Published : 23 Jan 2019 05:16 PM
Last Updated : 23 Jan 2019 05:16 PM
'குக்கூ', 'ஜோக்கர்' ஆகிய படங்களைத் தொடர்ந்து, 'ஜிப்ஸி' என்ற படத்தை இயக்கியுள்ளார் ராஜூமுருகன். ஜீவா, நடாஷா சிங் ஆகியோருடன் குதிரை ஒன்று முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
அம்பேத்குமார் தயாரிப்பில் ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள ’ஜிப்ஸி’ படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் ராஜூமுருகன் பேசியதாவது:
முதலில், இப்படியொரு படம் எடுப்பதற்கு முன் வந்து, எல்லா உதவிகளையும் செய்துகொடுத்த தயாரிப்பாளர் அம்பேத்குமாரைத்தான் பாராட்டவேண்டும். பயணம் குறித்த படம் இது. நீண்ட நெடிய பயணங்கள் கொண்ட ’ஜிப்ஸி’ படத்துக்கு, கொஞ்சம் அதிகம் செலவு செய்யவேண்டியிருந்தது. அவை அனைத்தையும் செய்து கொடுத்தார் அம்பேத்குமார். இவரை எனக்கு அறிமுகப்படுத்திய யுகபாரதிக்கு நன்றி.
குக்கூ, ஜோக்கர் படங்களை அடுத்து இந்தப் படம் வணிக ரீதியிலும் பிரமாண்டத்திலும் அடுத்தக் கட்டத்துக்கு என்னை நகர்த்தியிருக்கிறது என்றே சொல்லவேண்டும். அதற்கு நடிகர் ஜீவாதான் காரணம். குக்கு போல காதலும் ஜோக்கர் போல அரசியலும் மட்டுமே தனித்தனியே பேசாமல், ஒரு கமர்ஷியல் லவ் சப்ஜெக்ட் படமாகவும் மனித வாழ்க்கையைப் பதிவு செய்யும் படமாகவும் மனித வாழ்க்கைக்குள் இருக்கிற அரசியலைச் சொல்லும் படமாகவும் ஜிப்ஸி இருக்கும். வாழ்க்கை வேறு, அரசியல் வேறு அல்ல என்பதை இந்தப் படம் பிரதிபலிக்கும்.
இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பங்கு மிக முக்கியமானது. இது காதலும் இசையும் கலந்த படமாகவும் வந்திருக்கிறது. இதுவொரு இசைப்படம். ஒரு நாடோடி இசை இந்தப் படத்துக்குத் தேவைப்பட்டது. அதை சந்தோஷ்நாராயணன் மிகச்சிறந்த முறையில் செய்து கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் உள்ள ஒன்பது பாடல்களும் எல்லா தரப்பு ரசிகர்களாலும் முணுமுணுக்கப்படும்.
ஒரு கமர்ஷியல் பேக்கேஜாக வந்திருக்கும் ஜிப்ஸி படம், வணிக ரீதியாக பெரிய வெற்றியை அடையவேண்டும். அது தயாரிப்பாளருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம். நிச்சயம் கொடுக்கும்.
இவ்வாறு ராஜூ முருகன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT