Last Updated : 31 Jan, 2019 12:41 PM

 

Published : 31 Jan 2019 12:41 PM
Last Updated : 31 Jan 2019 12:41 PM

ஓஹோ புரொடக்‌ஷன்ஸ் செல்லப்பாவை மறக்க முடியுமா? - நாகேஷ் நினைவு நாள் இன்று!

பேருக்கேத்த மாதிரியே இருப்பாருப்பா அவரு என்று ஒருவார்த்தைக்குச் சொல்வார்கள். ஆனால், அவருடைய இயற்பெயருக்குத் தகுந்தது போல், அவரின் உடல்வாகு இல்லை. சொல்லப்போனால், அதற்கு நேர்மாறாக இருந்தது. ஒல்லிக்குச்சானாக இருந்த அவரின் இயற்பெயர் குண்டுராவ். இன்னொரு பெயரைச் சொன்னால்தான் நமக்கெல்லாம் தெரியும். அது... நாகேஷ். ஆனால், நடிப்பில் மகாகனம் பொருந்தியவர்!

கன்னடம் பேசும் நாகேஷ், ஈரோடு அருகில் உள்ள தாராபுரத்தில் வசித்து வந்தார். பின்னாளில், ரயில்வேயில் வேலை கிடைத்து சென்னையில் இருந்தார். ஆனாலும் அவருக்கு நாடகம் போடுவதிலும் நடிப்பதிலும்தான் மிகுந்த ஈடுபாடு.

இந்நிலையில், ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்து சினிமாவில் பாட்டெழுத வாய்ப்பு தேடி வந்தார். அவரையும் தன்னுடைய அறையில் சேர்த்துக்கொண்டார். பிறகு, நட்பு பலப்பட்டது. அந்த ஸ்ரீரங்கத்துக்காரர்தான் கவிஞர் வாலி.

பசியோ ஃபுல்மீல்ஸ் சாப்பாடோ... இருவரும் பகிர்ந்து வாழ்ந்தார்கள். வாய்ப்பு தேடினார்கள். தாமரைக்குளம் படத்தில் நடிக்க சின்னதான வாய்ப்பு கிடைத்தது நாகேஷூக்கு. 90 ரூபாய் சம்பளம்.

அவ்வளவுதான். தனது ரயில்வே வேலையை விட்டார் நாகேஷ். முழு நடிகனாவது என இன்னும் தீவிரத் தேடுதலில் இறங்கினார். கொஞ்சம்கொஞ்சமாக வாய்ப்புகளும் அதிக காட்சிகளும் கிடைத்தன.

எப்படியோ... இயக்குநர் கே.பாலசந்தர் கண்ணிலும் மனதிலும் பட்டார் நாகேஷ். தன் கதை வசனத்தில் உருவான சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ்தான், சர்வர் சுந்தரம். பாலசந்தர் முதன்முதலில் இயக்கிய நீர்க்குமிழி படத்தில் நாகேஷ்தான் நாயகன்.

‘பாலசந்தர் கேமிரா ப்லிம் இல்லாமல் கூட படமெடுப்பார். ஆனால் நாகேஷ் இல்லாமல் படமெடுக்கமாட்டார்’ என்று விளையாட்டாக கிண்டல் செய்வார்கள் திரையுலகில்! அந்த அளவுக்கு, தொடர்ந்து பாலசந்தர் படங்களில் நாகேஷ், ஏதேனும் ஒரு கதாபாத்திரம் தாங்கி வந்து அசத்திவிடுவார்.

பாலசந்தரின் நவக்கிரகம், எதிர்நீச்சல், அனுபவி ராஜா அனுபவி, பூவா தலையா, பாமா விஜயம் முதலான பல படங்களில் நாகேஷ் முதல் ஹீரோவாகவும் 2-ம் ஹீரோவாகவும் நடித்திருப்பார்.

அதுமட்டுமா? எம்ஜிஆரோ சிவாஜியோ, ஜெமினியோ ஜெய்சங்கரோ, யாராக இருந்தாலும் யார் படமாக இருந்தாலும், முதலில் நாகேஷ் கால்ஷீட்டை வாங்கிவிட்டுத்தான், அடுத்த வேலையில் இறங்குவார்கள்.

இந்தப் பக்கம் பாலசந்தரை பாலு பாலு என்றும் வாலியை ரங்கராஜா என்றும் உரிமையுடன் வாடா போடா சொல்லிக் கூப்பிட்டுப் பேசுகிறவர் நாகேஷ். அதேபோல், நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜி, நாகேஷின் ரசிகர்; வாடா போடா நண்பன். தொடர்ந்து தனது படங்களில் நாகேஷை இடம்பெறச் செய்துவிடுவார் பாலாஜி. 

தில்லானா மோகனாம்பாள் வைத்தி எனும் நெகட்டிவ் கேரக்டராகட்டும், திருவிளையாடல் தருமி கேரக்டராகட்டும் எதுவாக இருந்தாலும் பின்னிப்பெடலெடுத்துவிடுவார் நாகேஷ்.

அதேபோல் எம்ஜிஆருடன் நடிக்கும்போதும் சிவாஜியுடன் நடிக்கும் போதும் அட்டகாசமான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகியிருக்கும். ஜெய்சங்கர், முத்துராமன் என நடிக்கும்போது, இளமையும் குசும்பும் முழுக்கவே குடிகொண்டிருக்கும்.

‘பாலசந்தருக்குள் நாகேஷும் நாகேஷுக்குள் பாலசந்தரும் இருக்கிறார்கள்’ என்று பாலசந்தரின் உதவியாளர்கள் பலரும் சொல்லி வியப்பார்கள். ஒருகட்டத்தில், சின்ன இடைவெளி இருந்த வேளையில், நாகேஷ் எனும் மகா கலைஞனை வியந்து பார்த்துக்கொண்டிருக்கும் கமல், அழைத்து வாய்ப்பு அளித்தார். கேரக்டர் ரோல், காமெடி ரோல் என்று வலம் வந்த நாகேஷ், எண்பதுகளில், கமலின் மூலமாக வில்லனானார்.

அபூர்வ சகோதரர்கள் படத்தில் நான்கு வில்லன்கள். ஆனால் இவர்தான் மெயின் வில்லன். தொடர்ந்து வாய்ப்புகள் வரத்தொடங்கின. மைக்கேல் மதன காமராஜன் அவிநாசி கேரக்டரும் மகளிர் மட்டும் ‘பிணம்’ கேரக்டரும் ரொம்பவே பேசப்பட்டன. இன்றளவும் ரசித்து பிரமிக்கிறார்கள்.

அதேபோல், நம்மவர் படத்தின் புரொபஸர் கதாபாத்திரம், நாகேஷின் ஆகச்சிறந்த நடிப்புக்கு மெகா விருந்து தந்தது. வெளுத்து வாங்கியிருப்பார்.

குரலால், உடல் அசைவு எனப்படும் பாடி லாங்வேஜால், முகபாவனைகளால், சேஷ்டைகளால், உடலை ரப்பர் போல் வளைத்து நெளித்து ஆடுகிற ஆட்டத்தால்... என தனித்துவம் பெற்றவர் நாகேஷ்.

அதனால்தான்... மாடிப்படி மாதுவையும் ஓஹோ புரொடக்‌ஷன்ஸ் செல்லப்பாவையும் இன்னும் மறக்க முடியவில்லை நம்மால்! என்றுமே மறக்க முடியாதவர் நாகேஷ்.

இன்று 31.1.19 நாகேஷ் நினைவுநாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x