Published : 17 Jan 2019 11:16 AM
Last Updated : 17 Jan 2019 11:16 AM
கமலை டேய் கமல்னு கூப்பிடலாமா? கமல் சார்னு கூப்பிடணுமான்னு கொஞ்சம் தயங்கி ஒதுங்கி நின்னேன் என்று இயக்குநரும் நடிகருமான சந்தானபாரதி மனம் திறந்து தெரிவித்தார்.
கமலின் நடிப்பில் சந்தானபாரதி இயக்கிய 'மகாநதி' திரைப்படம் வெளியாகி 25 வருடங்களாகிவிட்டன. இதையொட்டி நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதி, தனியார் இணையதள சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே, சின்ன வயசிலிருந்தே கமலும் நானும் நண்பர்கள். அவர் ஹிண்டு ஹைஸ்கூல்ல படிச்சிட்டு பாதியிலேயே படிப்பை நிறுத்தியிருந்தார். நான் மயிலாப்பூர் பிஎஸ் ஸ்கூல்ல எஸ்.எஸ்.எல்.சி ஃபெயில். அப்போ மியூஸிக் அகாடமிக்குப் பக்கத்தில் மணிசித்ரா காலேஜ்னு இருந்துச்சு. அதுல சேர்ந்தோம். அதுல கமல் ஆந்திரா மெட்ரிக் படிச்சார். நான் எஸ்.எஸ்.எல்.சி. கண்டினியூ பண்ணினேன்.
தினமும் ரெண்டு பேரும் சேர்ந்துதான் போவோம். மதியானம்தான் க்ளாஸ். நான் வீட்லேருந்து கிளம்பி நேரா கமல் வீட்டுக்குப் போயிருவேன். அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து க்ளாஸுக்குப் போவோம்.
அதுக்குப் பிறகு, நான் பியுசி, காலேஜ்னு போயிட்டேன். அவர் சினிமாவுல டான்ஸ் அசிஸ்டென்ட், டான்ஸ் மாஸ்டர்னு இருந்தார். நடுவுல சந்திப்போம். சாம்கோ ஹோட்டல் போய் சமோசா சாப்பிட்டுட்டு, டீ குடிச்சிட்டு பேசிட்டிருப்போம்.
அதுக்குப் பிறகு 'இளமை ஊஞ்சலாடுகிறது' படத்துல ஸ்ரீதர் சார்கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்தேன். அப்ப ரெண்டுபேரும் மீண்டும் சந்திச்சுக்கிட்டோம். ’என்னய்யா, கமலும் நீயும் ஃப்ரெண்ட்ஸாமே?’ன்னு ஸ்ரீதர் சார் கூட கேட்டார். ஆமாம் சார்னு சொன்னேன்.
முதல் நாள் விஜிபிலதான் ஷூட்டிங். ஒரேநாள் உனை நான் பாட்டு எடுத்தோம். கமல்கிட்ட சீன், பாட்டு வரியெல்லாம் சொல்லிட்டு விலகி விலகிப் போய் நின்னுக்கிட்டேன். ஏன்னா, அப்போ கமல் பெரிய ஹீரோவாகியிருந்தார்.
எனக்கு குழப்பம். தயக்கம். வழக்கம் போல் டேய் கமல், என்னடா கமல்னு சொல்லிக் கூப்பிடுறதா. இல்லைன்னா, இப்போ ஹீரோவாயிட்டதால, கமல் சார்னு சொல்றதா? புரியாம தள்ளித்தள்ளி நின்னுக்கிட்டிருந்தேன்.
லஞ்ச் பிரேக் வந்துச்சு. யூனிட் ஆட்களோட நான் சாப்பிடப்போனேன். அப்போ, பின்னாடிலேருந்து டேய்…னு ஒரு குரல். திரும்பிப் பார்த்தா, கமல். ‘என்ன, நீ பாட்டுக்கு என்னைத் தெரியாதவனைப் போல விலகி விலகிப் போய் நிக்கிறே’னு கேட்டார். அந்த இறுக்கத்தையும் தயக்கத்தையும் நண்பன் கமல்தான் உடைச்சாரு''.
இவ்வாறு சந்தானபாரதி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT