. சமீபத்தில் ‘மெய்நிகரி’ என்ற நாவலை வெளியிட்டிருக்கிறார். தனியார் தொலைக்காட்சியில் உருவாகும் ஒரு ரியாலிட்டி ஷோவை மையமாகக் கொண்டு வெளிவந்திருக்கும் முதல் தமிழ் நாவல் இதுவே. நாவல் வெளியிடுவதற்கு முன் சமூக வலைதளங்கள் மூலமாக வாசகர்களுக்கு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி புதுமை செய்திருக்கிறார். ‘மெய்நிகரி’ குறித்தும் திரைத்துறை குறித்தும் அவருடன் ஒரு நேர்காணல்.
‘மெய்நிகரி’ என்றால் என்ன?
இந்தக் கதையமைப்பில் வரும் தொலைக்காட்சி அலுவலகத்தை ‘மெய் நிகரி’ என்று குறிக்கிறேன். மெய்க்கு நிகரான பிம்பங்களை உற்பத்தி செய்யும் தளம் என்பது பொருள்.
உங்கள் முதல் நாவல் ‘பூமரேங் பூமி’ ஆஸ்திரேலியா பழங்குடி மக்களை மீட்கும் ஒரு தமிழனைப் பற்றி, இரண்டாவது ‘உயிர்ச்சொல்’ - பிரசவத்துக்கு பின் ஏற்படும் பெண்ணின் மன அழுத்தம் பற்றி, ‘மெய்நிகரி’ ஒரு தொலைக்காட்சி அலுவலகத்தின் ரியாலிட்டி ஷோ பற்றி. இந்த கதைக் களங்களை எங்கு பிடிக்கிறீர்கள்?
என் வாழ்க்கையில் இருந்து. ஆஸ்தி ரேலியாவில் முதுகலை படித்துக் கொண்டிருந்தபோது எழுதப்பட்டது ‘பூமரேங் பூமி’. ‘உயிர்ச்சொல்’ என் நண்பரின் கதை. கடந்த மூன்று வருடங்களாக நான் ஈடுபட்டிருக்கும் தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சி தயாரிப்பே ‘மெய்நிகரி’யின் களம். அனுபவ அடிப்படை இல்லாமல் ஒரு நாவலை எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆக்கபூர்வமான அனுபவங்களை தொடர்ந்து எழுத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
‘மெய்நிகரி’யில் நீங்கள் சொல்ல வருவது?
இந்த நாவலைக் காட்சி ஊடகம் பற்றிய ஒரு கதை விவாதமாக பார்க்கிறேன். வெவ்வேறு பின்னணியில் இருந்து வரும் ஐந்து இளைஞர்கள் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியைத் தயாரிக்கும்போது என்னென்ன இன்னல்களை சந்திக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முயற்சிக்கிறது நாவல்.
சமீபத்தில் நீங்கள் எழுதிய பாடல்கள்?
கே.வி ஆனந்த் அவர்களின் ‘அனேகன்’ படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு பாடல் எழுதியிருக் கிறேன். மனதுக்கு இதமான பாடலாக அது அமைந்திருக்கிறது. ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தில் அதன் இயக்குநர் சரணை ஆச்சரியத்துக்குள்ளாக்கிய ஒரு பாடலை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆச்சரியத்துக்கான காரணத்தைப் பாடல் வெளிவரும்போது நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.
அண்ணன் மதன்கார்க்கிக்கு ‘எந்திரன்’ என்ற சிவப்பு கம்பள தொடக்கம் கிடைத்தது போல உங்களுக்கு கிடைக்கவில்லை. எந்த பின்புலமும் இல்லாத ஒரு பாடலாசிரியரின் சிரமங்களோடு நீங்கள் வளர்ந்துகொண்டிருப்பதாக தெரிகிறதே?
எந்த பின்புலமும் இல்லை என்பதை ஏற்க முடியாது. எனது குடும்ப உறுப் பினர்கள் தரும் உற்சாகம் பெரிது. ஆனால் சினிமாவில் நான் இயங்கத் தொடங்கியிருக்கும், கடந்த ஒரு சில ஆண்டுகளில் விடாது தொடரும் தடை களையும் எதிர்பாராத அவமானங்களை யும் சந்தித்திருப்பது உண்மைதான். வலி உண்டுதான். ஆனால் வருத்த மில்லை. வருத்தப்படாததற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, ஒரு பயணத்தில் எந்த அளவுக்கு தடைகள் வருகின் றனவோ அந்த அளவுக்கு பாதை வலிமையாகிறது என்று எண்ணு கிறேன். மற்றொரு காரணம், நான் பாடலாசிரியராக வேண்டும் என்ற நோக் கத்தோடு சினிமாவுக்கு வரவில்லை. என் எழுத்தை சினிமாவிலும் பதிவு செய்வதே நோக்கம். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
“வெவசாய பூமியில நெசமான சிரிப் பிருக்கு சிரிப்ப விக்க மனசு வல்ல கலப்ப வாசம் காசுக்கு இல்ல” - இது ‘வெண் ணிலா வீடு’ படத்தில் உங்கள் பாடல். நீங்கள் நகர இளைஞர் - உங்களுக்குக் கலப்ப வாசம் எப்படி தெரியும்?
தெரியாதுதான். தன் விளைநிலத்தை மிகவும் நேசிக்கிற ஒருவன், அந்த நிலத்தை விற்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகிறான். அதுதான் இயக்கு நர் வெற்றிமகாலிங்கம் சொன்ன பாடல் சூழல். என் தாத்தா ராமசாமி அவர்கள் பழுத்த விவசாயி. விடுமுறை நாட்களில் அண்ணனும் நானும் வடுகபட்டிக்கு போகும்போதெல்லாம் அவர் எங்களை அமர வைத்து விவசாய கலாச்சாரத்தின் உளவியலை உணர்த்த முயற்சி செய் வார். புரியாமல் இருந்தாலும் நாங்கள் தலையாட்டுவோம். அவர் போட்ட விதை தான் இந்த வரிகளாக வளர்ந்திருக் கின்றன என்று நினைக்கிறேன்.
அப்பாவும் அண்ணனும் உங்களுக்கு போட்டியா?
சினிமா பாடல்களைப் பொறுத்த வரைக்கும் அப்பா பிஎச்.டி, அண்ணன் இஞ்ஜினீயர். நான் நுழைவுத்தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறேன்.
சமீபத்தில் நீங்கள் மிகவும் ரசித்த பாடல்?
‘குக்கூ’ படத்தில் அனைத்து பாடல்களும். கவிஞர் யுகபாரதி அவர்களை செல்பேசியில் அழைத்து உணர்ச்சிவசப்பட்டு பேசினேன்.
திரையுலகம் எழுத்துலகம் இரண்டிலும் இயங்கிக்கொண்டிருக்கிறீர்கள் ஏதாவது ஒன்றில் ஈடுபட்டால் போதும் என்று நினைத்ததுண்டா?
“என்னைக்காவது ஒருநாள் நீயும் சினிமாக்கு போயிடுவ அன்னிக்கும் புத்தகம் போடறத நிறுத்திடாத உன் கற்பனைக்கு அதுதான் முதல் அடை யாளம்” - பதினைந்து ஆண்டுகளுக்கு முன் என் முதல் புத்தகத்தை வெளியிட்ட தருணத்தில் எழுத்தாளர் சாவி அவர்கள் என்னிடம் சொன்னது. அவருடைய வார்த்தைகளே இதற்கு பதில். அது மட்டுமின்றி எழுத்துலகுக்கும் திரையுலகுக்கும் இடையே இருக்கும் இடைவெளி குறைய வேண்டும் என்று விரும்புகிறேன். அது நவீன தமிழ் சினிமாவுக்கு அழகான உள்ளடக்கங் களைத் தருமென நம்புகிறேன்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது இளைஞர் இயக்கம் நடத்தி பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொண்டீர்கள்? அந்த இயக்கம் இன்றும் செயல்படுகிறதா?
கல்லூரியில் செயல்பட்ட அளவுக்கு ஒருங்கிணைந்து செயல்படவில்லை. ஆனால் அந்த இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இன்று தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். தொடர்பில் இருக்கிறோம். அடிக்கடி சந்திக்கிறோம். மேலாண்மை பள்ளிகள் இருப்பது மாதிரி என்றாவது மிகப் பெரிய அளவில் அரசியல் பள்ளிகள் (பொலிடிகல் ஸ்கூல்) தொடங்கவேண்டும் என்பது எங்கள் கனவு. எதிர்காலத்தில் இந்தக் கனவை நிறைவேற்ற முயற்சி செய்வோம். தற்போது அது கலையாமல் பாதுகாக்க முயற்சி செய்கிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT