Published : 08 Jan 2019 07:59 PM
Last Updated : 08 Jan 2019 07:59 PM
யூ-டியூப் வீடியோ தலைப்புகள் வைப்பதை 'கனா' படத்தின் வெற்றி விழாவில் சத்யராஜ் கிண்டல் செய்து பேசினார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமான படம் 'கனா'. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
டிசம்பர் 21-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் பொருட்செலவுக்கு வந்த வசூல் மிகப்பெரியது என்பதால், வெற்றி விழா கொண்டாடியது 'கனா' படக்குழு.
இவ்விழாவில் சத்யராஜ் பேசியதாவது:
அந்த காலத்தில் தொடர்ச்சியாக 100 நாட்கள் வெற்றி விழா கொண்டாடிக் கொண்டே இருந்தோம். 'பாலைவன ரோஜாக்கள்', 'ஜல்லிக்கட்டு', 'பிரம்மா', 'ரிக்ஷா மாமா', 'வால்டர் வெற்றிவேல்' என தொடர்ச்சியாக அனைத்துமே 100 நாட்கள் படங்கள் தான். ஆகையால், ஒரு கட்டத்தில் 100 நாட்கள் விழா என்றாலே சலித்துவிட்டது.
இப்போது இப்படி ஒரு விழாவை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவருமே படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து பேசினார்கள். அதிலும், இப்போது எல்லாம் யூ-டியூப்பில் தலைப்பு எல்லாம் பின்னுகிறார்கள். சாதாரண விஷயம் நாம் பெயரைக் கூடச் சொல்லியிருக்க மாட்டோம். பெயரைப் போட்டு மரண கலாய், செம மாஸ் என தலைப்பு வைத்துவிடுகிறார்கள்.
இப்போது கூலிங் க்ளாஸ் போட்டு தான் வெளியே வருகிறேன். ஏனென்றால் இடது கண்ணில் தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. அவ்வப்போது கண்ணாடியை கழட்டி கண்ணைத் துடைத்துக் கொள்வேன். 'கனா' இசை வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் "சத்யராஜ் சார் எங்கப்பா மாதிரி" என்று பேசும் போது, சத்தியமாக எனக்கு அழுகை வரவில்லை. அப்போது வழக்கமாக கண்ணிலிருந்து வரும் நீரைத் துடைத்தேன். அவ்வளவு தான். நானெல்லாம் அவ்வளவு சென்டிமெண்ட் கேரக்டர் இல்லங்க. அதை யூ-டியூப்பில் போட்டு ‘சத்யராஜ் கண் கலங்கினார்’ என்று போட்டுவிட்டார்கள்.
இங்கு சிவகார்த்திகேயன் நட்பை பற்றி பேசியே ஆக வேண்டும். உதவி செய்யணுமே என்றோ கைமாறு எதிர்பார்த்தோ அவர் செய்யவில்லை. அதில் அவருக்கு ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. சிவகார்த்திகேயன் ஒரு மிகப்பெரிய ஹீரோ. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு இந்த மாதிரி படத்தை எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், நாயகியை மையப்படுத்திய ஒரு படத்தை தயாரித்து படத்தின் முதுகெலும்பாக இருந்து இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறார். இந்தியில் அமீர்கான் தாரே ஜமீன் பார் படத்தின் மூலம் செய்த விஷயத்தை சிவா இங்கு செய்திருக்கிறார்.
'கனா' மாதிரியான வெற்றியடைந்தால் மட்டுமே சினிமா மீதான பார்வை, இம்மாதிரியான படங்கள் மீது திரும்பும். அதற்கு முதுகெலும்பாக சிவகார்த்திகேயன் இருந்துள்ளார். நாயகியை மையப்படுத்தி முன்பு நிறைய படங்கள் வந்தது. ஆனால், தொலைக்காட்சி தொடர்கள் வந்தவுடன் தான் நாயகியை மையப்படுத்தும் படங்கள் குறைந்தது. 'கனா' மாதிரியான படங்கள் வெற்றியடைந்தால் தான், மீண்டும் இம்மாதிரியான படங்கள் நிறைய வரும்.
இவ்வாறு சத்யராஜ் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT