Published : 30 Jan 2019 06:41 PM
Last Updated : 30 Jan 2019 06:41 PM
இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என் எஜமானர்கள் என்று 'பாண்டி முனி' படம் குறித்துப் பேசும்போது ஜாக்கி ஷெராப் குறிப்பிட்டார்
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'பாண்டி முனி'. இப்படத்தில் அகோரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜாக்கி ஷெராப். 'ஆரண்ய காண்டம்', 'மாயவன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து தமிழில் 'பாண்டி முனி' படத்தில் நடித்துள்ளார் ஜாக்கி ஷெராப்.
அகோரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறித்து ஜாக்கி ஷெராப் கூறியிருப்பதாவது:
''இயக்குநர் கஸ்தூரி ராஜா இக்கதையைச் சொன்னவுடன் இது எனக்குப் புதிதாக இருக்கும் என்று தான் ஓ.கே. சொன்னேன். இதுவொரு புதுமையான கதைக்களம். என் உருவத்தை மட்டுமல்ல, என் நடை உடை பாவனை எல்லாவற்றையுமே இது மாற்றும் படமாக இருக்கும். இயக்குநர் என்ன சொன்னாரோ, அதை அப்படியே உள்வாங்கி நடித்துள்ளேன்.
சிவபக்த அகோரியாக நடித்துள்ளேன். நல்லது செய்யும் முனீஸ்வரன் என்ற அகோரிக்கும், எல்லோரையும் அழிக்க நினைக்கும் பாண்டி என்கிற பேய்க்கும் நடக்கிற போராட்டம் தான் இப்படத்தின் கதை. அகோரி என்றால் ஆ...ஊ என்று கத்தி கலாட்டா செய்யும் அகோரி வேடமல்ல. அமைதியால் எதையும் வெல்ல முடியும் என்கிற சிவ பக்த அகோரி வேடம்.
நான் அடிக்கடி சென்னை வருவேன். 80-ம் வருட நடிகர் நடிகைகள் சந்திப்பு நடக்கும் போதெல்லாம் வருவேன். ஒவ்வொரு நடிகர் நடிகையும் அவரவர் வீட்டிலிருந்து இட்லி, சாம்பார், ரசம் என்று எடுத்து வந்து பரிமாறி அசத்தி விடுவார்கள். ரேவதி, ராதிகா எல்லாம் எனக்கு நல்ல நண்பர்கள்.
தற்போது நிறையப் பேர் என்னிடம் சில நடிகைகளின் பெயர்களைச் சொல்லி அவர் எப்படி நடனம் ஆடுகிறார் என்று கேட்கிறார்கள். அவர்கள் பேர் எல்லாம் எனக்கு தெரியாது. நான் நிறைய படங்களைப் பார்ப்பது கிடையாது. என்னைப் பொறுத்தவரை இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் தான் என் எஜமானர்கள். ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் என்னை உள்ளே கொண்டுவந்து அதற்கு சம்பளம், உடை ,சாப்பாடு கொடுப்பவர்களை என்றைக்கும் நான் மறக்க மாட்டேன்''.
இவ்வாறு ஜாக்கி ஷெராப் கூறினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT