Last Updated : 16 Jan, 2019 02:25 PM

 

Published : 16 Jan 2019 02:25 PM
Last Updated : 16 Jan 2019 02:25 PM

நடிகர் திலகமும் பொங்கல் ரிலீஸ் படங்களும்!

ஓர் தீபாவளித் திருநாளில்தான் நடிகர் திலகத்தின் முதல் படமான 'பராசக்தி', ரிலீஸ் ஆனது. 1952-ம் ஆண்டு வெளியான கருணாநிதி எழுத்தில் உருவான 'பராசக்தி', மிகப்பெரிய வெற்றியை அடுத்து, அடுத்தடுத்து படங்கள் வரத் தொடங்கின.

இதன் பிறகு, பண்டிகை காலங்களிலும் முக்கிய விடுமுறை தினங்களிலும் சிவாஜி கணேசன் படங்கள் வெளியாகின. எம்ஜிஆர், சிவாஜி என இரண்டு பேரின் படங்களும் சக்கைப்போடு போட்ட காலம் அது.

1952-ம் அண்டு தீபாவளிக்கு பராசக்தி வந்தது அல்லவா. அதன் பிறகு 53ம் ஆண்டு சிவாஜிகணேசன் நடித்த பரதேசி என்றொரு படம், பொங்கலன்று வெளியானது. இதன் பிறகு 55ம் ஆண்டு ரிலீசான காவேரி படம், சிவாஜிக்கு பெயர் பெற்றுத் தந்தது.

பிறகு அடுத்த வருடமே, அதாவது 56ம் ஆண்டு நானே ராஜா என்றொரு படம் வந்தது. பெரிய அளவில் பேசப்படவும் இல்லை. வெற்றிப்படமாகவும் அமையவில்லை.

52ம் ஆண்டு தீபாவளிக்கு பராசக்தி ரிலீசானது. அந்தப் படம், ஐந்து வருடங்களுக்குப் பிறகு, 57ம் வருடம், தெலுங்கில் வெளியாகி சக்கைப்போடு போட்டது.

பிறகு 1960ம் ஆண்டு, பொங்கல் வெளியீடாக சிவாஜிகணேசனின் இரும்புத்திரை ரிலீசானது. ஜெமினி எஸ்.எஸ்.வாசன் தயாரித்து இயக்கிய  இந்தப் படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. முதலாளித்துவத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கும் தொழிலாளக் கதாபாத்திரத்தில் சிவாஜியின் நடிப்பை, அப்போது எல்லாப் பத்திரிகைகளும் பாராட்டி எழுதியிருந்தன.

இதன் பின்னர், 62ம் ஆண்டு வந்த பொங்கல் ரிலீஸ், சிவாஜியின் கேரியரில் மிக முக்கியமானதொரு படம் என்றே சொல்லவேண்டும். ஏவி.எம். புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, செளகார் ஜானகி நடித்த பார்த்தால் பசி தீரும் திரைப்படம், மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. வசூல் குவித்தது. இந்தப் படத்தை மறக்கமுடியாததற்கு இன்னொரு காரணமும் உண்டு. களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமான குட்டிப்பையன் கமலஹாசன், இந்தப் படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்ல... சிறுவன் டபுள் ஆக்ட் கொடுத்திருந்தார். ஆமாம்... கமல் இரட்டை வேடத்தில் நடித்த முதல் படம்... பார்த்தால் பசி தீரும்.

62ம் ஆண்டுக்குப் பிறகு 64ம் ஆண்டு சிவாஜிக்கு மறக்க முடியாத பொங்கல் கொண்டாட்டம். குறிப்பாக நடிகர்திலகத்தின் ரசிகர்கள், கொண்டாடி மகிழ்ந்தார்கள். இன்னமும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் படம்... கர்ணன். மிகப்பிரமாண்டமான பொருட்செலவில், பி.ஆர்.பந்துலு இயக்கிய இந்தப் படத்தில், சிவாஜியின் நடிப்பில் மிரண்டுபோனது தமிழ் உலகம். பாடல்கள் மொத்தமும் பிரமாதம். ஆனால் என்ன... வீரபாண்டிய கட்டபொம்மன் ரேஞ்சுக்கு ஓடும் என எதிர்பார்த்த படம், பெரிய அளவிலான வெற்றியைப் பெறவில்லை.

65ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான சிவாஜியின் பழநி திரைப்படம், வெற்றி பெற்றது. படத்தையும் படம் சொன்ன கருத்தையும் கண்டு நெகிழ்ந்தார்கள் ரசிகர்கள். எல்லாப் பாடல்களும் ஹிட்டடித்தன.

அதையடுத்து, 67ம் ஆண்டு, சிவாஜிக்கு மீண்டும் தித்திப்புப் பொங்கலாக அமைந்தது பொங்கல் ரிலீஸ். அந்தநாளில்தான் ஏபி.நாகராஜன் இயக்கத்தில் சிவாஜிகணேசன் நடித்த கந்தன் கருணை வெளியானது. வீரபாகுவாக சிவாஜி மிரட்டியிருப்பார். கந்தனாக நடித்த சிவகுமாரை விட வீரபாகுதான் ஜெயித்திருப்பார். மிகப்பெரிய வெற்றியானது, சிவாஜியின் அருளால் கிடைத்தது.

70ம் ஆண்டு, மீண்டும் ஒரு கலர்புல்லான வெற்றியைச் சுவைத்தார் சிவாஜி. ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில், ஈஸ்ட்மென்கலரில் வெளியான எங்க மாமா படத்தை எல்லோரும் கொண்டாடினார்கள். ஜெயலலிதாவின் நடிப்பும் கவனிக்கத்தக்க வகையில் இருக்கும். எம்.எஸ்.வியின் எல்லாப் பாடல்களும் தேன். சூப்பர்டூப்பர் ஹிட்டடித்தது எங்கமாமா.

ஆனால் 71ம் ஆண்டு அப்படியே உல்டாவானது. அந்த வருடம் பொங்கலுக்கு வந்த இருதுருவம்... படுதோல்வியைச் சந்தித்தது. சிவாஜியும் பத்மினியும் முத்துராமனும் நடித்திருப்பார்கள். தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப்பெண்ணே என்று பாட்டெல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் படம் போட்டு 40 நிமிடங்கள் கழித்துதான் சிவாஜியே வருவார். தவிர, கதையும் அமைப்பும் களமும் அந்நியமாகவே இருந்ததும் தோல்விக்குக் காரணம், அந்தக்கால சினிமா ரசிகர்கள் சொல்லுகிறார்கள்.

பிறகு, 71ல் இருந்து 76ம் ஆண்டு வரை, வரிசையாக சிவாஜி நடித்துக்கொண்டேதான் இருந்தார். படங்கள் வந்துகொண்டேதான் இருந்தன. வெற்றியும் தோல்வியும் மாறிமாறித்தான் அமைந்தன என்றாலும் இந்த வருடங்களில் பொங்கல் ரிலீஸ் மட்டும் ஏனோ அமையாமல் போனது. 77ம் ஆண்டுதான் சிவாஜியின் அவன் ஒரு சரித்திரம் வெளியானது. வணக்கம் பலமுறை சொன்னேன், அம்மானை, ஆயிரம் பொன்னை பூமியில் கண்டான் என பாடல்கள் எல்லாமே அமிர்தம். கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கிய படம், சிவாஜியின் நடிப்பு, மஞ்சுளா, காஞ்சனா என பலரின் யதார்த்த நடிப்பு என நன்றாகவே அமைந்திருந்தது. படமும் ஓரளவு வெற்றியைப் பெற்றது.

அதன் பிறகு அடுத்தடுத்த பொங்கல் ரிலீஸ் படங்களும் சரி, சிவாஜியின் படங்களும் சரி... அப்படியொன்றும் அமையவில்லை. 81ம் ஆண்டு வந்த மோகனப்புன்னகை, 83ம் ஆண்டு வெளியான உருவங்கள் மாறலாம் (கெளரவ வேடம்), 84ம் ஆண்டு வந்த திருப்பம் பாடல்கள் ஹிட்டாகி, வசூலும் ஓரளவு இருந்தன. திருப்பம் நல்ல வெற்றியைச் சுவைத்தது. 86ம் ஆண்டு வெளியான சாதனை படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் சினிமா டைரக்டராக சிவாஜியின் நடிப்பு பேசப்பட்டது.

87ம் ஆண்டு கார்த்திக்குடன் இணைந்து நடித்த ராஜமரியாதை, மரியாதையான வெற்றியைப் பெறவில்லை. 91ம் ஆண்டு வந்த ஞானப்பறவையும் அப்படித்தான்! 99ல் வந்த மன்னவரே சின்னவரே படமும் அவ்விதமே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x