Published : 23 Jan 2019 05:15 PM
Last Updated : 23 Jan 2019 05:15 PM
பணப் பிரச்சினைல கட்டிட்டிருந்த வீடு, பாதிலயே நின்னுச்சு. அதைத் தெரிஞ்சிக்கிட்ட எம்ஜிஆர், அஞ்சரை லட்ச ரூபாய் கொடுத்து உதவி பண்ணினார் என்று நடிகை லதா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்த நடிகை லதா, தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது:
கல்யாணம்லாம் ஆகி, ஒருகட்டத்துல சிங்கப்பூர்ல போய் செட்டிலாகிட்டேன். சென்னைல அம்மா இருந்தாங்க. 84ம் வருஷம், எம்ஜிஆர் உடம்பு முடியாம இருந்தப்ப வந்து பாத்தேன். ஜானகி அம்மாகிட்ட ரொம்ப நேரம் பேசிட்டிருந்தேன். அப்புறம், எம்ஜிஆர், ஏதாவது உதவி வேணுமா, கேளுன்னு சொன்னார். அதெல்லாம் ஒண்ணும் வேணாம். உங்க அன்பு ஒண்ணே போதும்னு சொன்னேன்.
அதுக்குப் பிறகு 86ம் வருஷம். எங்க அம்மாவுக்கு உடம்பு முடியலை. கேன்ஸர். அதனால சிங்கப்பூர்லேருந்து இங்கே சென்னைக்கு வந்துட்டேன். அப்போலோ ஆஸ்பத்திரில அம்மாவை அட்மிட், அங்கேயே இருந்து பாத்துக்கிட்டிருந்தேன்.
அப்ப ஒருநாள், ஆஸ்பத்திரியே பரபரப்பாகிருச்சு. சிஎம் வர்றாரு, சிஎம் வர்றாருன்னு எல்லாரும் இங்கேயும் அங்கேயும் ஓடிட்டிருந்தாங்க. எனக்கு கவலையாயிருச்சு. ஒருவேளை, எம்ஜிஆருக்கு உடம்பு முடியலியோனு யோசிச்சேன்.
அப்புறமா, நானும் அவரோட வருகைக்காக நின்னுக்கிட்டிருந்தேன். அவரைப் பாப்போம், அவர் உடம்புக்கு என்னன்னு கேப்போம்னு நின்னுக்கிட்டிருந்தேன். எம்ஜிஆர் வந்தார். ஆனா அவர் வந்த பிறகுதான் தெரிஞ்சிச்சு. எங்க அம்மாவை நலம் விசாரிக்கறதுக்குத்தான் அவர் வர்றாருன்னு!
எங்க அம்மாவோட சமையல்னா எம்ஜிஆருக்கு ரொம்பவே இஷ்டம். இதைப் பண்ணிக்கொடுங்க, அந்த மட்டன் வகையைப் பண்ணி அனுப்புங்கன்னு பலமுறை கேட்டிருக்கார். அம்மாவை வந்து பாத்தார். டாக்டர்கிட்ட பேசினார். ‘எவ்ளோ செலவானாலும் சரி, அமெரிக்காவுக்குப் போய் சிகிச்சை பண்றதா இருந்தாலும் சரி. பண்ணுங்க. எல்லா செலவும் நான் ஏத்துக்கறேன்னு சொன்னார். அதான் எம்ஜிஆர்.
மறுநாள். என்னைக் கூப்பிட்டுவிட்டார். ‘என்னவோ வீடு கட்டி பாதியிலேயே நிக்கிதாமே. என்னாச்சு? என்ன காரணம்னு கேட்டார். நான் சிங்கப்பூர்லயே இருந்ததால, எனக்கு எதுவும் தெரியல. அம்மாவும் என்ன ஏதுன்னு இதுவரை சொன்னதில்ல. அதனால, தெரியலன்னு சொன்னேன்.
ஆனா எம்ஜிஆர் தெரிஞ்சி வைச்சிருந்தார். வீடு கட்ற கன்ஸ்ட்ரக்ஷன்காரங்களையும் அப்போ வரச்சொல்லியிருந்தார். ‘பணம் இல்லாததால வீட்டு வேலை பாதியிலேயே நிக்கிதாம். இன்னும் அஞ்சரை லட்ச ரூபா இருந்தாத்தான் வீடு கட்டமுடியுமாம். கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டேன்’னு சொல்லிட்டு, அஞ்சரை லட்ச ரூபாயை அப்படியே எடுத்துக் கொடுத்தார்.’வீட்டு வேலையை ஆரம்பிங்க’ன்னு சொல்லி, அவங்ககிட்ட பணத்தைக் கொடுத்தார். இதை என் வாழ்நாள்ல மறக்கவே முடியாது.
‘உங்க அம்மா கையால எத்தனை தடவை சாப்பிட்டிருக்கேன். அவங்க கட்டின வீட்டு, இப்படி பாதில நிக்கக்கூடாது’ன்னு சொன்னார் எம்ஜிஆர்.
- சொல்லும்போதே நா தழுதழுக்கிறது நடிகை லதாவுக்கு!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT